Editor's Choice

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி கோடீசுவரர் இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணிகளுக்காக ரூ.75 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் வினோத் கவுசலா, 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 15 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 500 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், 100 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வழங்குமாறு இந்தியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகளிடம் இருந்தும், ஆஸ்பத்திரிகளிடம் இருந்தும் தினந்தோறும் வேண்டுகோள் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதில் தாமதம் செய்வது மேலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, அவசர நிதி உதவியாக ரூ.75 கோடி வழங்குகிறோம் என கூறியுள்ளார். இதுபோல் மற்றவர்களும் உதவ முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Editor's Choice

சமவெளிகளில் நாட்டுக்குள் வாழும் மக்களுக்கு கடல் மீன்களைத் தெரியும். ஆனால் மீனவர்களையோ, அவர்களின் வாழ்க்கையோ தெரியாது. மீனவர்களின் கலாச்சாரம் தெரியாது. காலம் காலமாக இம்மக்கள் உரிய மதிப்புப் பெறாமலே வாழ்ந்து வந்துள்ளனர்.

பொதுவாக மீனவ மக்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள். உணர்ச்சிவசப்பட்டு அடிதடிகளில் இறங்குபவர்கள். யாருக்கும் அடங்க மாட்டார்கள் என்பது போன்ற கருத்துக்கள்தான் பரவலாக சமவெளி மனிதர்களிடம் பதிவாகியுள்ளன. மீனவர்களை காலாகாலத்திலே கடலுக்கு அனுப்பாவிட்டால் மாவட்டத்தில் கடும் சட்ட ஒழுங்குப் பிரச்னை உருவாகிவிடும் என்று ஆட்சித் தலைவர் ஒருவர் கூறினார். மக்கள் இயக்கங்களின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்புகளுக்குமே கூட மீனவ மக்களைப் பற்றி முழுமையான புரிதல் இதுவரை இல்லை..

நாகை, கடலூர், பாண்டிச்சேரி, சென்னைப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் கலாச்சாரத்துக்கும் குமரி மாவட்ட மீனவ மக்களின் கலாச்சாரத்துக்கும் பலத்த வேறுபாடு உண்டு. குமரி மாவட்டத்தில்  மீனவ மக்கள் அநேகமாக கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சர்ச்சுகளே அம்மக்களின் வாழ்க்கை மீது செல்வாக்குச் செலுத்தும் சமூக கலாச்சார நிறுவனங்களாக உள்ளன. மீன் பிடி தொழில் தொடர்பான எல்லா விஷயங்களும் சர்ச்சின் ஆளுகையின் கீழே-சர்ச் கமிட்டியிலேயே முடிவு செய்யப்படுகின்றன. சர்ச் கமிட்டி என்பது இயல்பாகவே வசதி படைத்த மீன் வியாபாரிகளின் செல்வாக்கில் இருக்கும். ஏழை மீனவர்களின் சொல் அங்கே அம்பலம் ஏறுமா என்பது கேள்விக்குறியே. தூத்துக்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ பரதவ இன மக்களின் முழு உரிமையாக இருந்த கடலும் கடல்சார் தொழில்களும் நாடார் மற்றும் பிற சாதியாரின் கட்டுப்பாட்டுக்குள் போனது.

பிற மாவட்டங்களில் மீனவ கிராமங்களில் இன்னும் பழைய நாட்டாண்மைகளின் செல்வாக்கு நீடிக்கிறது. நாட்டாமைகளின் தலைமையிலான பஞ்சாயத்து ஏற்பாடு வலுமிக்கதாக இருக்கிறது. சுனாமி நிவாரணப் பொருட்களையே இந்த நாட்டாமைகளின் வழியேதான் பல கிராமங்களில் கொடுக்க முடியும். இந்த நாட்டாமை என்பது பரம்பரையாக வருகிறது. எனினும் இன்றளவும் மீன் பிடி தொழிலில் சமபங்கீடு என்பது நீடிக்கிறது. சொந்தப் படகு இல்லாத மீனவத் தொழிலாளிக்கும் மீன் பிடியில் உரிய பங்கு கிடைத்து விடுவதால் பொருளாதார ரீதியாக சமவெளியில் வாழும் நிலமற்ற விவசாயக் கூலியைவிட வசதியாகவே வாழ்கிறார்.

பொருளாதாரரீதியாக கூடுதல் வசதி இருந்தாலும் மீனவர்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாட்டின் பிற சமூகத்தவரிடமிருந்து தனிமைப்பட்ட ஒரு வாழ்க்கையே வாழுகிறார்கள். எல்லாச் சாதியிலும் குடிகாரர்களும் முரடர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் மீனவ மக்கள் என்றாலே அப்படித்தான் என்கிற கருத்து பிற மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிவாகியிருப்பது உண்மை.

கடற்கரையிலேயே படுத்திருந்து கடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து எப்போது கடலுக்குள் இறங்கினால் மீன் அதிகமாகக் கிடைக்கும் என்பதை உணர்ந்து அது எந்நேரமாக இருந்தாலும் படகுகளை கடலில் செலுத்தி மீன் பிடிக்கப் போகிறார்கள். எப்போது திரும்புவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. திரும்பும்போது மீன்களோடு திரும்புவார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. நிச்சயமின்மைதான் நிச்சயம் என்பதான ஒரு தினசரி வாழ்க்கையும் கடலோடும் அலைகளோடும் போராடும் உடல் வலிமைசார்ந்த வருமானமும் போன்ற காரணங்களே அவர்களின் குணநலன்களைத் தீர்மானிக்கின்றன. நேரடியாக இயற்கையோடு போராடும் ஒரு சமூகமாக இந்த நவீன காலத்திலும் இம்மீனவ மக்களே இருக்கிறார்கள்.

