Editor's Choice

எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வருகிற ஜூலை 1, 2021 முதல் புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வருகிறது. புதிய கட்டணங்கள் ஏடிஎம் திரும்பப் பெறுதல், காசோலை புத்தகம், பரிமாற்றம் மற்றும் பிற நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். எந்தவொரு நபரும் எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும்.

எஸ்பிஐ (SBI) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது. இந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் வழங்கப்படுகிறது. BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி கிளை மற்றும் ஏடிஎம்கள் மூலம் 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுக்கலாம். அதன்பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.15 +GST கட்டணமாக வசூலிக்கப்படும்.

எஸ்.பி.ஐ தனது BSBD வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 செக் லீப்களை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, 10 லீப் செக் புக்கிற்கு ரூ.40 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 25 லீப் செக் புக்கிற்கு ரூ.75 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். மேலும் அவசரமாக செக்புக் தேவைப்பட்டால் அதில் 10 அல்லது அதன் ஒரு பகுதிக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 

எஸ்பிஐ மற்றும் எஸ்பிஐ அல்லாத வங்கி கிளைகளில் BSBD கணக்கு வைத்திருப்பவர்களால் நிதி அல்லாத பரிவர்த்தனை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது.

Editor's Choice

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், ஒலிம்பிக் வெற்றியாளரான சுஷில்குமார் இந்திய ரெயில்வேயில் பணியாற்றி வந்தார். வடக்கு ரெயில்வேயில் மூத்த வணிக மேலாளராக சுஷில்குமார் பணியாற்றி வந்தார். 
 
தற்போது, கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுஷில்குமார் பணிநீக்கம் செய்யப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Editor's Choice

ந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த ஆண்டு PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்தது. இதை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் இதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். 

இதுவரை ஆதார் அட்டை காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்துகொண்டிருந்தது. ஆனால் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்துக்கும் UIDAI ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து சேவ் செய்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்தலாம். டிஜிட்டல் ஆதார் அட்டைக்கு பிசிக்கல் அட்டையைப் போலவே அனைத்து அங்கீகாரமும் உள்ளது.

இப்போது ஒரே ஒரு மொபைல் எண்ணுடன் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் PVC ஆதார் அட்டையை உருவாக்கிவிடலாம். PVC ஆதார் அட்டையை பராமரிப்பது மிகவும் எளிதானதாகும். இது பிளாஸ்டிக்கில் இருப்பதால் இதை வைத்திருப்பது எளிதாகிறது. இதன் அளவு ஏடிஎம் டெபிட் கார்டு போன்றுதான் இருக்கும். அதை எளிதாக உங்கள் பாக்கெட்டில் அல்லது பணப்பையில் வைத்துக்கொள்ளலாம். PVC ஆதார் அட்டையை உருவாக்கிக்கொள்ள வெறும் 50 ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் போதும். 

1. பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால்,  uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற வலைத்தளத்தில் அதை செய்யலாம்.
2. ஆதார் அட்டை எண், மெய்நிகர் அடையாள எண் (Virtual ID Number) அல்லது பதிவு எண் ஆகியவற்றை இணையதளத்தில் உள்ளிட வேண்டும்.
3. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி இதை ஆர்டர் செய்ய வெண்டும். சில நாட்களுக்குப் பிறகு அது உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் மொபைல் எண் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், அந்த நிலையிலும், நீங்கள் பி.வி.சி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்த வழியை பின்பற்ற வேண்டும்.
1. https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint இன் வலைத்தளத்துக்கு செல்லவும்
2.  ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யுங்கள்
3. பாதுகாப்பு குறியீட்டை நிரப்பவும். 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 
4. பாதுகாப்புக் குறியீட்டை நிரப்பி, 'my mobile not registered' அதாவது 'என் மொபைல் பதிவு செய்யப்படவில்லை' என்ற பெட்டியில் டிக் செய்யவும்.
5. உங்கள் மொபைலில் வந்த OTP ஐ உள்ளிடவும்
6. ரூ .50 கட்டணத்தை செலுத்தியவுடன் உங்கள் விண்ணப்பம் நிறைவடையும். 

பி.வி.சி ஆதார் அட்டை வழக்கமாக ஆன்லைனில் விண்ணப்பித்த இரண்டு வாரங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Editor's Choice

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  தொற்று பரவல்  சற்று குறையத் தொடங்கியதும்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. எனினும், சர்வதேச எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன. 

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்தை படிப்படியாக துவங்க அல்ஜீரியா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு வாரத்திற்கு இரு விமானங்களும், இஸ்தான்புல், பார்சிலோனா, துன்சியா ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என்று அல்ஜீரியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
 வெளிநாட்டில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் பயணத்திற்கு 36 மணி நேரம் முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டிற்குள் வந்ததும் ஐந்து நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு ஆகும் செலவையும் பயணத்திற்கு முன்பே செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அல்ஜீரியா விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 
 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படும் இல்லாவிடில் மேலும் 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அல்ஜீரியா அரசு தெரிவித்துள்ளது. 
Editor's Choice

பிரெஞ்சு ஆடம்பர பொருட்களுக்கான பிரபல குழுமம் LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) 186.2 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக, ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

போர்ப்ஸின் ரியல் டைம் பில்லியனர் தரவரிசைப்படி, அர்னால்ட் அவர்களுக்கு 186.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து உள்ளது. அமேசான்  ஜெப் பெசோஸின் 186 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உடன் ஒப்பிடும்போது, ​​இது 300 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்து அதிகம் உள்ளது.

டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX )தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk), ