Editor's Choice

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இந்தியாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 47 நாடுகள் வழங்கியுள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்க மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது, இந்தியா ஏராளமான மருந்துகள், மருத்துவ பொருட்களை அனுப்பியது. அதற்கு நன்றிக்கடனாக, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களும், நிறுவனங்களும், இந்திய வம்சாவளியினரும் போட்டி போட்டு மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றனர். அதனால், இதுவரை இல்லாத வகையில், இரு வாரங்களில் 3,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. வரும் நாட்களில், இந்த உதவி 7,000 கோடி ரூபாயாக உயரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.110 கோடி ஆகும்.

இந்த தொகை 'கேர்' (CARE), 'எய்டு இந்தியா' (Aid India), 'சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா' (Sewa International USA) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 73.47 கோடி ரூபாய், 18.36 கோடி ரூபாய், 18.36 கோடி ரூபாய் என, மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
Editor's Choice

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார்.  கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் ஒரு உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் 20-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மே 30ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.

ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம் ஏற்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

Editor's Choice

அமெரிக்காவில் தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒன்று மட்டும் உயிருடன் தத்தித் தத்தி நடைபோட்டுக் கொண்டிருந்தது.

தலையில்லா சேவலை தம்பதிகள் ஆப்பிள் பெட்டி ஒன்றில் வைத்து விட்டு சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் இறந்துவிடும், அதுவரை அது முண்டமாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் காலையில் வந்து பார்த்தபோதும் அது உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார் ஓல்சென். தலையில்லாத சேவலுக்கு மைக் என பெயரிட்டார் அவர்.

மைக்கைப் பற்றிய செய்தி அந்த வட்டாரம் முழுவதும் தீயைப் போல பரவியது. உள்ளூர் பத்திரிகையில் மைக் மற்றும் ஓல்செனின் புகைப்படங்களும், கட்டுரைகளும் வெளியாகின.

 மைக் என்ற அந்த சேவலை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.

"இந்த சம்பவத்தை கேட்டவர்களில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூற, அது உண்மையா இல்லையா என்று பந்தயங்களும் நடந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் கண்காட்சிகளை நடத்தும் ஹோப் வேட், ஃப்ரூட்டோவிற்கு வந்தார். மைக்கை பார்த்து உறுதி செய்துக் கொண்டார். தனது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருமாறு ஓல்ஸேனுக்கு அழைப்புவிடுத்தார்.

அவரின் அழைப்பை ஏற்று முதலில் சால்ட் லேக் நகரத்திற்கு சென்ற ஓல்ஸேன், முதலில் யூடா பல்கலைக்கழகத்திற்கு மைக்கை கொண்டு சென்றார். அங்கு மைக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

பல கோழிகள் மற்றும் சேவல்களின் தலையை வெட்டியும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதாவது வெட்டப்பட்ட பிறகு எத்தனை நேரம் அவை உயிர் வாழும் சாத்தியங்கள் இருக்கும் என்று ஆராயப்பட்டது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது. மைக்கின் உரிமையாளரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்பட்டது.

'மிராக்கிள் மைக்' என்று மைக்குக்கு பெயர் சூட்டினார் ஹோப் வேட். 'மிராக்கிள் மைக்' பற்றி 'லைஃப் மேகஸின்' கட்டுரை வெளியிட்டது.

அதற்கு பிறகு லாய்ட், கிளாரா மைக் மூவரும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.

தலை வெட்டப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும், ஒரு சிறிய சிரிஞ்ச் இல்லாத காரணத்தால் உயிரிழந்தது 'மிராக்கிள் மைக்'.

"கோழி மற்றும் சேவலின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள ஒரு சிறிய பகுதியில்தான் இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று".

மைக்கின் தலையை வெட்டியபோது, அதன் அலகு, முகம் மற்றும் கண்கள் வெளியே வந்துவிட்டன, ஆனால் அதன் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீதமும் வெட்டுப்படவில்லை. இதனால், மைக்கின் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி வருகின்றனர். எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் சிலருக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவே விரும்புகின்றனர்.

இருப்பினும் நமது வீடுகளில் செய்யப்படும் பூரியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் எண்ணெய் அதிகம் என்பதால் இப்போதெல்லாம் வீடுகளில் அடிக்கடி பூரி செய்வதில்லை.  எனவே பூரி பிரியர்களுக்கு அடிக்கடி பூரி சாப்பிட ஒரு மாற்று வழி உள்ளது. எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் பூரி செய்யலாம். 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு ஒரு கப்

காய்கறிச் சாறு அல்லது கீரைச் சாறு அல்லது மூலிகை சாறு 50 மி.லி

இந்துப்பு அல்லது எலுமிச்சை சாறு அல்லது நெல்லிப்பொடி இவற்றில் ஏதேனும் ஒன்று தேவையான அளவு

தேங்காய் பால் (அரை மூடி தேங்காய் துருவலிருந்து பாலை எடுத்துக் கொள்ளவும்)

நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், உலர் பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்று 100 கிராம்

செய்முறை

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்க்காமல் காய்கறிச் சாறு அல்லது கீரைச்சாறு சேர்த்து பிசையவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது நெல்லிப் பொடி அல்லது இந்துப்பை சேர்க்க வேண்டும்.

