Editor's Choice

கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால், படித்து முடித்த கையுடன் மைதானத்தில் களமிறங்கினார்.... முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

ஆக்ஸ்போர்டு கெபில் கல்லூரியில் அரசியல், பொருளியல் (பொருளாதாரம்) மற்றும் தத்துவவியல் பிரவில் மூன்றாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றவர்.

 தனது வாலிப வயதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரபலமானவர். அவர் ஆடுகளத்தில் மட்டுமல்ல, காதல் களத்திலும் பிரபலமான வீரர்களில் ஒருவர்.

இம்ரான் கான் தனது இளம் வயதில் ராக்ஸ்டார் போன்ற தோற்றம் கொண்டிருந்தார். அவரது தோற்றத்தினாலேயே அவர் மீது காதல் கொண்ட பெண்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
 
1984ம் ஆண்டு ஒரு நாளேடுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் சிங்கிளாக பெண்களை காண்பதே அரிது. அங்கே மதுபான கடைகள், டிஸ்கோத்தே, ஏன் தனியாக பெண்களை சந்திக்க இடமே கிடையாது. பெண்களை சந்தித்து பழகுவது என்பது வாழ்க்கையின் ஒரு அலாதியான இன்பம். அதை தான் நான் விரும்புகிறேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார் இம்ரான் கான்.
 
ரேகா என்றென்றும் மிகவும் பிரபலமான நடிகை. அவரை இன்றும் பழம்பெரும் நடிகை என்று சொல்லிவிட முடியாது.  இம்ரான் கான் மும்பைக்கு வரும்போதெல்லாம், அவரும் ரேகாவும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகை ஜீனத் அமனுக்கும் இம்ரான் கானுக்கும் காதல் என்று வதந்தி பரவியது. 1979 நவம்பரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு விஜயம் செய்தது, இம்ரான் கானை 'பிளேபாய்' என்று அழைத்தார்கள். அந்த ஆண்டு இம்ரான் கான் தனது பிறந்தநாளின்போது பெங்களூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார். அப்போது, டிரஸ்ஸிங் அறையில் இம்ரான் தனது 27 வது பிறந்தநாளை தனது அணியினருடன் கொண்டாடினார், ஆனால் சில இந்திய பத்திரிக்கைகளில் இம்ரான் தனது 27 வது பிறந்த நாளை பாலிவுட் நடிகை ஜீனத் அமனுடன் கொண்டாடியதாக கூறின. கிரிக்கெட் மைதானத்தில் கேக் வெட்டிய பிறகு, இம்ரான் ஜீனத்தை தனியாக சந்தித்தாரோ என்னவோ? ஜீனத் அமனோ, இம்ரான் கானோ தங்களுக்கு இடையிலான உறவு பற்றி வெளிப்படையாக பேசவில்லை.

பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியுடன் இம்ரானின் பெயரை இணைத்து வதந்திகள் உலா வந்தன. ஆனால் இருவரும் தங்கள் உறவு பற்றி மறுத்தும் பேசவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை.

இம்ரான் கானுக்கும் பெங்காலி நடிகை மூன் மூன் செனுக்கும் இடையிலான நெருக்கம் அந்த நேரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மூன் மூன் செனை இம்ரான் விரும்புவதாக கூறப்பட்டது.  

பாலிவுட் நடிகைகளின் விருப்பமான கிரிக்கெட் ஹீரோ இம்ரான் கான் என்று கூறப்பட்ட காலம் அது. அவரது காதல் கதைகள் இன்றும் பிரபலமாக உள்ளன.

1995ல் தனது 42வது வயதில் முதல் திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். இவர் ஜெமிமா கோல்ட்ஸ்மித் எனும், யூத பில்லியினரான சர் ஜேம்ஸ் கோல்ட்ஸ்மித் என்பவரின் மகளை திருமணம் செய்துக் கொண்டார். இம்ரான் கானுக்கும், ஜெமிமாவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம்.  இந்த தம்பதிகளுக்கு சுலைமான் இசா கான் மற்றும் குவாஸிம் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனது உடல்நல பிரச்சனை காரணமாக ஜெமிமா பெரும்பாலான நாட்களை இங்கிலாந்தில் கழிக்க வேண்டிய கட்டாயம் உண்டானது.  ஏறத்தாழ திருமணமாகி பத்து ஆண்டுகளான நிலையில் 2004ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர்.
 
