Editor's Choice

பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டவர். 'அவியல்' படத்தை தொடர்ந்து தற்போது சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். நாட்டுப்புற பாடல்கள், சினிமா, தேர்தல் பிரசார பாடல்கள் என பலவற்றை பாடியுள்ளார். 

ஸ்டாலின்தான் வர்ராரு... விடியல் தரப்போறாரு பாடல் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் அந்தோனிதாசன்.

 அரசியல் தொடர்பான பாடல்கள் பாடக்கூடாது, அப்படிங்கற முடிவுல இருந்தேன். ஆனா, எனக்கு திரைத்துறையில பல வாய்ப்புகள் கொடுத்த மதன் கார்க்கி கேட்டபோது மறுக்க முடியலை. இதுமட்டுமில்லாம, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி காலத்துல நடந்த 'சென்னை சங்கமம்' மாதிரியான நிகழ்ச்சி மூலமா என்னை மாதிரியான பல நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் வெளிய தெரிஞ்சாங்க. எங்களுடைய வாழ்வாதாரமும் மேம்பட்டது. அதனால, இந்த வாய்ப்பு கிடைச்ச போது என்னுடைய நன்றிக்கடன் திருப்பி செலுத்தற விதமாதான் இந்த தேர்தல் பிரச்சார பாட்டை பாடினேன். தேர்தல் முடிவுகளுக்கு முன்னாடி ஸ்டாலின் அய்யாவை மரியாதை நிமித்தமா சந்திச்ச போது, இந்த பாடலை பாடினதை பத்தி சொன்னேன். 'நீங்கதானா அது? அருமையா பாடியிருக்கீங்க'ன்னு சொன்னார். என்னுடைய சினிமா பாடல்கள் போலவே இந்த பாட்டும் ஹிட்டாகி பலர்கிட்டையும் கொண்டு போய் சேர்த்ததுக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மதன் கார்க்கிக்கும் இந்த பாட்டுடைய இசையமைப்பாளர் ஜெரால்டுக்கும் நன்றி" என்கிறார் அந்தோனிதாசன்.

"சினிமா பாடல்கள் ஹிட் அப்படின்னா ஒரே நேரத்துல உலகம் முழுக்க பலர்கிட்டயும் போய் சேரும். ஆனா, நாட்டுப்புற பாடல்கள் அப்படி இல்ல. அந்த ஊர் மக்கள் கிட்ட மட்டும்தான் போய் சேரும். என்னை மாதிரியான பல நாட்டுப்புற கலைஞர்கள் இப்போ சினிமாக்குள்ள வரது நாட்டுப்புற பாடல்களை இன்னும் அதிக மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கான ஒரு பெரிய தளமா இருக்கு. இப்போ சமூகவலைதளங்களோட வளர்ச்சி நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கு. அப்படி இருக்கும் போது சினிமால கதைக்கு தேவையானதை பாடறதுங்கறதை தாண்டி, சமூக வலைதளங்கள் மூலமா தனியிசையையும், நாட்டுப்புற பாடல்களையும் கொண்டு போய் மக்கள் கிட்ட சேர்க்கறது இன்னும் எளிமையாகி இருக்கு. இதுக்கான வரவேற்பும் மக்கள்கிட்ட நல்லாவே இருக்கு".

"நம்ம பண்பாடு, வாழ்வியல் இதெல்லாம் சொல்ல இங்க நாட்டுப்புற கலை அவசியமானதா இருக்கு. என்னைய கேட்டா, இசையோட சேர்த்து பஞ்ச பூதங்கள் ஆறுன்னும், உலக அதிசயங்கள் எட்டுன்னும் சொல்லுவேன். அந்த அளவுக்கு இசை அப்படிங்கறது எல்லாருக்குமே சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம். முன்னாடி எல்லாம் இந்த கலையை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கு ஊர் ஊரா கச்சேரிகள் நடத்துவோம். இப்போ இந்த ஆன்லைன் காலத்துல அது ரொம்பவே சுலபமாகிடுச்சு. நிறைய புது கலைஞர்களும் வராங்க. மக்களுக்கும் அவங்களுடைய இசை பிடிக்குது அப்படிங்கற போது அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்குது" என்கிறாரர் அந்தோனிதாசன்.

Editor's Choice

நீருக்கு அடியில் மறைந்திருக்கும் தங்களது கிராமத்தை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிராமவாசிகள் சென்று பார்த்து வரும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது.

