கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் சூரை மீன் (டுனா) தான். அதே போல் உலகில் விற்பனை செய்யப்படும் மீன், மீன் சார்ந்த உணவுகளில் 8 சதவீதம் இவ்வகை மீன் தான். இந்த மீன் வகையை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 3ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் வரிச்சூரை, மஞ்சள் துடுப்பு சூரை, பெரிய கண் சூரை என மூன்று வகைகள் உள்ளன. இந்த மீன்கள் ஒரே சீரான தட்பவெப்ப நிலையை விரும்பும். அந்த நீரோட்டத்தை அடையாளம் கண்டு கடல் வழியாக கண்டம் விட்டு கண்டம் செல்லும் இயல்புடையது.
‘டுனா’ மீன்கள் உலகிலேயே மிகச் சுவையானவையாம். பசிபிக் கடலில் அதிகம் கிடைக்கும் இந்த மீனின் ருசிக்கு ஜப்பானியர்கள் அடிமை. அதிலும் ‘ப்ளூஃபின் டுனா’ இன்னும் சுவை அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘ப்ளூஃபின் டுனா’ மீன் ஏலம் விடப்பட்டது. 222 கிலோ எடையுள்ள இந்த மீன் இந்திய மதிப்பில் 9 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் இதுதான். இதை ஏலத்துக்கு எடுத்தவர்கள் ஒரு சிறிய மீன் துண்டை 1,300 ரூபாய்க்கு விற்றார்கள். ஜப்பானில் டுனா மீன் தொடர்ந்து பிடிக்கப் பட்டதால், தற்போது இந்த மீன் பெருமளவு அழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.