முதல் மனைவியுடன் பிரிவு ஏற்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பிறகு, பிபிசி தொலைக்காட்சியில் பணிப்புரிந்து வந்த ரெஹாம் கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் இம்ரான் கான். ஆனால், இவர்களது இல்லற பந்தம் பத்து மாதங்கள் கூட நீடிக்கவில்லை. இம்ரான் கான் தன் வாழ்க்கையையே நாசம் செய்துவிட்டார். அவர் தன்னை ஒரு கடவுள் போல உருவகப்படுத்திக் கொள்கிறார். அவரிடம் நிறைய ஈகோ இருக்கிறது. மேலும், திருமணமல்லாத கள்ளத் தொடர்பு மூலமாக அவருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறி இம்ரானை பிரிந்தார் ரெஹாம் கான்.
 
புஷ்ரா மேனகா எனும் 39 வயதுமிக்க பெண்மணியை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். புஷ்ரா மேனகா ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் பெற்றவர்.


 
Editor's Choice
இருபதுகளில் பார்க்கும் வேலையில் திருப்தி கிடைக்கவில்லை என்றால், முப்பதுகளில் நீங்கள் வேலையை மாற்றிப் பார்க்கலாம்.  புதிய துறைக்கு மாற அல்லது புதியவற்றை கற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர். நீங்களும் மாற்றத்தை விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ:

தொழில்முறையில் என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும்கூட புதிய பார்வையுடன் அணுக வேண்டும். அண்மைக்கால போக்குகளை தெரிந்து கொள்ள நிறைய படியுங்கள், பேசுங்கள், விசாரியுங்கள். நீங்கள் சேரக்கூடிய வகையிலான குறுகிய கால வகுப்புகள் இருக்கின்றனவா என தேடிப் பாருங்கள். இது மாற்றத்திற்கான பாதையை எளிதாக்குவதோடு, அதை எட்டுவதற்கான உங்களது தன்னம்பிக்கையையும் அதிகமாக்கும்.

நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலை பல்வேறு வசதி வாய்ப்புகளை கொடுத்திருக்கும். அந்த வாழ்க்கை முறைக்கு நீங்கள் பழகியிருப்பீர்கள். இதிலிருந்து ஒரு அடி பின்னோக்கி வைக்க முடியுமா என யோசித்துப் பாருங்கள். உங்கள் டெபாசிட்கள் மற்றும் சேமிப்பை சரி பாருங்கள். புதிய வேலை கிடைக்கும் வரை அவை போதுமானதா என ஆய்வு செய்யுங்கள். வேலையில் இருந்து விலகி புதிய வேலையை தேடுவது நல்லது தான், ஆனால் பண விஷயத்தை சரி செய்து கொள்வது இன்னும் புத்திசாலித்தனமானது.

வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய சம்பளத்தை கேட்டுப் பெறுவது சிக்கலாக இருக்க வேண்டியதில்லை.

இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நேரடியாக கேட்பது மூலம் நீங்கள் போதிய ஆய்வு செய்திருக்கிறீர்கள் என நிறுவன மேலதிகாரியை உணர வைக்கும். உதாரணத்திற்கு ஆண்டுக்கு `10,04,500 வேண்டும் என கேட்டு, இறுதியில் `10,00,000 என இறங்கி வரலாம். கொலம்பியா பிஸ்னஸ் ஸ்கூல் ஆய்வும் இது ஒரு புத்திசாலித் தனமான வியூகம் என்று சொல்கிறது.

திறந்த மனதுடன் பேசுவது நம்பிக்கையை உண்டாக்கும். சம்பள பேச்சு வார்த்தையின் போது நீங்கள் முற்போக்காக இருக்க வேண்டும் என்றில்லை. பாலின சம்பள இடைவெளி, வேலை&-வாழ்க்கை சமன்பாடு போன்றவை குறித்து உங்கள் கருத்துக்களை கூறலாம். இதன் மூலம் உங்கள் மனநிலையை புரிய வையுங்கள். நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் மீதுதான் முதலீடு செய்யத்தயாராக இருக்கின்றன.

சம்பள உயர்வு நெருங்கும் காலத்தில் அல்லது அதற்கான செயல்பாடு பரிசீலனை காலம் முடிந்த பிறகு நீங்கள் பணியில் சேரும் நிலை இருந்தால் சம்பள உயர்வு பற்றி பேசுங்கள். சம்பள உயர்வுக்கான வாய்ப்பை நீங்கள் இழப்பதால், சக ஊழியர்கள் கூடுதல் சம்பளம் பெறும் போது அடுத்த ஒராண்டுக்கு நீங்கள் அதே சம்பளத்தில் தான் இருக்க வேண்டியிருக்கும் என எடுத்துச்சொல்லுங்கள்.

நேராக பாருங்கள். ஆனால் ஊடுருவும் வகையில் அல்ல. மேலதிகாரி வாய் மற்றும் கண்களைச் சுற்றி ஒரு தலைகீழ் முக்கோணத்தை கற்பனை செய்யுங்கள். ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு 5 அல்லது 10 விநாடிகளுக்கு பார்வையை மாற்றுங்கள்.