பின்னர் மாவை சப்பாத்திக் கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ளவும்

ஒரு அகன்ற வாயுடைய பாத்திரத்தில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

தேய்த்து வைத்துள்ள பூரி மாவை ஒரு ஜல்லிக் கரண்டியில் வைத்து கொதிக்கின்ற நீரில் அப்படியே இரண்டு நிமிடம் கரண்டியுடன் வைக்க வேண்டும். பூரி பதமாக வந்தவுடன் கரண்டியுடன் வெளியே எடுத்து விட வேண்டும். அருமையான எண்ணெய் இல்லாத பூரி ரெடி.

 இந்த பூரிக்கு நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, தேன், உலர் பழங்கள் ஏதேனும் ஒன்றை சேர்த்து சாப்பிடலாம். இனிப்பை தவிர்க்க நினைப்பவர்கள் சட்னி அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

முழுக்க முழுக்க எண்ணெய் இல்லாமல் தண்ணீரிலே இந்த பூரியை செய்வதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. மேலும் இதில் சேர்க்கப்படும் காய்கறி மற்றும் மூலிகை சாறுகள் உடலுக்கு நன்மை தரும். எனவே இனி அடிக்கடி வீட்டில் இந்த சுவை மற்று ஆரோக்கியம் நிறைந்த பூரியை சமைத்து சாப்பிடுங்கள்.

Editor's Choice

பூமி நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பிய சீன ராக்கெட்டின் 18 டன் பெரிய பாகம், யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல், மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்தது. விண்வெளி மையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் 29ம் தேதி ஹைனனில் உள்ள வின் சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு சீனா ஏவியது. விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் தன்னுடைய பணியை முடித்ததும் கட்டுப்பாட்டை இழந்தது. இது பூமியை நோக்கி திரும்பியது. ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட பெரிய பாகம் பூமியில் எந்த இடத்தில் விழும் என்பதை அமெரிக்காவால் கூட கணிக்க முடியவில்லை. இது மக்கள் வாழும் பகுதியில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என அச்சம் நிலவியது. இவ்வாறு விண்ணில் ஏவப்பட்ட பூமியை நோக்கி கட்டுப்பாடின்றி திரும்பும் 6வது அதிக எடை கொண்ட பொருள் இது என்பதால் உலக நாடுகள் உற்றுநோக்கின.

இந்நிலையில், சீன நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் ராக்கெட்டின் 18 டன் பெரிய பாகம் மாலத்தீவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சீனா உறுதி செய்தது. இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகளும் உறுதிபடுத்தின. ராக்கெட்டின் பாகம் யாருக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் கடலில் விழுந்ததாலும், இது சீனாவின் பொறுப்பற்ற செயலால் நடந்தது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எனவே சீனா விண்வெளி கட்டுப்பாடுகளை மீறுவதாக நாசாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகளே எதிர்த்தாலும் இந்த விஷயத்தை அவர்கள் பெரிது படுத்துவதாக சீனா கண்டுகொள்ளாமலே உள்ளது.

Editor's Choice

கேரளாவில் யானை ஒன்று மனிதர்களுடன் கிரிக்கெட் விளையாட அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. கண்ணுபிரேம் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் யானை ஒன்று தன் தும்பிக்கையில் தென்னை மட்டையால் ஆன ”பேட்” வைத்திருக்கிறது.

அங்குள்ள மனிதர்கள் அந்த யானைக்கு பந்துவீச யானை சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொறுக்கியது. இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

"இன்சைட்  அவுட் கவரஸ். தும்பிக்கைக்கும் கண்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு அற்புதம். அபார ஆட்டம் #Gannu #cricket #incredible" என்று சேவாக் இந்த வீடியோவில் எழுதியுள்ளார். 

இதற்கிடையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து யானை பேட்டிங் செய்ததைப் பாராட்டினார்.

அபாரமாக பேட்டிங் செய்யும் யானைக்கு இங்கிலாந்தின் பாஸ்போர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என கிரிக்கெட் வீர்ர வாகன் ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவில் உள்ள இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் இருந்தால் பேட்டிங் லைன் அப் வலுப்பெறும் என கூறி கிண்டல் செய்துள்ளார். 

"நிச்சயமாக இந்த யானைக்கு ஆங்கில பாஸ்போர்ட் உள்ளது !!" என்று வாகன் ட்வீட் செய்துள்ளார்.

 

பக்கம் 25 / 90