Editor's Choice

அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரை அருகே ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கதை ஒன்று உண்டு. பினோஜியோ என்கிற இந்த கதையில் மீனவர் ஒருவர் ஒருவரை பிரமாண்ட திமிங்கலம் ஒன்று விழுங்கி பின்னர் துப்பிவிடும். இக்கதை தற்போது உண்மை சம்பவமாகியுள்ளது.

மைக்கேல் பக்காடு என்கிற அமெரிக்க மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். 35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த அவரை ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று எதிர்பாராவிதமாக விழுங்கியது.

30 விநாடிகள் திமிங்கலத்தின் இருட்டடித்த வாயில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நீந்திக் கொண்டிருந்த நிலையில் தனக்கே உரித்தான பாணியில் கடலுக்குமேலே எகிறிகுதித்த திமிங்கலம், அவரை காரித் துப்பியது. துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்த மைக்கேல், பின்னர் கரைக்கு வந்து சேர்ந்தார்.

இதனால் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில் பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும்.

இவ்வாறு திமிங்கலம் தனது உணவைத் தேடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Editor's Choice

கொரோனாவின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்கும் பேராயுதம் தடுப்பூசி. உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுகின்றன. தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளும் பரிசுகளும் ஆங்காங்கே அறிவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் ஹாங்காங்கில் வெளியாகி இருக்கும் அறிவிப்புகள் இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. 75 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங்கில் இதுவரை 15 விழுக்காடு மக்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் மக்களிடம் ஊசி போட்டு கொள்ள ஆர்வம் இல்லை. ஹாங்காங் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மக்களிடையே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவது அவசியமென்பதால் ஹாங்காங் நிர்வாகம் அங்கு செயல்படும் பெரு நிறுவனங்களின் உதவியை நாடியது.

இதனை அடுத்து பல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு என பரிசுகளை அறிவித்துள்ளன. இதன்படி , SUN HUNG KAI நிறுவனம் ஆகஸ்ட் 31க்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஐபோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. லீ ஷா கீ ஹெண்டர்சன் நிறுவனம் தங்க கட்டிகளை வழங்குவதாகவும், குட்மேன் நிறுவனம் டெஸ்லா கார் வழங்குவதாகவும் அறிவித்துள்ளன. இவை தவிர உணவகங்களில் கட்டண தள்ளுபடி, நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, மந்தமாக இருந்த தடுப்பூசி திட்டம் வேகமெடுத்துள்ளது. பலர் தடுப்பூசி போட்டு கொள்ள முன்பதிவு செய்திருப்பதாக ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Editor's Choice

சினிமாவுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருது 'புலிட்சர்' விருது. அமெரிக்கா பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912ம் ஆண்டு முதல் பத்திரிக்கை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை மின்னிகியூ போலீஸ் நகர காவல்துறை அதிகாரி கழுத்தில் அழுத்தியதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை 18 வயது அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா பிரேஸர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ உலக அளவில் பேசு பொருளானது. இதையடுத்து இளம்பெண் டார்னெல்லா பிரேஸரை கவுரவப்படுத்தும் நோக்கில், அவருக்கு சிறப்பு 'புலிட்சர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தனது அற்புதமான படங்கள் மூலம் 2 பிரிவுகளில் 'புலிட்சர்' விருதினை தட்டி சென்றார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எமிலியோ மொரநாட்டி என்ற புகைப்பட கலைஞர். இவர் அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு தீவிரமான மக்கள் போராட்டங்களின் போது சற்றும் பதற்றம் இல்லாமல் எமிலியோ பதிவு செய்த படங்கள் அவருக்கு இரண்டு 'புலிட்சர்' விருதுகளை பெற்று தந்துள்ளன.

இன ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வழங்கியதற்காக ராய்ட்டர் நிறுவனத்திற்கும் 'புலிட்சர்' விருது சென்றுள்ளது. டானியா லியோன் என்பவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான 'புலிட்சர்' விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Editor's Choice

ஒரு நாளில் அல்லது உங்கள் வாழ் நாளில் எத்தனை சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? சொற்களின் ஆற்றலைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி  பற்றியும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்

ஒருவரது இயல்பிற்கு ஏற்ப அவரது பேச்சு இருக்கும். சிலர் குறைவாகப் பேசுவார்கள், சிலர் அதிகம் பேச விரும்புவார்கள். LinkedIn பயிற்றுவிப்பாளர்  ஜெஃப் அன்செல் நடத்திய ஆய்வில், , ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7000 சொற்களைப் பேசுகிறார் என கூறப்பட்டுள்ளது. பலர் இதை விட அதிகமான சொற்களைப் பேசுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமான தகவலாக இருக்கிறது.

சராசரி மதிப்பீட்டை எடுத்துக் கொண்டால், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதிலும் 860,341,500 சொற்களைப் பேசுகிறார், அதாவது சுமார் 86 கோடி வார்த்தைகள். எனவே உங்கள் வாழ்க்கை முழுவதிலும், 86 கோடி வார்த்தைகளை பேச உங்கள் சக்தியை எந்த அளவிற்கு செலவிழிக்க வேண்டும். பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஒளிபரப்பாளருமான கில்ஸ் பிராண்ட்ரெத் தனது புத்தகமான The Joy of Lex: How to Have Fun with 860,341,500 Words என்ற புத்தகத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அகராதியில் இவ்வளவு சொற்கள் இருக்கிறதா என்ன என  உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படலாம்!

மனிதன் பேசும் வார்த்தைகளை மற்ற விஷயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தனது வாழ்க்கையில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 20 வால்யூமை 14.5 முறை வாசிப்பதற்கு ஒப்பானது என கூறப்படுகிறது.  மனித சொற்களை என்சைக்ளோபீடியாவின் 32 வால்யூம் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,  நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலிருந்து 19.5 புத்தகங்களை எழுதலாம். பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் கிங் கேம்ஸ் பைபிளில் உள்ள சொற்களை விட 1110 மடங்கு வார்த்தைகளைப் பேசுகிறார்.

 

Editor's Choice

பிரான்சில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா, செக்குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்தித்தார். முதல் செட்டை பார்பரா 6-1 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு போட்டியை தொடர்ந்தார். பின் இந்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். கடைசி செட்டில் பார்பரா 6-4 என வென்றார்.

ஒரு மணி நேரம், 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பார்பரா 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக கோப்பை வென்றார். கோப்பை கைப்பற்றிய பார்பரா ரூ. 14.41 கோடி, பவ்லிசென்கோவா ரூ. 6.65 கோடி பரிசு பெற்றனர்.

Editor's Choice

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், மக்களை சந்தித்து உரையாடுவதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பிரான்சின் தென்கிழக்கு மாகாணத்திற்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப்பயணம் சென்றிருந்தார்.

அவ்வாறு சென்ற இடத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க மேக்ரான் அவர்கள் அருகே சென்றார்.

அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் நின்றிருந்த ஒருவருக்கு அதிபர் கை கொடுத்த நிலையில், அந்த நபர் யாரும் எதிர்பாராத விதமாக தனது கையால், அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் திடீரென மேக்ரான் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த நபருடன் இருந்த மற்றொரு நபர் மேக்ரானுக்கு எதிராக முழக்கமிட்டடார்.

அவரை அதிபரின் பாதுகாவலர்கள் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் டேமியன் டரெல், 28, என, தெரிந்தது. அவருக்கு, பிரான்சின் வேலென்ஸ் நீதிமன்றம், நான்கு மாத சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

பக்கம் 3 / 90