வேலைக்கான பேச்சு வார்த்தையின் போது, சம்பளத்திற்கு அடுத்து ரேங்க் முக்கியம் என தெரிவிக்கலாம். “முன்னுரிமைகளை வரிசைப்படுத்துவதன் மூலம் உங்களைப்பற்றி புரிய வைக்கலாம். அவர்களது முன்னுரிமை களை தெரிந்துகொண்டு முக்கிய விஷயங் களில் பரஸ்பரம் சாதகமான அம்சங்களை பெறலாம்”.

ஒருவர் தன்னைப்பற்றி பேச வைப்பது நல்ல தாக்கம் உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒருவரை ரிஸ்க் எடுக்க தூண்டும் டோப்பமைனை சுரக்க வைக்கிறது. நிறுவன அதிகாரிகளை பேச வையுங்கள்- அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைக்கலாம்.

நிறுவனம் பங்குகளைத் தருவதாகக் கூறினால் சந்தை நிலையை கவனித்து நிறுவன பங்குகள் செயல்பாட்டை ஆய்வு செய்யவும். உங்கள் வேலைக்கு குறிப்பிட்ட பயிற்சிகள் பெற வேண்டுமென்று கூறினால், அதற்கான கட்டணத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்கலாம்.

சம்பள பேச்சுக்களின் போது கால்களை இடைவெளி விட்டு விரித்து, கைகளை இடுப்பில் வைத் திருக்கும் பவர் போஸ் மூலம் உடல் ரசாயனத்தை மாற்றலாம் என்கிறது ஹார்வர்டு பிஸ்னஸ் ஸ்கூல் பேராசிரியர் ஆமி கெட்டி நடத்திய ஆய்வு. இது நம்பிக்கையை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டெரோனை அதிகமாக்கி மன அழுத்தம் உண்டாக்கும் கார்டிசாலை குறைவாக சுரக்க வைக்கிறது.

Editor's Choice

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி தெரியும், இது என்ன இந்தி சீரியல் எதிர்ப்பு போராட்டம்?

தி பேமிலி மேன் சீரியலின் முதல் பாகம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. பல விருதுகளையும் குவித்துள்ளது. இந்தத் தொடரில் தமிழ் நடிகை பிரியாமணி நடித்திருக்கிறார். சிறந்த நடிப்புக்கான விருதும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

இந்தி மொழியில் வெளியாகவிருக்கும் The Family Man Season -2 தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் சமந்தாவும் நடிக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலைப்போர்  தொடர்பான காட்சிகள் இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. ராணுவ சீருடை அணிந்த சமந்தா தமிழ் பெண்ணாக சித்தரிக்கப்பட்டு, பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாக காட்சிகள் இருக்கின்றன.

இது போன்ற சீரியல்கள் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்த தொடரை நிறுத்தவேண்டும் என்று வைகோ கண்டனக் கொடி பிடித்துள்ளார்.

தி பேமிலி மேன்-2 (The Family Man Season -2) இந்தி தொடரை தடை செய்ய வேண்டும் என்று  மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர்   வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வலைத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து ”STOP Amazon Prime Video From Releasing Family Man2 Sign the Petition!” என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அமேசான் ஓ.டி.டி. தளத்தில் இந்த வலைதளத் தொடர் வெளியாகிறது. இந்த சீரியலை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

Editor's Choice

கரோனா காலத்தில் ‘வார் ரூம்’ என்றழைக்கப்படும் ‘போர் அறை’ அல்லது ‘கட்டளை மையம்’ முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்கள் ‘வார் ரூம்’களை அமைத்து கரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. தமிழகத்தில் அண்மையில் இந்த ‘வார் ரூம்’ சென்னையில் உருவாக்கப்பட்டது. இந்த ‘வார் ரூம்’ எப்படி உருவானது?

‘வார் ரூம்’ என்றே பெயரே இது போர்க்காலங்களில் உருவானது என்பதை சொல்லிவிடுகிறது. உலகப் போர்களில் தலைவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க ‘வார் ரூம்’கள் உதவியுள்ளன. முதல் உலகப் போரில் ‘வார் ரூம்’ என்ற பெயரில் எதுவும் செயல்படவில்லை. ஆனால், ‘ரூம் 40” என்ற பெயரில் ஒரு குழு பிரிட்டனில் உருவாக்கப்பட்டது. 1914-ல் பிரிட்டன் கப்பற்படைக்கு உதவும் வகையில் இந்தக் குழு செயல்பட்டுள்ளது. ஜெர்மனி வானொலி நிலையங்களில் பகிரப்படும் தகவல்களை இடைமறித்துக் கேட்கவும், திரைமறைவில் பகிரும் சங்கேத வார்த்தைகளை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தவும் இந்த ‘ரூம் 40’ என்ற குழு உதவியிருக்கிறது. முதல் உலகப் போரில் இந்த அறை, ஒரு தகவல் களஞ்சியம் போல பிரிட்டனுக்கு உதவியிருக்கிறது.

