உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற போட்டிகளில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் கோடிக்கணக்கில் பணமழை கொட்டுகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததாலும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடியது.
14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அண்மையில் வெளியிட்டார். இதன்படி 8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார். சென்னை அணிக்கான டுவிட்டர் பக்கத்தில், 'தல தரிசனம்' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், டோனி தனக்கான மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்தார். புதிய டிசைனுடன் இருக்கக்கூடிய ஜெர்சியை பார்த்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என டோனி மகிழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.













