Editor's Choice

அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என இதுவரை 130 பேர் மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஒற்றை தலைவலி, முக்கில் இருந்து ரத்தம் கொட்டுதல், தலை சுற்றல், குமுட்டல் என பாதிக்கப்படும் அதிகாரிகள், இறுதியில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பணியாற்ற முடியாமல் அவதியுறும் நிலைக்கு செல்கிறார்கள் என கூறப்படுகிறது.

சீனா, கியூபா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளில் பணியாற்றியவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த மூளை பாதிப்பு, ஹவானா நோய்க்குறி என்று அழைக்கப்படுகிறது. 2016ல் கியூபாவின் ஹவானா நகரில் இதுபோன்ற பாதிப்பை அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்டதில் இருந்து இவ்வாறு அழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகள் மைக்ரோவேவ் தாக்குதலுக்கு இலக்காகிறார்களா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. மனித உடலை ஊடுருவும் மின்காந்த கதிர்வீச்சைக் கொண்டு நடத்துவதே இந்த தாக்குதல். இது போன்ற ஆயுதங்கள் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரஷியாவே அமெரிக்க உளவுபிரிவுக்கு எதிராக இந்த தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது. 

கடந்த காலங்களில் இதுபோன்ற பாதிப்புகளை அமெரிக்க அதிகாரிகள் எதிர்கொண்டது குறித்து ஆய்வு செய்த அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியம், மைக்ரோவேவ் தாக்குதல் நடந்திருக்க முகாந்திரம் உள்ளதாக கூறி உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

Editor's Choice

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அவருக்கு எதிராக, டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. 

மல்யுத்த வீரர் சாகர் தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கும் கடந்த 4ந்தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கிற்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது. எதிரணியை கடுமையாக தாக்கிய சுஷில் குமாரும், அவரது நண்பர்களும் தப்பிவிட்டனர்.

பலத்த காயங்களுடன் கிடந்த சாகர் தன்கட் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர்  உயிரிழந்தார்.  அவர் டெல்லி போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். முதலில், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய சுஷில். சண்டையில் ஈடுபட்டவர்களை தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.

ஆனால், அதற்கு பிறகு சுஷில் குமார் தலைமறைவானதால், வேறு வழியின்றி டெல்லி காவல்துறையினர் அவருக்கு எதிராக Look-out-Circular வெளியிட்டனர். மோதலில் ஈடுபட்ட பிற பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளையும் டெல்லி காவல்துறை பதிவு செய்தது. அதன்படி, சுஷில் குமாருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது என்று காவல்துறை கூறுகிறது. 

சுஷில் குமார் தற்போது ஹரித்வாரில் அமைந்திருக்கும் ஆசிரமம் ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மொபைலில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ மூலம் தாக்குதல் நடத்திய அனைவரின் முகங்களும் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனவே, ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரருக்கான சிக்கல்கள் மேலும் தீவிரமடைகின்றன.

Editor's Choice
எவரெஸ்ட் மலையின் கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல மலையேற்ற வீரா்களுக்கு அளித்திருந்த அனுமதியை சீனா ரத்து செய்தது.
 
கொரோனா நெருக்கடி காரணமாக, மலையேற்ற வீரா்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாளமும் சீனாவும் தடை விதித்திருந்தன.
 
இந்தச் சூழலில், தனது எல்லைக்குள் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையேற்றப் பாதையான கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல 38 மலையேற்ற வீரா்களுக்கு சீன அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை கடந்த வாரம் அளித்தது.
 
மலையேற்ற வீரா்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அவா்களுக்கு அந்த நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே அவா்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவா்கள் அனைவரும் தங்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அத்துடன் அவ்வப்போது அவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
 
இந்த நிலையில், நேபாளத்திலிருந்து மலையேற்ற வீரா்களுக்கு கொரோனா பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலையேற்ற அனுமதியை சீனா ரத்து செய்துள்ளது.
Editor's Choice

இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் அமித் சர்மா. இவர் Cheapflightsall.com என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைத்து உள்ளார்.

32 கோடி பக்கங்கள் உடைய இந்த இணையதளம் 5 டி.பி.க்கு சமமாகும். (1 டி.பி.=1000 ஜி.பி.) இந்த இணையதள முகவரியை விமான போக்குவரத்து வசதிகள் உள்ள 159 நாடுகளில் தொடர்புகொள்ள முடியும்.

ஏற்கனவே அமித் சர்மா, 6 முறை உலக சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை காட்டுத்தீயாய்  பரவத் தொடங்கிய போது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. ஆஸ்திரேலியர்கள், இந்தியாவில் இருந்து தடையை மீறி நாடு திரும்பினால் 5 ஆண்டு வரை சிறையும், 66 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரையில் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம்) விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த தடை உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் தயாரானது. இதில் 150 பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பேர் மட்டுமே பயணித்தனர்.
 
எஞ்சியவர்களில் பெரும்பாலோர் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதால் பயணிக்க முடியாமல் போய்விட்டது என இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் தெரிவித்தார்.
 
இந்த விமானம் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச்செல்ல டெல்லி வந்தபோது, ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வென்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Editor's Choice

பெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே வயது 48. இவர் 5 நாட்கள் கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து கழிவறையில் அமர்ந்துள்ளார்.

இவர் 165 மணி நேரம் கழிவறையில் அமர திட்டமிட்டார். ஆனால், 116 மணி நேரங்களிலேயே நிறுத்திவிட்டார். ஏன் இப்படி செய்தார் என்பதை பிரானே கூறுகையில்,  ‘என்னை நானே கேலிக்கு உள்ளாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இதை ஏன் செய்யக்கூடாது? என யோசித்தேன். 

மக்கள் என்னை கேலி செய்வதை விட நான் விரும்புவது வேறு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்களை நானும் கேலி செய்வேன். முன்னதாக 100 மணி நேரம் ஒருவர் கழிவறையில் அமர்ந்ததாக கேள்விப்பட்டேன். 

எனவேதான், அதைவிட அதிகமாக 165 மணி நேரம் அமர முயற்சித்தேன். ஆனால், கால் வலி மற்றும் உடல் அசதி காரணமாக 116 மணி நேரத்துடன் முடித்துக் கொண்டேன். இது அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனையாக அமையும் என நம்புகிறேன்’ என கூறினார். 

இதையடுத்து பிரானே சொன்னதுபோல யாரேனும் ஏற்கனவே இதுபோன்று கின்னஸ் உலக சாதனை யாரேனும் செய்துள்ளார்களா? என உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பக்கம் 21 / 90