இதேபோல இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்கு வகித்த பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உருவாக்கிய ‘சர்ச்சில் வார் ரூம்’ மிகப் பிரபலம். இதை ‘சர்ச்சில் கேபினெட் ரூம்’, ‘மேப் ரூம்’ என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரின்போது லண்டனில் நிலவறையில் செயல்பட்டு வந்த இந்த வார் ரூமில், கேபினெட் கூடி முக்கிய முடிவுகளை எடுப்பது, போர் உத்திகளை வகுப்பது, களத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உதவுவது எனப் பல பணிகளை இந்த அறையிலிருந்து செய்திருக்கிறார்கள். இந்த ‘சர்ச்சில் வார் ரூம்’ லண்டனில் தற்போது அருங்காட்சியமாகச் செயல்பட்டு வருகிறது.

போரைத் தாண்டி தற்போது இந்த ‘வார் ரூம்’ என்ற பெயர் பொதுவான பெயராகிவிட்டது. இன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் எல்லாம் ‘வார் ரூம்’கள் உள்ளன. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களில் கொஞ்சம் அதிகம். நிறுவனங்களில் ஏற்படும் கடினமான விவகாரங்களுக்குத் தீர்வு காணவும், பணிகளை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடுவதற்கும் பேசும் அறைகளை ‘வார் ரூம்’ என்றுதான் அழைக்கிறார்கள்.

இப்போது தமிழகம் உள்படப் பல மாநில அரசுகள் அமைத்துள்ள இந்த ‘வார் ரூம்’ புதிது அல்ல. ஏற்கெனவே மழை, வெள்ளம், புயல் காலங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் அல்லவா? அதேபோன்ற ஓர் உத்திதான் ‘வார் ரூம்’. கரோனா வார் ரூம் என்பது மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருந்துகள் இருப்பு போன்ற தகவல்களை ஓரிடத்தில் ஒருங்கிணைந்து பெற்று, இந்த மையத்தைத் தொடர்புகொள்ளும் பொதுமக்களுக்கு அவை பகிரப்படுகின்றன. இதற்காகப் பிரத்யேகத் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இப்படிப் போர்க்காலங்களில் உருவான ‘வார் ரூம்’ என்ற வார்த்தைதான், இன்று பலவாறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Editor's Choice

இந்தி திரையுலகில் பிரபல திரைப்பட பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல்.  கடந்த 2002ம் ஆண்டு தேவ்தாஸ் படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார்.  பல பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட தமிழ் படங்களில் 150க்கும் மேற்பட்ட இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா.  இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கர்ப்பம் ஆக இருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.  தொடர்ந்து பல புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவேற்றினார்.
 
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.  இதனை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார்.  அதில், கடவுள் விலைமதிப்பில்லா ஆண் குழந்தையை எங்களுக்கு ஆசீர்வதித்து உள்ளார்.
 
இதுபோன்ற மகிழ்ச்சி இதற்கு முன் உணர்ந்தேதேயில்லை.  எங்களுடைய குடும்பத்துடன், ஷிலாதித்யா மற்றும் நான் முழுமையாக மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறோம்.  எங்களுடைய இந்த மகிழ்ச்சிக்காக எண்ணற்ற ஆசீர்வாதங்களை அளித்த உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.
Editor's Choice

சீனாவின் பெயியான் நகரில் நடந்த மாரத்தான் போட்டியின் போது, ஏற்பட்ட ஆலங்கட்டி மழை, சூறாவளி காற்று, உறைபனி காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள பெயியான் நகரில், மஞ்சள்நதி ஸ்டோன் வனப்பகுதி அருகே நேற்று, மாரத்தான் போட்டி நடந்தது. அதில் 172 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்கள் பலர் 21 கி.மீ., தாண்டி சென்றனர். சிலர் 30 கி.மீ., நெருங்கினர். அப்போது திடீரென வானிலை மோசமடைந்தது. உறைபனி விழுந்ததுடன் பலத்த காற்றும் வீசியது. ஆலங்கட்டி மழை பெய்தது. இதில், பல வீரர்கள் சிக்கி கொண்டனர். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், மாரத்தான் பாதியில் நிறுத்தப்பட்டது. உள்ளூர் மீட்பு படையினர் விரைவாக செயல்பட்டு 18 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால், இந்த மோசமான வானிலையில் சிக்கி சம்பவ இடத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மற்றொருவரை காணவில்லை என தகவல் வெளியானது. தொடர்ந்து சில மணி நேரங்களில் அவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பக்கம் 15 / 90