Editor's Choice

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்  மே 7, 1861

இரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞர். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கன மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877-ம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.
 
நடிகை கண்ணம்பா மறைந்த தினம் மே 7

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் 'மனோகரா' திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927-ம் ஆண்டு கண்ணாம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார்.

இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934-ல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியாவெங்கும் நாடகங்களை நடத்தி வந்தார்கள்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார். ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார்.

1938-ல் பி. என். ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில் நடித்தார். கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ். ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது.

அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார். கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

இவர் 1964-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி காலமானார்.

Editor's Choice

கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  அப்போது ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

பாதிப்பு மிகுந்த பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது முழு ஊரடங்கு விதிக்கலாமா? என போன்றவை விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதனையடுத்து தமிழகத்தில் 2 வாரங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு  வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் வேகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24,898 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
1,52,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 26,465 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 26,445, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்த வந்த 20 பேர் என 26,465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
 
சென்னையில் ஏற்கனவே 6,678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 6,738 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 124 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் உயிரிழந்தனர்.
 
கொரோனாவால் மேலும் 197 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 44 பேர் உயிரிழந்தனர். 
 
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 47 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் கொரோனாவால் பலியானார்.
 
கொரோனாவில் இருந்து மேலும் 22,381 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 11,73,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,35,355 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. 
Editor's Choice

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் பாதியிலேயே காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது. 4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

இதுகுறித்து கருத்து பிசிசிஐ தலைவர் கங்குலி, வீரர்கள் யாரும் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்திருக்கும் அறிக்கையும் அப்படி தான் கூறுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி அதிகரித்தது என்பதை கூறுவது கடினம். அதே போல் தான் ஐ.பி.எல். தொடரிலும் கொரோனா எப்படி வந்தது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பது மிகவும் கடினம்.

கடந்த ஆண்டை போலவே இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று முதலில் ஆலோசித்தோம். ஆனால் போட்டி அட்டவணையை திட்டமிட்ட சமயத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகமிக குறைவாக இருந்ததால் இந்தியாவிலேயே போட்டியை நடத்துவது என்று முடிவுக்கு வந்தோம். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை உள்ளூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த மும்பையில் கூட ஐ.பி.எல். தொடக்ககட்ட லீக் ஆட்டங்களை எந்தவித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்தது துரதிர்ஷ்டவசமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் நலமுடன் உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் குணப்படுத்தப்பட்டு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டது. அதுவும் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வதற்கு கடும் கட்டுப்பாடு இருந்தது. எந்த இடத்திற்கும் விமான மூலம் செல்லாமல் தரைமார்க்கமாகவே பயணித்தோம். ஆனால் இந்தியாவில் 6 நகரங்களில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் விமானம் மூலம் தான் மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இந்த பயணத்தின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். மேலும் நாட்டின் நிலைமையையும் நீங்கள் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் கொரோனாவில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம் என கங்குலி கூறினார்.

 

Editor's Choice

IPL 2021 இல் சில அணிகளில் சில வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவிய பிறகு, போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. பிசிசிஐ எடுத்த இந்த முடிவைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இப்போது அவரவர் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். 

இப்போது IPL நடக்காததால், வீரர்களுக்கு அவர்களுக்கு வேண்டியவற்றை செய்ய நேரம் கிடைத்துள்ளது. கிரிக்கெட் ஆடாத இந்த நேரத்தில் தங்களை பிஸியாக வைத்துக்கொள்ள வீரர்கள் பல வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல, சுரேஷ் ரெய்னாவும் அத்தகைய ஒரு முக்கியமான வேலையில்தான் ஈடுபட்டுள்ளார். 

ரெய்னா ஒரு வேடிக்கையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதில், சுரேஷ் ரெய்னா சமையலறையில் கடி தயாரிப்பதைக் காண முடிகிறது. கடி என்பது மோர் குழம்பு வகையாகும். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பி காண்கிறார்கள். 