மேற்கு இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் சின்னஞ்சிறிய மாநிலமான கோவா, ஒரு காலத்தில் போர்த்துகீசியர்களின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. பின்னர் 1961ம் ஆண்டு இந்தியாவுடன் கோவா இணைக்கப்பட்டது.

இந்த மாநிலத்தில் உள்ள ‘குர்தி’ என்ற கிராமத்தில் சுமார் 600 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் வசித்து வந்தனர். தற்போது இந்த கிராமம் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. கோடை காலத்தில் நீர் வற்றிய பிறகு அதாவது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த  கிராமத்தினை நம்மால் பார்க்க முடியும். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம், காவல்துறையினரின் செக்போஸ்ட் என பல்வேறு கைவிடப்பட்ட கட்டடங்களை பார்ப்பதற்கு வித்தியாசமானதாக தோன்றலாம். அந்த கிராமத்தின் இந்த நிலைக்கு காரணம் கிராமவாசிகளின் தியாக உணர்வு என்று கூட கூறலாம்.

மேற்குதொடர்ச்சி மலைகளாலும், சல்லூலிம் (Selaulim) ஆற்றினாலும் சூழப்பட்ட இந்த கிராமத்தில் 1986 வரை மக்கள் வசித்து வந்தனர். கோவாவின் முதலாவது முதலமைச்சர் தயானந்த் பந்தோத்கர் கோவா மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில், தெற்கு கோவாவின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சல்லூலிம் நீர்ப்பாசன திட்டத்தினை உருவாக்க எண்ணினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தெற்கு கோவாவின் நீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்றாலும் அதன் காரணமாக குர்தி, சல்லூலிம் கிராமங்கள் நீரில் மூழ்கக்கூடிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

இருப்பினும் கோவா மாநிலத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அரசு நிறைவேற்ற முடிவெடுத்தது. இதற்கு கிராமத்தினரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுக்கொடுக்க முன்வந்தனர். அவர்களுக்கு பக்கத்து கிராமங்களில் மாற்று இருப்பிட வசதி செய்து தரப்பட்டு இழப்பீடும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சல்லூலிம் அணை கட்டப்பட்டது. இதுவே கோவா மாநிலத்தின் முதல் அணை என்பது சிறப்பாகும். இந்த அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டதால் இந்த கிராமங்கள் நீரில் மூழ்கின. இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறை, கோடை காலத்தில் நீர் வற்றும் போது ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் மட்டும் நீரில் மூழ்கியிருக்கும் குர்தி கிராமம் வெளிப்படும்.

குர்தி கிராமத்தில் வசித்த இந்துக்களும், கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இங்கு ஒன்றாக சேர்ந்து தத்தமது வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். தங்களது பிறப்பிடத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை செல்லும் இவர்கள் சந்தித்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.

 

Editor's Choice

ராஜஸ்தான் மாநிலத்தில் கருப்புப் பூஞ்சையால் (மியூகோர்மைகோசிஸ்) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை தொற்றுநோயாக அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் தொற்றுநோய் சட்டம், 2020 படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொத்த அறிவிப்பை ஹரியாணா அரசும் வெளியிட்டுள்ளது.இதுவரை இந்தியாவின் கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா மற்றும் பீகாரில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Editor's Choice

ஆஸ்திரேலியாவின் மூத்த மனிதரான டெக்ஸ்டர் க்ரூகர் இன்றும் ஆரோக்கியமுடன் வாழ்ந்து வருகிறார்.

மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி காரணமாக அதிகரிக்கப்பட்ட மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் இன்றைய நவீன யுகத்தில் வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஆஸ்திரேலியாவின் மூத்த மனிதரான டெக்ஸ்டர் க்ரூகர் இன்றும் ஆரோக்கியமுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு வயது 111. மேலும் இந்த வயதிலும் அபார நினைவு திறனை கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது வசிப்பவர்களிலேயே, மிக வயது மூத்தவர் டெக்ஸ்டர் க்ரூகர் தான் என்று ஆஸ்திரேலியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவனர் ஜான் டெய்லர் தகவல் தெரிவித்துள்ளார். கிறிஸ்டினா குக் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டில் 114 வயது மற்றும் 148 நாட்களில் இறந்தார். ஆஸ்திரேலியாவின் முந்தைய வயதான மனிதர் முதல் உலகப் போரின் வீரர் ஜாக் லோக்கெட் ஆவார். அவர் 2002 இல் 111 வயது மற்றும் 123 நாட்களில் இறந்தார்.

