- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 182
ஓஎன்வி குறுப் விருது என்பது ஞானபீட விருது பெற்ற ஓஎன்வி குறுப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் இலக்கிய விருதாகும். இந்த ஆண்டிற்கான விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்டது.
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில், பெருமைக்குரிய இந்த விருதை அவருக்கு அளித்தது குறித்து தமிழிலும் மலையாளத்திலும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினர்.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ், பல்வேறு புகார்களை எதிர்கொள்ளும் வைரமுத்துவுக்கு இந்த விருது எப்படி அளிக்கப்பட்டது என்பது குறித்து கேள்வியெழுப்பியது.
வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. "தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த ஆண்டு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படுகிறது" என அந்த அறிக்கை கூறுகிறது.
சார்லி பிட் மை பிங்கர்' என்ற 55 வினாடிகள் ஓடக்கூடிய 'யு டியூப் வீடியோ' 5.54 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஹாரி மற்றும் சார்லி சகோதரர்கள் குழந்தைகளாக இருந்தபோது 2007ம் ஆண்டு அவர்கள் வீட்டில் ஒரு சிறிய வீடியோ தற்செயலாக எடுக்கப்பட்டது.
மூத்த சகோதரனான ஹாரி தன் தம்பி சார்லியின் தோள் மீது கைபோட்டபடி அமர்ந்திருப்பான். அண்ணனின் விரல்களை தன் வாயில் வைத்து சார்லி சந்தோஷமாக கடிப்பான்.
விரல்களை எடுக்கும் ஹாரி தம்பியின் வாயில் விளையாட்டாக மீண்டும் விரல்களை வைப்பான். இந்த முறை சார்லி வெடுக்கென விரல்களை அழுத்தமாக கடிப்பான். வலி தாங்க முடியாமல் ஹாரி அழுவான்.
இதை காணும் சார்லி சந்தோஷத்தில் சிரிப்பான் தம்பியின் சிரிப்பை பார்த்து அழுகையின் இடையே ஹாரி புன்னகைப்பான். 14 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ யு டியூப் சமூக வலைதளத்தில் இதுவரை 80 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.'டிஜிட்டல்' கலைப் படைப்புகளை ஏலம் விடும் நடைமுறை என்.எப்.டி. அதாவது 'நான் பன்ஜிபிள் டோக்கன்' என அழைக்கப்படுகிறது.
இந்த வகையில் 'சார்லி பிட் மை பிங்கர்' என்ற வீடியோ ஏலம் விடப்பட்டது. இதில் 11 நாடுகள் பங்கேற்றன. இறுதிகட்ட ஏலத்தில் 'மீம்மாஸ்டர்' மற்றும் '3எப் மியூசிக்' என்ற இரு நிறுவனங்கள் மோதின. இறுதியில் '3எப் மியூசிக்' நிறுவனம் 5.54 கோடி ரூபாய்க்கு அந்த வீடியோவை ஏலத்தில் எடுத்தது.
தற்போது யு டியூப் தளத்தில் காணக்கிடைக்கும் இந்த வீடியோ விரைவில் அதில் இருந்து நீக்கப்படும் என தெரிகிறது. இதற்கு முன் 'டுவிட்டர்' சமூக வலைதள நிறுவனர் ஜாக் டார்சியின் முதல் டுவிட்டர் பதிவு 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்ற எம்ஜிஎம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது 61.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
ஹாலிவுட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்ட தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஎம். கிட்டத்தட்ட 4,000 திரைப்படங்களையும், 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துத் தன் வசம் வைத்துள்ளது. இவை அமேசானின் ஸ்டுடியோஸ், திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையில் எம்ஜிஎம்மின் படைப்புகளை அவர்களது அணியுடன் சேர்ந்து தொடர்ந்து மேம்படுத்தவும், புத்துயிர் கொடுக்கவும் தயாராக இருப்பதாக, ப்ரைம் வீடியோ மற்றும் அமேசான் ஸ்டுடியோசின் துணைத் தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறினார்.
கடந்த சில வாரங்களாகவே எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் வாங்கவிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இரு தரப்புமே இதுகுறித்து உறுதி செய்யாத நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜேம்ஸ் பாண்ட், ராக்கி, பேஸிக் இன்ஸ்டின்க்ட், ரோபோ காப்' உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவையே. மேலும் 'பார்கோ, வைகிங்ஸ்' உள்ளிட்ட வெப் சீரிசையும் தயாரித்துள்ளது. இவை அனைத்தும் அமேசான் வசம் சேர்ந்திருப்பதால், ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தில் இருக்கும் படைப்புகளின் எண்ணிக்கை இனி கணிசமாக உயரும். இதனால் ப்ரைமுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாஸ்க் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. சிறிய ரோட்டுக் கடைகள்முதல் பெரிய அங்காடிகள்வரை மாஸ்க் விற்பனை களைகட்டியது.
துவக்கத்தில் என் 95 மாஸ்க் அணிவது நல்லது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விதவிதமான டிசைனர் துணிகள் கொண்டு மாஸ்க்குகள் தயாராகின்றன. ஆண்கள், பெண்கள் ஆகியோர் தங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப கலர்கலரான மார்க்குகளை அணியத் துவங்கி விட்டனர். இவ்வாறாக இந்தியர்களின் அன்றாட உடைகளில் ஒன்றாகவே மாஸ்க்குகள் மாறிப்போயின.
இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மாஸ்க் அணிவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாஸ்க் விற்பனையாளர்களுக்கு தரக்கட்டுப்பாடு வேண்டும் எனவும் குறிப்பிட்ட தரத்தில் மட்டுமே டில்லியில் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஃபேன்சிக்காக தயாரிக்கப்படும் கலர்கலரான மாஸ்குகளில் போதிய பாதுகாப்பு இல்லை என மனுதாரர் நீதிபதிகளிடம் குற்றம்சாட்டினார். இவ்வாறு பாதுகாப்பு இல்லாத மாஸ்க்குகளை அணிவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரேனும் இருக்கின்றனரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவரது கருத்தை கேட்டறிந்த நீதிபதிகள் இதுகுறித்து டில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
பக்கம் 12 / 90



