Editor's Choice

கொரோனா தொற்றினால் மோசமான போக்கில் நீண்ட நேரம் வேலை செய்வது, ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்கிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று கவலை தெரிவித்துள்ளது.

நீண்ட வேலை நேரங்களுடன் தொடர்புடைய உயிர் இழப்பு குறித்த முதல் உலகளாவிய ஆய்வு, சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் ஆய்வறிக்கையாக சமர்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், நீண்ட வேலை நேரத்துடன் தொடர்புடையவர்கள் பக்கவாதம் மற்றும் இதய நோயால் சுமார் 745,000 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிக இறப்பு எண்ணிக்கையை கொண்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குனர் மரியா நீரா, ‘வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் வேலை செய்வது கடுமையான உடல்நலக் கேட்டை உருவாக்குகிறது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க உள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களில் 72% ஆண்கள் மற்றும் நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பதை காட்டுகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய உலக சுகாதார மையம் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு முடிவு காட்டுகிறது.

இந்த ஆய்வானது 194 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிபுரிவோர் ஒரு வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்வதால் அவர்களில் 35% பேர் பக்கவாதம் மற்றும் 35-40 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது இஸ்கிமிக் இதய நோயால் இறக்கின்றனர். இந்த ஆய்வு 2000-2016 காலகட்டத்தை உள்ளடக்கியது, எனவே COVID-19 தொற்றுநோயை அவர்கள் சேர்க்கவில்லை. ஆனால் உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் தொலைதூர வேலைகள் அதிகரிப்பு மற்றும் கொரோனா வைரஸ் அவசரநிலையின் விளைவாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை பணியாளர்களில் இந்த அபாயங்களை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில், அதிகமான வேலை நேரத்தை நோக்கிய போக்கை வளர்க்கக்கூடிய முன்னேற்றங்களை துரிதப்படுத்தி வருகிறது என உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இதனால், குறைந்தது 9 சதவீத மக்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் எனவும் மதிப்பிட்டுள்ளது.

 

Editor's Choice

சர்வதேச அளவில் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வசிக்கும் சமுதாயத்தினரிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, மகிழ்ச்சியுடன் வேலை பார்ப்பதற்கும். தங்குவதற்கும் சிறந்த நாடு என தைவான் பலர் தெரிவித்துள்ளனர்.

தைவான் குறித்த கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் பார்க்கும் வேலை மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளனர். 74 சதவீதம் பேர் வேலை - வாழ்க்கை சமநிலை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். விலைவாசி குறித்து 78 சதவிதம் பேரும், மருத்துவ சிகிச்சை தரம் குறித்து 96% பேரும் மகிழ்ச்சி என கூறியிருக்கிறார்கள். 80% பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் 62% பேர் அந்நாட்டில் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது எளிது என கூறியுள்ளனர்.

மேலும் இந்த டாப் 10 பட்டியலில் ஆச்சர்யமாக மெக்சிகோ இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் கோஸ்டாரிகா உள்ளது. நான்காம் இடத்தை தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியா பிடித்துள்ளது. இங்கு 69% தங்கள் வேலை மகிழ்ச்சி தருவதாக கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 85% வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்வதாக தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் போர்ச்சுகல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஈக்வடார், கனடா, வியட்நாம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மலேசியாவுக்கு அடுத்தப்படியாக தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் 10-ம் இடத்தில் உள்ளது. அங்கு 86% பேர் தங்கள் வேலை மகிழ்வை தருவதாகவும். 85% பேர் பொதுவாகவே வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

Editor's Choice

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில், 60 முதல் 65 சதவீதம் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. அவர்களின் ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைகிறது. 2 முதல் 3 நாட்களுக்குள், நிலை 80 க்குக் கீழே செல்வதால், உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, நுரையீரலை வலுப்படுத்துவது முக்கியமானதாகும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் நுரையீரலை, வைரஸானது நேரடியாக தாக்கும். இதனால், சுவாசித்தலின் அளவு குறைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சித் திணறல் ஏற்படக்கூடும். இத்தகைய சூழல் ஏற்படமால் தடுப்பதற்காக, நுரையீரலை நமது உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் கீழ்காணும் முறைகளின் மூலம் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

பூண்டு :

பூண்டில், ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள்.

தேன் :

தேன் பாக்டீரியா எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேன் நுரையீரலை வலுப்படுத்தும் முக்கிய பொருள் ஆகும். சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம். தேநீர், காபி போன்றவற்றில் சர்க்கரைக்கு தேனை சேர்த்தும் பயன் பெறலாம்.

மஞ்சள் :

மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுக்காக்கும் தன்மை கொண்டது. இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம். மஞ்சளுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தலாம். இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

அத்திப் பழம் :

ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன. அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுபடுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும்.

துளசி :

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.

Editor's Choice
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இம்முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து இந்த அட்டவணையை அறிவித்துள்ளது.
 