அவருக்கு பிறகு தற்போது டெக்ஸ்டர் க்ரூகர் தான் ஆஸ்திரேலியாவின் மிக வயதான மனிதராக உள்ளார் என்பதை ஜான் டெய்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இத்தனை வயதிலும் தான் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியங்கள் குறித்து டெக்ஸ்டர் க்ரூகர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதிலும் முக்கியமாக கோழி மூளைகளை தான் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது என கூறி அசைவ பிரியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் டெக்ஸ்டர் க்ரூகர் ஒரு கால்நடை மருத்துவரும் கூட, மேலும் இவர் பெரிய பண்ணையை அமைத்து கால்நடைகளை பராமரித்த ஓய்வு பெற்ற கால்நடை வளர்ப்பாளரும் ஆவார். தற்போது இவரது சரியான வயது 111 வயது மற்றும் 125 நாட்கள். டெக்ஸ்டர் க்ரூகர் கிராமப்புற குயின்ஸ்லாந்து மாநில நகரமான ரோமாவில் உள்ள தனது நர்ஸிங் ஹோமில், ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தனது நீண்ட ஆயுள் பற்றி பேசியுள்ளார். அப்போது தனது உணவில் அடிக்கடி கோழி இறைச்சி சேர்த்து கொள்வதும் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு காரணம் என்றார்.

அதிலும் மிக, சிறிய அளவில் இருக்கும் கோழி மூளை என்னுடைய நீண்ட ஆயுளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கோழியின் மூளை ஒரே ஒரு கடிக்கு தான் வரும் என்றாலும் அவை நமக்கு ஆரோக்கியத்தை தரும் சுவைமிக்க சிறிய விஷயங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கோழியின் மூளை பறவையின் கண் பந்தை (eye ball) விட சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெக்ஸ்டர் க்ரூகரின் 74 வயது மகனான கிரெக், தன் தந்தையின் வழியை பின்பற்றி தாமும் ஆரோக்கியமாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது சுயசரிதை டெக்ஸ்டர் க்ரூகர் எழுதி வருகிறார்.

Editor's Choice

பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. 

பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரை பகுதியில் உள்ள ஒலெரான் எனும் தீவில் உள்ள ஃபெசெள என்பவரது வீட்டில் சேவல் மொரிஸ் வளர்க்கப்படுகிறது. ஒலெரான் தீவு, பிரான்ஸில் உள்ள நகரவாசிகள் தங்கள் விடுமுறைக்காக வந்து தங்கும் இடமாக மாறியுள்ளது.

மொரிஸ் தினமும் விடியற்காலையில் கூவுவது, தனக்கு இடையூறாக இருப்பதாக சேவலின் உரிமையாளர்களிடம் மற்றொரு வீட்டு உரிமையாளர் பிரொன் தெரிவித்தார்.

“இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது,” என பிரொன் குறிப்பிட்டுள்ளார்.

சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த வழக்கு துரித கதியில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது.

“கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். நகரவாசிகள் உணர்ந்து செயற்பட வேண்டும். அவர்கள் எதுவும் சொல்லக்கூடாது,” என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மொரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது,” என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மூலம் சேவல் மொரிஸ் பெரும் ஆதரவை பெற்றது. அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர்.

கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Editor's Choice

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4வது அலை வீசி வருகிறது.  இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது,

அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த ஏப்ரல் 25ந்தேதி முதல் மே 11ந்தேதி வரை 4 மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 
 
ஆனால், டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  அதனால், ஜப்பானில் அவசரகால நிலையானது மே 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
 
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 10 வாரங்களே மீதமுள்ளன.  இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில், ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்த சர்வேயில், 1,527 பேர் பங்கு பெற்றனர். அவர்களில் 43 சதவீதத்தினர் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 40 சதவீதத்தினர், நாட்டில் கொரோனா பாதிப்பினை முன்னிட்டு போட்டிகளை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் பதிலளித்து உள்ளனர்.
 
போட்டிகளை நடத்த 14 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
 
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 59 சதவீதத்தினர், ஒருவேளை போட்டி நடத்தப்பட்டால் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்றும், 33 சதவீதத்தினர் குறைவான ரசிகர்கள் வரலாம் என்றும் தெரிவித்தனர்.  வழக்கம்போல் போட்டிகளை நடத்தலாம் என 3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்து உள்ளனர்.
 
வெளிநாட்டில் இருந்து வர கூடிய போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரால் கொரோனா வைரசானது பரவ கூடிய ஆபத்து உள்ளது என்று 87.7 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர்.
 

பக்கம் 18 / 90