Editor's Choice

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 யானைகள் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்தன. வழக்கமாக செல்லும் பாதையை மறந்து அவை ஊருக்குள் புகுந்துவிட்டதாக‌ தெரிகிறது. வனப்பகுதிக்கு செல்லும் வழி தெரியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்த யானை கூட்டம் அங்கு பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தியது. இதுவரை சுமார் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  மதிப்பிலான சொத்துக்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே யானைகளை பத்திரமாக வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் தங்கள் வனப்பகுதிக்கு செல்வதற்கு 300 மைல் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே யானை கூட்டம் மக்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து விடாமல் இருக்க வனத்துறையினர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு யானைகளை பெரிய வாகனங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
 
யானைகளால் பொதுச்சொத்துகளுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க, வனத்துறை சார்பில் வழியில் ஆங்காங்கே தொட்டிகள் அமைக்கப்பட்டு உணவும், தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சீன அரசு தொலைக்காட்சி ஒன்று யானைகள் வனத்துக்குள் அனுப்பப்படும் நிகழ்வை 24 மணி நேர நேரலையாக வழங்கி வருகிறது. லட்சக்கணக்கான சீன மக்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
இந்தநிலையில், வனத்துக்குள் செல்லும் வழியில் 15 யானைகளும் அழகாகப் படுத்து உறங்கும் காட்சி ‘ட்ரோன் கேமரா' மூலம் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Editor's Choice

ராஜாக்களுக்கு அதிகமான மனைவிகள் இருந்தார்கள், அவர்களுக்கு அதிகமான குழந்தைகள் இருந்தார்கள் என்று எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் உண்மையில் ஒருவர்  தனது 37 வது திருமணத்தை நடத்தியிருக்கிறார். அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமணத்தை அவர் செய்துள்ளார்.

இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் "தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி இந்த வீடியோவை ஷேர் செய்து இவ்வாறுகுறிப்பிட்டதால் இது உண்மை என பலர் நம்புகின்றனர்.

Editor's Choice

 அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லாப நோக்கமற்ற புலனாய்வு பத்திரிகையான 'புரோபப்ளிகா' அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்களின் வரி விவரங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மாஸ்க் போன்ற பெரும் பணக்காரர்கள் பல ஆண்டுகள் எந்தவித வரியும் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
 
‘புரோபப்ளிகா' தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்த ரகசிய அறிக்கையில் ‘‘25 பணக்கார அமெரிக்கர்கள் தங்களின் மிகப்பெரிய சொத்துடன் ஒப்பிடுகையில் வருமான வரியை மிகக்குறைவாகவே செலுத்துகின்றனர். மொத்த வருமானத்தில் சராசரியாக 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துகிறார்கள். சில சமயங்களில் எதுவும் செலுத்துவதில்லை” என தெரிவித்துள்ளது.
 
அதன்படி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்தவில்லை என்றும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் 2018-ம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இவர்களைத் தவிர தொழிலதிபரும் நியூயார்க் நகரின் முன்னாள் மேயருமான மைக் புளூம்பெர்க், பிரபல முதலீட்டாளர் வாரன் பபெட் போன்றோரும் சில ஆண்டுகள் வருமான வரியை முற்றிலுமாக தவிர்த்தவர்கள் என 'புரோபப்ளிகா' கூறுகிறது.
 
போர்ப்ஸ் பத்திரிக்கையின் தரவுகளை பயன்படுத்தி இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறும் 'புரோபப்ளிகா', 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 25 பணக்கார அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு 401 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்ததாகவும், ஆனால் அவர்கள் அந்த ஆண்டுகளில் வெறும் 13.6 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே வரி செலுத்தியதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
அதே சமயம் அமெரிக்க செல்வந்தர்களின் வரி விபரங்களை வெளியிட்டது சட்டவிரோதமானது என வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது.
 
இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சென் சாகி ‘‘ரகசியமான அரசாங்க தகவல்களை அங்கீகரிக்கப்படாத வகையில் வெளியிடுவது சட்டவிரோதமானது. மத்திய புலனாய்வு போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இது பற்றி விசாரிப்பார்கள்’’ என கூறினார்.
Editor's Choice
ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைன் மகளான தீ. உசுரு நரம்புல ’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
 
காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.
 