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும். இரவு பகலாக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 தொடங்கும். பாரம்பரிய பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கும். நான்காவது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் ஜனவரி 5 அன்றும், கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்றும் நடைபெறவுள்ளன.
 
26 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக சிட்னி அல்லாத வேறொரு மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் இறுதிப்போட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஆஷஸ் தொடர் ஜனவரி 27ஆம் தேதி கேன்பெர்ரா மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளும் மகளிர் ஆஷஸில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கும் இ்ந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
 
மும்பை ஓட்டலில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் இந்திய வீரர்கள் அதன் பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். அங்கு சென்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு தனிமைப்படுத்தலின் போது கட்டுப்பாடுகளுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும்.
 
முன்னதாக இங்கிலாந்து கிளப்புவதற்கு முன்பாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

தைவான் நாடு தமது பாஸ்போர்ட்டில் முக்கிய மாற்றம் மேற்கொள்ள உள்ளது. பாஸ்போர்ட்டின் முகப்பு கவரில், ‘Republic of China’ என்று ஆங்கிலத்தில் இருக்கும் வாசகத்தை நீக்க, தைவான் சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த வாசகம் நீக்கப்படுகிறது. சீன மொழியில் உள்ள அந்த வாசகம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, தைவான் நாட்டு மக்கள், வெளிநாடுகளுக்கு செல்ல முற்படும்போது அவர்களது பாஸ்போர்ட்டில் ‘Republic of China’ என்ற வாசகம் உள்ளதால், அவர்கள் நிறைய இன்னலுக்கு உள்ளாகினர். இந்தாண்டின் துவக்கத்தில், சீனாவின் வுஹான் பகுதியில் தான் கொரோனா வைரஸ் தொற்று துவங்கியது. தைவான் நாட்டில் பாதுகாப்பாக இருந்துவந்தபோதிலும், பாஸ்போர்ட்டில் ‘Republic of China’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் சீன நாட்டவர் என்று நினைத்து புறக்கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச நாடுகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தைவான் நாடு துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு, பாதிப்பை குறுகிய காலத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

சீனாவிடமிருந்து சமீபத்தில் பிரிந்த தைவான் நாடு, இந்த கொரோனா தொற்று பாதிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சொந்த இறையாண்மையை காக்கும் பொருட்டு, தங்களது பாஸ்போர்ட்டில் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா உள்ளிட்ட தொற்று பாதிப்பு நேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் உதவிகளை நேரடியாக பெறும் முறைக்கும் இந்த மாற்றம் பேருதவி புரியும் என்று அந்நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டில், பாஸ்போர்ட்டில், Republic of China’ என்று உள்ள இடத்தில் Republic of Taiwan என்ற ஸ்டிக்கரை, தைவான் நாட்டு மக்கள் ஒட்டிவந்தனர். இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட் கொண்டவர்களை, சீனாவிற்குள் வர அந்நாடு மறுப்பு தெரிவித்தது. சீனாவை தொடர்ந்து, இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட் கொண்ட நபர்களுக்கு, மக்காவ் மற்றும் ஹாங்காங் நாடுகளும் தடைவிதித்தன.

2015ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், சிங்கப்பூர் நாட்டில், இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட்களை வைத்திருந்த 3 பேரை கைது செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஸ்டிக்கர் கொண்ட பாஸ்போர்ட்களை கொண்டவர்களை, அமெரிக்காவும் வர தடைவிதித்தது.

தைவானின் இந்த ஸ்டிக்கர் நடவடிக்கை, தைவான் சுதந்திரம் பெற விரும்புவதாகவே, பீஜிங் நினைத்தது. இந்த நடவடிக்கையால், தைவான் – சீனா இடையேயான உறவில் மனக்கசப்பு இருந்துவந்ததை மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

Editor's Choice

அமெரிக்காவில் 3-ல் ஒரு பங்கு மக்கள் தொகையினருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள், இனி பொது இடங்களில் முக கவசம் அணியத் தேவையில்லை எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவிப்பிற்கு அமெரிக்காவில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முக கவசம் அணிவதில் அங்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதே சமயம் மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இவற்றைத் தவிர பிற இடங்களில் முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்க தேவையில்லை என வெளியான அறிவிப்பிற்கு அமெரிக்க செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. இது மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் என செவிலியர்கள் சங்கம் கூறியுள்ளது.
 
அமெரிக்க அரசின் முக கவசம் தொடர்பான இந்த அறிவிப்பிற்கு, பல்வேறு மாகாணங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள் இதனை ஏற்க மறுத்துள்ளன. இதற்கிடையில் வணிக நிறுவனங்கள் முக கவசம் தொடர்பாக சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. 
 
சில வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்றும் சில வணிக நிறுவனங்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளன. இதனால் முக கவசம் அணிய வேண்டுமா, இல்லையா என்பது குறித்த குழப்பம் தற்போது அமெரிக்கா முழுவதும் நிலவி வருகிறது.

பக்கம் 17 / 90