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சுரேஷ் ரெய்னா, "கடி நேரம்!! அக்காவின் ஸ்பெஷல் ரெசிபி." என்று எழுதியுள்ளார். மேலும், இந்த வீடியோவில், ரசிகர்களை வீட்டிலேயே இருக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

IPL அணியான CSK-வின் நிர்வாகம், மைக்கேல் ஹஸ்ஸியை விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு மூத்த அதிகாரி ஏ.என்.ஐ-யிடம் கூறுகையில், "பேட்டிங் பயிற்சியாளர் மைக்கே ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரது நிலைமையை சிறப்பாகக் கையாள, அவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்றார். 

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் தடை உள்ளது. ஆகையால், IPL-லில் பங்குகொண்ட ஆஸ்திரேலிய வீரர்களை, சார்டர்ட் விமானம் மூலம் மாலத்தீவுகள் அல்லது இலங்கை வழியாக ஆஸ்திரேலியா அனுப்புவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவிலிருந்து கிளம்பும் முன், ஹஸ்ஸிக்கு தொற்று குணமாகி, அவரிடம் நெகடிவ் சான்றிதழ் இருக்க வேண்டும். 

 

Editor's Choice
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
 
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
விராட் கோலி (கேப்டன்) ,  ரஹானே (துணைகேப்டன்), ரோகித் ஷர்மா, சுக்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவிசந்திரன் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
 
கேஎல் ராகுல், சஹா ஆகியோர் உடற்தகுதியை பொறுத்து இந்திய அணியில் தேர்தெடுக்கப்படுவர் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Editor's Choice

ஆன்லைன் கேப் சேவையை வழங்கும் நிறுவனமான ஊபர் (UBER) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மையத்திற்கு செல்பவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ள இந்த நிறுவனம் இதன் மூலம், இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறைக்கு பெரும் உதவியை செய்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் அச்சத்தை அளிக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அரசின் தடுப்பூசி செயல்முறை தொடங்கப்பட்டது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், UBER-ன் இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது. ஏனெனில் பண தட்டுப்பாடு காரணமாக பலரால தடுப்பூசி மையத்திற்கு கூட செல்ல முடிவதில்லை. 

தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீங்கள் ஒரு தடுப்பூசி மையத்திற்குச் செல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் UBER ஐ புக் செய்தால் போதும். UBER வண்டி உங்களை இலவசமாக தடுப்பூசி மையத்திற்கு அழைத்துச் செல்லும். இதில், நீங்கள் UBER Go, UBER Go Sidan மற்றும் UBER Premium ஐ மட்டுமே புக் செய்ய முடியும். ஆனால் வண்டியை முன்பதிவு செய்யும் போது, ​​நீங்கள் 10M21V என்ற இந்த விளம்பர குறியீட்டை (Promo Code) பயன்படுத்த வேண்டும். இருப்பினும், தடுப்பூசி மையத்தை அடையும் வரையிலான வண்டி கட்டணம் ரூ. 300 க்குள் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் 150 ரூபாயாக  இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

முதலில், நீங்கள் UBER செயலியைத் திறக்க வேண்டும். இங்கே, வாலெட்டில் சென்று, ப்ரொமோ கோடை கிளிக் செய்ய வெண்டும். இங்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரொமோ கோட், அதாவது, 10M21V-ஐ உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, நேவிகேஷனின் பிக்-அப் / டிராப்-ஆஃப் லொகொஷனை, அதாவது உங்களை எங்கிருந்து எந்த எடத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதை செட் செய்ய வேண்டும். டிராப் இடத்தில் தடுப்பூசி மையத்தின் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு 'கன்ஃபர்ம் ட்ரிப்'-ல் கிளிக் செய்ய வேண்டும். இருப்பினும், பயனரால் எடுக்கப்பட்ட வண்டியில் அவர் நிஜமாகவே தடுப்பூசி மையத்துக்குதான் செல்கிறாரா என்பதை ஊபர் எப்படி சரிபார்க்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இது தவிர, ஊபர் அதன் பயனர்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மையத்தின் தகவல்களையும் அளித்து உதவுகிறது. நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய பட்டியலையும் ஊபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தடுப்பூசி செயல்முறை செயலில் உள்ள நாட்டின் 36 நகரங்களில் ஊபர் தனது சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பக்கம் 27 / 90