தீயின் தீக்குரலும், தோழர் அறிவின் வரிகளும் இந்த பாடலை தோல் தாங்கி தூக்கியிருக்கிறது. மக்களின் குரலாக இருக்கும் இந்த பாடலும் இதன் வீடியோவும் உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவே இருக்கிறது.
 
கடலே., கரையே, மனமே., குணமே., நிலமே., குளமே., இடமே., தடமே என்ற வரிகள் நம்மை பாடலுக்குள் மிதக்கச் செய்கிறது. பாட்டன் பூட்டன் காத்த பூமி., ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி ., ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவக் கூவுச்சி… அதுபோட்டு வச்ச எச்சந்தானே காடா மாறிச்சி., நம்ம நாடா மாறிச்சி., இந்த வீடா மாறிச்சி என்ற வரிகள் நம்மை கண்விழிக்க செய்து புல்லரிக்க வைக்கிறது.
 
யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை  எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. தற்போது இப்பாடலுக்கு 25 கோடி முறை பார்த்து உள்ளனர்.  ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சுயாதீனப் பாடல்களில் எஞ்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Editor's Choice

தற்போது இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர் கவிஞர் நா முத்துகுமாரின் கவிதைகளை பாடல்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நா முத்துக்குமாரின் கவிதைகள் அதிக அளவில் இருப்பதால், ஆர்வமுள்ள ரசிகர்கள் அந்தக் கவிதைகளை பாடலாக மாற்றி எழுதும் படி கேட்டுள்ளார். தேர்வாகும் பாடல்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“கவிதைக்குள் ஒளிந்திருக்கும் திரைப்பாடலைக் கண்டறியும் கனா!! அல்லது சவால் ! ஜெயில் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய URBAN BOYZ STUDIOS நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார். இந்த படத்தினுடைய கதைப் போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளது.

இது ஏதேச்சையானதா அல்லது 25ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஓரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னை பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

இந்தக் கதையில் வரும் கதாநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப்பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்து பாடுகிற ஒரு கதாபாத்திரம்.

நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க, அவனும் மெல்ல அவனும் மெல்ல நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான்.ர சிக்கிறான். இருவரும் மீண்டும் சந்திக்கும்
ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியை கதாநாயகி உச்சரிக்க , வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்கு பாடல் வரிகள் தேவைப்பட்டது.

நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையை பாடலாக மாற்றவேண்டும். அல்லது சில காதல் கவிதைகளில் இருந்து முத்து முத்தான காதல் ததும்பும் வரிகளை தேர்ந்தெடுத்து முழுப்பாடலாக மாற்றவேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி. இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்கு பொருத்தமான வரிகள் இருந்தால் தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும் அது வெற்றியும் பெறும். இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக , ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட , நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம். விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம். காட்சிக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம்

அப்படி தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்து பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும் நா.மு கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்
தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மு.கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தினம் 30 ஜூன் 2021
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Editor's Choice

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Thamara Sithole என்ற 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.

கர்ப்பமாக இருந்த Sithole, பிரிட்டோரியா மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஏழு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என 10 குழந்தைகளை பெற்றார்.  

கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் 8 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன. கர்ப்பகாலத்தில் கவலையால் தூக்கமே வரவில்லை என்று Sithole சொல்கிறார். இத்தனை குழந்தைகளை கருப்பை எப்படி தாங்கும்? குழந்தைகள் உயிருடன் பிறக்குமா? ஒன்றுடன் ஒன்று கை-கால்கள் ஒட்டிப் பிறந்தால் என்ன செய்வது? என பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார் பத்தும் பெற்ற மகராசி. ஆனால் 10 குழந்தைகளும் இயல்பாகவே இருக்கின்றன. 

பத்து குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு இயற்கையான கர்ப்பம் இது, செயற்கை கருவுறுதல் சிகிச்சை எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. 

ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தது தான் ஒற்றை பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்த சாதனையாக இருந்தது.  

ஒரே பிரசவத்தில் சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தி குறித்து  பேசிய கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.  தற்போது, தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு  முன்னுரிமை அளிப்பதால் தகவலை இன்னும் சரிபார்க்கவில்லை என்று கூறும் அவர், சிறப்பு ஆலோசகருடன் கின்னஸ் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பக்கம் 5 / 90