தேர்தல்கள் பல ஆச்சரியங்களை கொடுக்கும், சில திகைப்பூட்டல்களையும், அதிர்ச்சியையும் தன்னுள்ளே வைத்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், எல்லா வியூகங்களையும் உடைத்தெறிந்து அரசியலின் பின்புலத்தில் இருந்து செயல்படும், சாணக்கிய வியூகம் அமைப்பவர் என்று அறியப்படும் ஒருவரின் பதவி விலகும் அறிவிப்பு கலவையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் மதியூகியின் நிறுவனம் பணியாற்றிய இரு கட்சிகள் வெற்றியடைந்துள்ளது. பலரின் பார்வையும் அவரை நோக்கி குவியும் நிலையில், இனிமேல் தான் அரசியல் வியூகம் அமைக்கும் பணியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பணியாற்றினார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றுவிட்டது. இந்த திருப்தியுடன் எனது பணியில் இருந்து விலகுகிறேன் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
''மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்ற மாயதோற்றம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், எல்லாத் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்று விடாது என்று தொடர்ந்து கூறியதே இன்று உண்மையாகி இருக்கிறது”.
பிரதமர் மோடியின் பிரபலம் ஒன்றின் அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சி எல்லாத தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எனது கணிப்புப்படியே, பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை”.
9 ஆண்டுகள் அரசியல் உத்தி ரீதியிலான பணியை திருப்தியுடன் செய்துவிட்டேன். இனிமேல் குடும்பத்தினருடன் காலத்தைச் செலவிட விரும்புகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தில் உள்ள பிற நண்பர்கள் இனி பணிகளை முன்நின்று நடத்துவார்கள்''.
பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்ற பலத்த கேள்விகளும், சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.