சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன. 22 சென்டி மீட்டர் நீளம் உள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலச் சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் உள்ளன. சுறா மீனின் உடல் எலும்பு வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனது.
சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களின் கேள்திறனும் அதிகம்; நுண்ஒலிகளைக் கேட்கும் திறன் பெற்றவை. சுறாக்களுக்குக் குறைந்தது நான்கு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைந்து விழுந்தால், பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும்.
சுறாக்களில் சுமார் 440 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும். வேல் சுறா 15 மீட்டர் நீளம் வரை வளரும், ட்வாப் சுறாவின் நீளம் 5 அங்குலமே.
மலேசியாவில் பவளப் பாறைகளுக்கு இடையே ரீஎப் வகை சுறா மீன்கள் கூட்டமாகக் காணப்படும். கடந்த ஏப்ரல் மாதம் போர்னியோ தீவுக்கு அருகே முக்குளிப்பவர்கள், ரீஎப் வகை சுறா மீன் ஒன்று மர்மமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு படம் எடுத்தனர். அந்த சுறாவின் தலையில் புண் போன்ற அடையாளங்கள் இருந்தன. அந்தப் படம் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து, முக்குளிப்பாளர் குழுக்களும் பாதுகாப்புக் குழுக்களும் அப்பகுதியில் உள்ள சுறாக்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். பல சுறாக்களின் உடலில் அதே போன்ற அடையாளங்கள் இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.
இதுகுறித்து கடல்துறை உயிரியல் நிபுணர்கள் கூறுகையில், 'கடல் வெப்பம் அதிகரித்து இருப்பது, மீன்களுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். கடலில் ரசாயனங்கள் கலப்பதும் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து ஆய்வுகளை தொடங்கி உள்ளோம்' என்றனர்.