தலையை வெட்டிய பின்னும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் - 70 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அதிசயம்

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவில் தலை வெட்டப்பட்ட சேவல் ஒன்று, தலையில்லாமல் முண்டமாகவே 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று கொலராடோவில், ஃப்ரூட்டாவில் உள்ள தங்களது பண்ணையில், லாய்ட் ஓல்செனும் அவரது மனைவி கிளாராவும் இறைச்சிக்காக கோழிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒன்று மட்டும் உயிருடன் தத்தித் தத்தி நடைபோட்டுக் கொண்டிருந்தது.

தலையில்லா சேவலை தம்பதிகள் ஆப்பிள் பெட்டி ஒன்றில் வைத்து விட்டு சென்று விட்டார்கள். சற்று நேரத்தில் இறந்துவிடும், அதுவரை அது முண்டமாக அலைந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் காலையில் வந்து பார்த்தபோதும் அது உயிருடன் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார் ஓல்சென். தலையில்லாத சேவலுக்கு மைக் என பெயரிட்டார் அவர்.

மைக்கைப் பற்றிய செய்தி அந்த வட்டாரம் முழுவதும் தீயைப் போல பரவியது. உள்ளூர் பத்திரிகையில் மைக் மற்றும் ஓல்செனின் புகைப்படங்களும், கட்டுரைகளும் வெளியாகின.

 மைக் என்ற அந்த சேவலை நினைவுகூரும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.

"இந்த சம்பவத்தை கேட்டவர்களில் சிலர் இதை கட்டுக்கதை என்று கூற, அது உண்மையா இல்லையா என்று பந்தயங்களும் நடந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யூட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரத்தில் கண்காட்சிகளை நடத்தும் ஹோப் வேட், ஃப்ரூட்டோவிற்கு வந்தார். மைக்கை பார்த்து உறுதி செய்துக் கொண்டார். தனது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருமாறு ஓல்ஸேனுக்கு அழைப்புவிடுத்தார்.

அவரின் அழைப்பை ஏற்று முதலில் சால்ட் லேக் நகரத்திற்கு சென்ற ஓல்ஸேன், முதலில் யூடா பல்கலைக்கழகத்திற்கு மைக்கை கொண்டு சென்றார். அங்கு மைக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.

பல கோழிகள் மற்றும் சேவல்களின் தலையை வெட்டியும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதாவது வெட்டப்பட்ட பிறகு எத்தனை நேரம் அவை உயிர் வாழும் சாத்தியங்கள் இருக்கும் என்று ஆராயப்பட்டது.

மைக் தலைவெட்டப்பட்டும் உயிர்வாழ்வதை ஆராய்ச்சியாளர் உறுதி செய்தபிறகு மைக் கண்காட்சிகளிலும், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது. மைக்கின் உரிமையாளரின் வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்பட்டது.

'மிராக்கிள் மைக்' என்று மைக்குக்கு பெயர் சூட்டினார் ஹோப் வேட். 'மிராக்கிள் மைக்' பற்றி 'லைஃப் மேகஸின்' கட்டுரை வெளியிட்டது.

அதற்கு பிறகு லாய்ட், கிளாரா மைக் மூவரும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

மைக்குக்கு தினமும் திரவ வடிவிலான உணவுகள் சொட்டு மருத்து கொடுப்பதுபோல் நேரடியாக உணவுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது.

தொண்டையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க, ஊசி செலுத்தும் சிரிஞ்ச் மூலமாக மைக்கின் உணவுக் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால் ஒரு நாள் சிரிஞ்ச் கொண்டு செல்ல மறந்துவிட்ட நிலையில், மாற்று ஏற்பாடு செய்வதற்குள் தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மைக் இறந்துவிட்டது.

தலை வெட்டப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும், ஒரு சிறிய சிரிஞ்ச் இல்லாத காரணத்தால் உயிரிழந்தது 'மிராக்கிள் மைக்'.

"கோழி மற்றும் சேவலின் முழுத் தலையானது, அதன் கண்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு அமைப்பின் பின்புறமுள்ள ஒரு சிறிய பகுதியில்தான் இருக்கிறது என்பது ஆச்சரியமான ஒன்று".

மைக்கின் தலையை வெட்டியபோது, அதன் அலகு, முகம் மற்றும் கண்கள் வெளியே வந்துவிட்டன, ஆனால் அதன் கழுத்து நரம்புகளும், மூளையின் 80 சதவீதமும் வெட்டுப்படவில்லை. இதனால், மைக்கின் இதயத்துடிப்பு, சுவாசம், பசி, செரிமானப்பாதை அனைத்தும் இயல்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM