Editor's Choice

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகள் 'நீக்கம்' செய்யப்படுவதாக பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் , ஜோ பைடன் வெற்றி பெற்றார். டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனவரியில் புதிய அதிபர் தேர்வை உறுதி செய்வதற்காக வாஷிங்டனில் பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் வன்முறையை துாண்டும் வகையில், பேஸ்புக் சமூக வலைதளத்தில், டிரம்ப் பதிவிட்ட கருத்துகள் தான் காரணம் என, கூறப்பட்டது. டிரம்பின் கணக்கை சஸ்பெண்ட் செய்வது குறித்து மேற்பார்வை நிபுணர்கள் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. 'சஸ்பெண்ட்' செய்யட்டதை, நிபுணர்கள் ஏற்றனர். இதையடுத்து, டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2023-ம் ஆண்டு ஜனவரி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், பொது பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் டிரம்பின் பேஸ்புக் கணக்கை மீண்டும் அனுமதிப்பது என பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Editor's Choice

சர் ஐசக் நியூட்டன் எழுதிய கைப்பிரதிகள், லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த ஐசக் நியூட்டன், 'எந்த வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு' என்ற அறிவியல் கோட்பாட்டை உலகிற்கு அறிவித்தவர். கணிதம், வானவியல், அறிவியல் துறைகளில் பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர், 1687ம் ஆண்டு வெளியிட்ட, 'இயற்கை தத்துவத்தின் கணிதவியல் கோட்பாடுகள்' என்ற நுால், புவியீர்ப்பு விசையின் அடிப்படை பரிமாணத்தை உலகிற்கு உணர்த்தியது.

இந்நிலையில், ஐசக் நியூட்டனின் ஒன்றரை பக்க கைப்பிரதியை, லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம், அடுத்த மாதம் ஏலம்விட முடிவு செய்துள்ளது.

இது குறித்து கிறிஸ்டி நிறுவனத்தின் புத்தக பிரிவு தலைவர் தாமஸ் வென்னிங் கூறியதாவது:கடந்த, 1690ல், ஐசக் நியூட்டன், தன் கணிதவியல் கோட்பாடுகளை சீராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது நண்பரும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வான சாஸ்திர அறிஞருமான டேவிட் கிரிகோரி, கோட்பாடுகள் தொடர்பான சில கருத்துகளை தெரிவித்தார். இருவரும், ஒன்றரை பக்க காகிதத்தில், சில வரைபடங்களுடன், தங்கள் ஆய்வுகளை விளக்கியுள்ளனர்.

இந்த இரு மேதைகளின் அரிய கைப்பிரதி, அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. இது, 6 கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice

இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் கடந்த மாதம் தீ பரவியது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில், 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. கப்பலில் எத்தனால், 25 டன் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது. மேலும் கப்பலும் மூழ்கும் நிலைக்கு சென்றது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த நாட்களில் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
 
கொழும்பு துறைமுகத்திலிருந்து அதன் தற்போதைய நிலையில் மூழ்கினால் அது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் நிபுணர்கள் கப்பலை வெகுதூரம் வெளியே  கடலுக்கு இழுக்க முயன்று வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரையில் இருந்து  சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் மீன்பிடிக்க தடை அதிகாரிகள் மீண்டும் விதித்து உள்ளனர்.
 
இந்நிலையில் இலங்கையில் சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கப்பலில் மாலுமி உட்பட மூவரையும், இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
தொடர்ந்து, கப்பல் தீ விபத்தினால் அதிலிருந்து வெளியேறிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 நைட்ரிக் அமிலம் மற்றும் கப்பலில் உள்ள எண்ணெய் ஆகியவை மூழ்கினால் அது கடலின் முழு அடிப்பகுதியையும் அழித்துவிடும்" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கப்பலை அங்கிருந்து வெளியேற கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும்  அனுமதி மறுத்துவிட்டது. மற்ற இரு நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை கப்பலை அதன் கடலுக்குள் நுழைய அனுமதித்து உள்ளது.
Editor's Choice

கடந்த வாரம் திங்கட்கிழமை "தி எகானமிக் டைம்ஸ்" மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளிதழ்களில் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியானது. இந்தியாவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய விரும்புவதாக ஒரு நிறுவனத்தின் பெயரில் அந்த விளம்பரம் வெளியாகி இருந்தது.

500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால், இந்திய மதிப்பில் சுமார் 36 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு இந்தியாவில் அமெரிக்கா ஒட்டுமொத்தமாகச் செய்திருக்கும் முதலீட்டின் மதிப்பே 7 பில்லியன் டாலர்கள்தான்.

விளம்பரத்தில் வெளியான முதலீட்டின் மதிப்பு அமெரிக்காவின் மொத்த முதலீட்டின் மதிப்பைப் போல 71 மடங்கு.

அந்த நிறுவனத்தின் பெயர் Landomus Reality ventures inc. விளம்பரத்தில் குழுமத்தின் தலைவர் பிரதீப் குமார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பணம் மிக, மிக அதிகம். பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நாளிதழ்களில் விளம்பரம். இவை எல்லாம் அசாதாரணமாக தென்பட்டதால் இது தொடர்பான புலனாய்வில் தனியார் நிறுவனம் இறங்கியது.

