சமவெளிகளில் நாட்டுக்குள் வாழும் மக்களுக்கு கடல் மீன்களைத் தெரியும். ஆனால் மீனவர்களையோ, அவர்களின் வாழ்க்கையோ தெரியாது. மீனவர்களின் கலாச்சாரம் தெரியாது. காலம் காலமாக இம்மக்கள் உரிய மதிப்புப் பெறாமலே வாழ்ந்து வந்துள்ளனர்.
பொதுவாக மீனவ மக்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள். உணர்ச்சிவசப்பட்டு அடிதடிகளில் இறங்குபவர்கள். யாருக்கும் அடங்க மாட்டார்கள் என்பது போன்ற கருத்துக்கள்தான் பரவலாக சமவெளி மனிதர்களிடம் பதிவாகியுள்ளன. மீனவர்களை காலாகாலத்திலே கடலுக்கு அனுப்பாவிட்டால் மாவட்டத்தில் கடும் சட்ட ஒழுங்குப் பிரச்னை உருவாகிவிடும் என்று ஆட்சித் தலைவர் ஒருவர் கூறினார். மக்கள் இயக்கங்களின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்புகளுக்குமே கூட மீனவ மக்களைப் பற்றி முழுமையான புரிதல் இதுவரை இல்லை..
நாகை, கடலூர், பாண்டிச்சேரி, சென்னைப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் கலாச்சாரத்துக்கும் குமரி மாவட்ட மீனவ மக்களின் கலாச்சாரத்துக்கும் பலத்த வேறுபாடு உண்டு. குமரி மாவட்டத்தில் மீனவ மக்கள் அநேகமாக கத்தோலிக்க திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். சர்ச்சுகளே அம்மக்களின் வாழ்க்கை மீது செல்வாக்குச் செலுத்தும் சமூக கலாச்சார நிறுவனங்களாக உள்ளன. மீன் பிடி தொழில் தொடர்பான எல்லா விஷயங்களும் சர்ச்சின் ஆளுகையின் கீழே-சர்ச் கமிட்டியிலேயே முடிவு செய்யப்படுகின்றன. சர்ச் கமிட்டி என்பது இயல்பாகவே வசதி படைத்த மீன் வியாபாரிகளின் செல்வாக்கில் இருக்கும். ஏழை மீனவர்களின் சொல் அங்கே அம்பலம் ஏறுமா என்பது கேள்விக்குறியே. தூத்துக்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ பரதவ இன மக்களின் முழு உரிமையாக இருந்த கடலும் கடல்சார் தொழில்களும் நாடார் மற்றும் பிற சாதியாரின் கட்டுப்பாட்டுக்குள் போனது.
பிற மாவட்டங்களில் மீனவ கிராமங்களில் இன்னும் பழைய நாட்டாண்மைகளின் செல்வாக்கு நீடிக்கிறது. நாட்டாமைகளின் தலைமையிலான பஞ்சாயத்து ஏற்பாடு வலுமிக்கதாக இருக்கிறது. சுனாமி நிவாரணப் பொருட்களையே இந்த நாட்டாமைகளின் வழியேதான் பல கிராமங்களில் கொடுக்க முடியும். இந்த நாட்டாமை என்பது பரம்பரையாக வருகிறது. எனினும் இன்றளவும் மீன் பிடி தொழிலில் சமபங்கீடு என்பது நீடிக்கிறது. சொந்தப் படகு இல்லாத மீனவத் தொழிலாளிக்கும் மீன் பிடியில் உரிய பங்கு கிடைத்து விடுவதால் பொருளாதார ரீதியாக சமவெளியில் வாழும் நிலமற்ற விவசாயக் கூலியைவிட வசதியாகவே வாழ்கிறார்.
பொருளாதாரரீதியாக கூடுதல் வசதி இருந்தாலும் மீனவர்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகரீதியாகவும் நாட்டின் பிற சமூகத்தவரிடமிருந்து தனிமைப்பட்ட ஒரு வாழ்க்கையே வாழுகிறார்கள். எல்லாச் சாதியிலும் குடிகாரர்களும் முரடர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் மீனவ மக்கள் என்றாலே அப்படித்தான் என்கிற கருத்து பிற மக்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிவாகியிருப்பது உண்மை.
கடற்கரையிலேயே படுத்திருந்து கடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து எப்போது கடலுக்குள் இறங்கினால் மீன் அதிகமாகக் கிடைக்கும் என்பதை உணர்ந்து அது எந்நேரமாக இருந்தாலும் படகுகளை கடலில் செலுத்தி மீன் பிடிக்கப் போகிறார்கள். எப்போது திரும்புவோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. திரும்பும்போது மீன்களோடு திரும்புவார்களா என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. நிச்சயமின்மைதான் நிச்சயம் என்பதான ஒரு தினசரி வாழ்க்கையும் கடலோடும் அலைகளோடும் போராடும் உடல் வலிமைசார்ந்த வருமானமும் போன்ற காரணங்களே அவர்களின் குணநலன்களைத் தீர்மானிக்கின்றன. நேரடியாக இயற்கையோடு போராடும் ஒரு சமூகமாக இந்த நவீன காலத்திலும் இம்மீனவ மக்களே இருக்கிறார்கள்.
எப்போது கடல் சீற்றம் கொண்டு வீசினாலும் புயல் மையம் கொண்டு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானாலும் பாதிக்கப்படுவது மீனவ மக்கள்தான். விஞ்ஞான தொழில்நுட்பம் சகல துறைகளிலும் வியக்க வைக்கும் சாதனைகள் புரிந்துவரும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும்கூட மீனவமக்கள் கட்டுமரங்களில் படகுகளில் புயல் பற்றியோ கடலில் அல்லது வானநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியோ எச்சரிக்கை செய்யும் எந்த நவீன கருவியும் இல்லாமல்தான் தினசரி கடலுக்குள் சென்று வருகிறார்கள்.
தென்னிந்திய மீனவர் சங்கக் கூட்டமைப்பினால் நடத்தப்படுகிற கூட்டுறவு சங்கங்கள் மாத்திரமே மீனவர் நலனைக் கருத்தில் கொண்டு இயங்குகின்றன. அரசால் இயக்கப்படும் ஒருசில கூட்டுறவு சங்கங்கள் அவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றனவேயன்றி மீனவர்களின் தேவைகளைப் பற்றி அவைகளுக்கு அக்கறை இல்லை.
போதிய கல்வி பெறும் ஏற்பாடுகளோ உயர்கல்விக்கான ஆலோசனைகள் பெறும் வாய்ப்புகளோ அற்ற நிலையில் பெருவாரியான மீனவ மக்கள் மத்தியில் கல்லாமை நீடிக்கிறது. கடலுக்குப் போகும் வாழ்க்கை படித்து என்ன செய்யப்போகிறோம் என்கிற மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனை களைய அனைத்து தரப்பினரும் பாடுபடவேண்டும்.













