Editor's Choice
விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.
 
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது.
 
தகவல் அறிந்து விரைந்து வந்த  ரதர்போர்ட் மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது. விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 
 
இதனிடையியே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டார்சன் படத்தில் நடித்த ஜோ லாரா-வும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. பலியானவ்சர்களில்  ஜோ லாரா வின் மனைவி க்வென் லாராவும்  ஒருவர்.  மேலும்  ஜெனிபர் ஜே. மார்ட்டின், டேவிட் எல். மார்ட்டின், ஜெசிகா வால்டர்ஸ், ஜொனாதன் வால்டர்ஸ், மற்றும் பிராண்டன் ஹன்னா, இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் ஆவார்கள்.
 
விமான விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் மூழ்கிய விமானத்தின் பாகங்களையும், எஞ்சிய உடல்களையும் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரகசிய திருமண விழாவில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விருந்தினர்கள் மிக குறைவான அளவிலேயே விழாவிற்கு அழைக்கப்பட்டனர்.

COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கிலாந்தில் திருமணங்களில் தற்போது 30 பேருக்கு மட்டுமே அங்கேற்கலாம் என்ற விதி உள்ளது. பிரதமர் ஜான்சன் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் டவுனிங் தெருவில் உள்ள ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு, திருமணத்திற்கு முன்பே,  ஒரு வயது மகன் வில்பிரட் உள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவராக இருந்த காலத்தில் சைமண்ட்ஸ் ஜான்சனை சந்தித்தார். அவர் இப்போது ஒரு கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

போரிஸ் ஜான்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது தனது முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனைச் (Allegra Mostyn-Owen) சந்தித்தார், அவர்கள் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். 1993 ஆம் ஆண்டில் விவாகரத்தானது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் வீலரை மணந்தார்.

வக்கீலான மெரினா வீலருடனான திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது. அவர்களுக்கு லாரா, மிலோ, காஸ்ஸி மற்றும் தியோடர் ஆகிய நான்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனர்.

போரீஸ் ஜான்சனுக்கு வயது 56 தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணுக்கு வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது.

 

Editor's Choice
சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாக அண்மையில் ஆய்வு முடிவு வெளியானது.
 
அதன் படி 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
 
ஆனால் 15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
 
தலைகீழ் வயது கட்டமைப்பு காரணமாக சுருங்கி வரும் மக்கள் தொகை சிக்கலாக அமையும். சீனாவில் இளைஞர்களை விட வயதானவர்கள்  அதிகம்.
 
எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க போதுமான தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், மேலும் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேவை அதிகரிக்கும்.
 
நாடு மிகவும் வளர்ச்சியடையும் போது, கல்வி அல்லது பிற முன்னுரிமைகள் காரணமாக பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையும்.
 
இந்த நிலையில்  மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சீன அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது. 
 
மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பல ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தை சீனா அமல்படுத்தியது. சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை கட்டுப்பாடு அதன் தலைவர் மாவோ காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அவர் இறந்த பின்பே, அது அமலுக்கு வந்தது. 
 
சுமார் 40 ஆண்டுகள் நீடித்த அந்த கட்டுப்பாட்டால் மில்லியன் கணக்கான கட்டாய கருக்கலைப்புகளும், குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து, ஒரு குழந்தை திட்டத்தை அடுத்து மக்கள் தொகை கட்டுக்குள் வந்ததால் 2016ல் சீனா கொள்கையை தளர்த்தியது.
 
 அதன்படி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என 2016ல் தளர்வை சீன அரசு அறிவித்தது. தொடர்ந்து குழந்தை பிறப்பு கொள்கையில் தளர்வை அறிவித்த பிறகும் மக்கள் தொகை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததை அடுத்து குடும்பத்துக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
Editor's Choice

தடுப்பூசி போட்டாச்சா? கோவிஷீல்டா, கோவாக்சினா என்று கேட்கும் அளவுக்கு தற்போது விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீரம் அல்லது பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், பயோகான் உள்ளிட்ட பார்மா கம்பெனிகள் குறித்து தெரிந்த அளவுக்கு தடுப்பூசி நிறுவனங்கள் குறித்து நமக்கு தெரியாது என்பதே உண்மை.

ஆனால், தடுப்பூசி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.