நிறுவனத்தின் https://landomus.com என்ற இணையதளத்தை ஆய்வு செய்தது. அந்த இணையதளத்தில் இருப்பது ஒரேயொரு பக்கம்தான். நாளிதழ் விளம்பரத்தில் என்ன கூறப்பட்டிருந்ததோ அது அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பொதுவாக நிறுவனங்களின் இணையதளங்களில் "About Us" என்ற பகுதியில் நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் இடம்பெறுவது வழக்கம். எந்தெந்தப் பகுதிகளில் நிறுவனம் இயங்கி வருகிறது என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இந்த இணையதளத்தில் இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் பிரமாண்டக் கட்டடங்களைக் கொண்ட புகைப்படத்தை முகப்புப் பக்கத்தில் கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் அணி என்ற தலைப்புடன் 10 பேரின் புகைப்படங்களும் அவர்களின் பதவிகளும் உள்ளன. ஆனால் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பிரதீப் குமார் சத்தியபிரகாஷ் என்பவர் தலைவர் மற்றும் சிஇஓ, மம்தா என்பவர் இயக்குநர் இவர்கள் தவிர மேலும் 8 பேரின் படங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு முகவரி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி எண் எதுவும் தரப்படவில்லை.

இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், நிறுவனத்தின் தொலைநோக்கு போன்ற விவரங்கள் இணையத்தில் இடம்பெறவில்லை. மேலும் அலுவலகம் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் சென்று பார்த்தபோது அதற்கான அடையாளம் எதுவும் இல்லை. 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதாகக் கூறிய லேண்டாமஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை.

நாளிதழில் வெளியான விளம்பரம் குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நிறுவனம் தொடர்பாக மேலும் ஆய்வு செய்தபோது, அந்த இணையதளம் கர்நாடகாவில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யுனைட்டட் லேண்ட் பேங்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

அமெரிக்காவிலும், பெங்களூரிலும் லேண்டமாஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

மேகி ஆரோக்கியமான உணவு கிடையாது என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் மேகி தயாரிக்கும் நிறுவனமே இதனை ஒப்புக்கொண்டுள்து. நெஸ்லே (Nestle), தனது உணவு தயாரிப்பு 'ஆரோக்கியமாக இல்லை' என்று ஒப்புக்கொள்கிறது, அதோடு, ஐஸ்கிரீமும் சரியில்லை என்று ஒப்புக் கொள்கிறது!!!

இந்திய சந்தையில் மிகவும் அதிகம் விற்பனையாகும் உணவுப் பொருளான மேகி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால், இந்த முறை மூன்றாவது நபர் யாரும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. நெஸ்லே நிறுவனமே தெரிவித்துள்ள செய்தி இது.

தனது 60 சதவீத உணவுப் பொருட்கள், மாகி, பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல என்பதை நெஸ்லே ஒப்புக் கொண்டுள்ளது. அவற்றை சாப்பிடுவது அல்லது குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுகிறது.

தனது தயாரிப்புகளில் ஊட்டச்சத்து மதிப்பை ஆய்வு செய்து வருவதாகவும், அதன்பிறகு, உத்திகள் மாற்றப்படும் என்றும் கூறுகிறது. இது உடல்நலம் தொடர்பான விஷயம். தயாரிப்பை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நிறுவனம் கூறுகிறது.

நெஸ்லேவின் இந்த அறிக்கை உள் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது என்று 'பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது நெஸ்லேவின் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்புகளில் 37 சதவீதம் 3.5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. இந்த மதிப்பீட்டை ஆஸ்திரேலியாவின் ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்  வழங்கியுள்ளது. தயாரிப்புகளுக்கு 1 முதல் 5 வரை மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன.  

நெஸ்லேவின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. மாகி நூடுல்ஸ் அதன் மிகவும் பெயர் பெற்ற தயாரிப்பு. நெஸ்லேயின் நெஸ்காஃபே (Nescafe) அனைவராலும் விரும்பப்படும் தயாரிப்பு ஆகும், இது இரண்டாவது மிகவும் பிரபலமான பிராண்டாகும். 

நிறுவனத்தின்  அறிக்கையின்படி, அதனுடைய 60 சதவீத உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை. சில தயாரிப்புகள் ஒருபோதும் ஆரோக்கியமாக இருந்ததில்லை என்பதால், அவற்றை சரிசெய்ய நெஸ்லே முயற்சி செய்தது. அதன் பிறகும் அவை ஆரோக்கியமானவை என்ற பட்டியலில் வரவில்லை பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.

Editor's Choice

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த நவோமி ஒசாகாவுக்கு 10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் விளையாடிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.
 
இதன்பின் பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் மறுத்து விட்டார்.  இதற்காக போட்டி நடுவர் அவருக்கு ரூ.10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.  தொடர்ந்து இதுபோன்று அவர் நடந்து கொண்டால் அவர் மீது கூடுதல் தடை விதிக்க வேண்டி வரும் என நடுவர் கூறியுள்ளார்.
 
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன்.  மனநலம் தொடர்ந்து நன்றாக இருப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் கூறினார்.
 
எனினும், பிரெஞ்சு ஓபன் போட்டி நிர்வாகிகள் சார்பில் வெளியான அறிக்கையில், கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளுக்கான நடத்தை விதிகளின் கீழ், போட்டியில் வெற்றி, தோல்வி என முடிவு எதுவாக இருப்பினும், டென்னிஸ் விளையாட்டின் நலன், ரசிகர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்வோர் நலனுக்காக ஊடகக்காரர்களிடம் பேச வேண்டியது வீரர், வீராங்கனைகளின் கடமை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதனையடுத்தே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பக்கம் 9 / 90