எப்போது கடல் சீற்றம் கொண்டு வீசினாலும் புயல் மையம் கொண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானாலும் பாதிக்கப்படுவது மீனவ மக்கள்தான். விஞ்ஞான தொழில்நுட்பம் சகல துறைகளிலும் வியக்க வைக்கும் சாதனைகள் புரிந்துவரும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும்கூட மீனவமக்கள் கட்டுமரங்களில் படகுகளில் புயல் பற்றியோ கடலில் அல்லது வானநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியோ எச்சரிக்கை செய்யும் எந்த நவீன கருவியும் இல்லாமல்தான் தினசரி கடலுக்குள் சென்று வருகிறார்கள்.

தென்னிந்திய மீனவர் சங்கக் கூட்டமைப்பினால் நடத்தப்படுகிற கூட்டுறவு சங்கங்கள் மாத்திரமே மீனவர் நலனைக் கருத்தில் கொண்டு இயங்குகின்றன. அரசால் இயக்கப்படும் ஒருசில கூட்டுறவு சங்கங்கள் அவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றனவேயன்றி மீனவர்களின் தேவைகளைப் பற்றி அவைகளுக்கு அக்கறை இல்லை.

போதிய கல்வி பெறும் ஏற்பாடுகளோ உயர்கல்விக்கான ஆலோசனைகள் பெறும் வாய்ப்புகளோ அற்ற நிலையில் பெருவாரியான மீனவ மக்கள் மத்தியில் கல்லாமை நீடிக்கிறது. கடலுக்குப் போகும் வாழ்க்கை படித்து என்ன செய்யப்போகிறோம் என்கிற மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது.  இதனை களைய அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும். 

Editor's Choice

கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். டி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கோல்கட்டா அணி வீரர்கள் சந்தீப் வாரியார், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் ஐதராபாத் அணியின் விருத்திமான் சஹா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக  பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். 
 
ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. மே.30 ஆம் வரை நடக்க இருந்த இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Editor's Choice

ஐக்கிய அரசு அமீரகம் ஒரு பாலைவனம் சார்ந்த பகுதி என்பதால் இந்த பகுதியில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. இங்கு ஆண்டுக்கு 100 மில்லி மீட்டருக்கும் குறைவாகவே மழைப்பொழிவு ஏற்படுகிறது.

இதன் காரணமாக மலை அடிவாரங்களில் உள்ள பகுதிகளில் விவசாயத்திற்காகவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் அமீரக அரசானது, அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் ஆதரவில் செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை ஏற்படுத்தியது. இதற்காக அமீரகத்தில் முதன் முதலில் கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.

இந்த திட்டத்தில் செயற்கை மழையை வரவழைக்க ரசாயன விதையை தூவும் ‘கிளவுட் சீடிங்’ எனப்படும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘கிளவுட் சீடிங்’ எனப்படுவது விமானம் மூலமாக ரசாயனம் சிறு சிறு உருளைகளில் பொடியாக அடைக்கப்பட்டு இறக்கைகள் மூலம் வானில் எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மேகங்களில் புகையாக தூவி விட வைப்பதாகும்.

மேகத்தில் விதைப்பு செய்யும் ‘கிளவுட் சீடிங்’ முறையில் பீச் கிராப்ட் கிங் ஏர் சி-90 என்ற விமானம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுசிறு குழாய்கள் போல் உள்ள அமைப்பில் வைக்கப்படுகிறது. அந்த குழாய் அமைப்புகள் சிறப்பு கருவிகளுடன் விமானத்தின் இருபுறமும் உள்ள இறக்கை பகுதியில் பொருத்தப்படுகிறது.

பிறகு உயரத்தில் எடுத்துச் செல்லப்பட்டு அந்த குழாய்களில் தீப்பற்ற வைக்கப்பட்டு எரிய வைப்பதின் மூலம் அதில் இருந்து வெளிவரும் ரசாயன புகையானது மேகத்தில் கலக்கப்படுகிறது. இந்த முறையில் தொடர்ந்து ஆண்டுதோறும் வானில் ரசாயனம் தூவப்பட்டு வருகிறது.

2021ம் ஆண்டில் மட்டும் ஜனவரி முதல் மார்சி வரையிலான 3 மாதங்களில் 75 தடவை அமீரக வானில் ‘கிளவுட் சீடிங்’ முறையில் ரசாயன பவுடர் தூவப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு மொத்தம் 390 முறை ‘கிளவுட் சீடிங்’ செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ‘கிளவுட் சீடிங்’ முறை மூலம் அமீரகத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு 100 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Editor's Choice

உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்கான திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாகக் தெரிவித்துள்ளனர்.

65 வயதான பில்கேடஸ் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் உலகமெங்கும் தொண்டு செய்து வந்தார். 56 வயதான மெலிண்டா கேட்ஸ் 1987-ம் ஆண்டு பில் கேட்ஸை சந்தித்தார். இவர்கள் இருவரும் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.
 
பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான உதவிகளை செய்து வந்துள்ளோம். இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை' எனத் தெரிவித்துள்ளனர்.
Editor's Choice
ஜப்பானின் மத்திய பகுதியில் ஷிஜுவோக்கா மாகாணத்தில் மகினோஹாரா நகரில் சூறாவளி போன்ற பலத்த காற்று  வீசியது.  இதில், கட்டிடத்தின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
 
ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன.  கார்கள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன.  இதனால் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.  எனினும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.  கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது.
 
இதேபோன்று கடந்த சனிக்கிழமை மாலை பலத்த காற்று வீசியதில் கம்பங்கள் சாய்ந்தன.  3 பேர் லேசான காயமடைந்து உள்ளனர்.  3,200 வீடுகளுக்கு வேண்டிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்கம் 30 / 90