சில நாள்களுக்கு முன்பு வந்த தகவல் ஆச்சர்யமளித்தது. 2020-ம் ஆண்டில் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய நிறுவனங்களில் அதிக லாப வரம்பு உள்ள நிறுவனமாக சீரம் திகழ்கிறது.

கேபிட்டல்லைன் என்னும் நிறுவனம் இந்தத் தகவலை வெளியீட்டிருக்கிறது. 2020-21-ம் நிதி ஆண்டில் 418 நிறுவனங்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளன. இதில் அதிகபட்சமாக சீரம் நிறுவனத்தின் லாப விகிதம் 41.3 சதவிகிதமாகும். அதாவது ரூ.5,446 கோடி வருமானத்தில் ரூ.2,251 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி இருக்கிறது.

ஆனால் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பார்மா நிறுவனங்களின் நிகர லாபம் குறைவாகவே இருக்கிறது. அதிகபட்ச லாப விகிதம் 28 சதவிகிதம் மட்டுமே.

பூனாவாலாவின் குடும்பம் பெரிய குதிரை பண்ணை வைத்திருந்தார்கள். குதிரையின் ஆன்ட்டிடாக்ஸின் சீரம் (Antitoxin serum) மூலமாகத் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். 1966-ம் ஆண்டு ரூ.5,00,000 முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்குகினார் சைரஸ் பூனாவாலா.

நமக்கெல்லாம் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகுதான் சீரம் நிறுவனம் குறித்து தெரியும். ஆனால், அதற்கு முன்பாகவே தடுப்பூசி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்டுக்கு 150 கோடி டோஸ் தடுப்புசி தயாரிக்கும் திறன் உடையது இந்த நிறுவனம். சர்வதேச அளவில் 170 நாடுகளுக்கு பல விதமான நோய்களுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது. போலியோ, மூளைக்காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட பல நோய்களுக்கான தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு சீரம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும்.

Editor's Choice

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உலகில் 1.1 மில்லியன் மக்களுக்கு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் புகைபிடிப்பதால் உயிரிழந்ததாக புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது. 2019க்கு பிறகு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பேர் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் படி, 25 வயதிற்குள் இளைஞர்கள் புகைபிடிப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள், இது இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய சாபக்கேடு.

20 நாடுகளில் ஆண்களுக்கும் 12 நாடுகளில் பெண்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிய கண்டத்தில் மூன்றில் ஒருவர் புகைப் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இந்த கொடிய பழக்கத்தால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு. இந்தியா, அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியா, ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜப்பான், துருக்கி, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இளம் வயதினரை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை அரசாங்கங்கள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. 20 முதல் 25 வயதிற்குள் இந்த பழக்கத்தை பழகாவிட்டால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

"இளைஞர்கள் தங்கள் 20 களின் நடுப்பகுதியில் புகைப் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வது அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்தை தீவிரமாக குறைக்கும்" என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான தடையை ஆன்லைன் ஊடகங்களுக்கும் நீட்டிப்பது அவசியம் என்றும் சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் (flavoured cigarette) மற்றும் இ-சிகரெட்டுகள் (e-cigarettes) போன்ற ஒத்த தயாரிப்புகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"சில நாடுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், புகையிலை தொழில் (tobacco industry) மற்றும் அரசியல் காரணங்களால், உலகளாவிய புகையிலை கட்டுப்பாடு குறித்த அறிவுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான இடைவெளி ஏற்பட்டுள்ளது".

Editor's Choice

இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இதுவரை 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். ஏற்கெனவே ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ள அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார் சாய்னா நேவால். இந்நிலையில் டெல்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. கோலாலம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டியும் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, ஜூன் 1 முதல் 6 வரை நடைபெறவிருந்த சிங்கப்பூர் ஓபன் போட்டியும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று போட்டிகளையும் வைத்து ஒலிம்பிக் கனவில் மிதந்த வீரர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பி.வி.சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக் சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டார்கள். ஆனால் இந்திய வீரர்களான சாய்னா நேவாலும் ஸ்ரீகாந்தும் இந்த மூன்று போட்டிகளில் பங்கேற்று அதில் கிடைக்கும் வெற்றிகளை வைத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற இருந்தனர்.

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்காக எஞ்சியிருந்த மூன்று போட்டிகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சாய்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு தகர்ந்துள்ளது.

பக்கம் 10 / 90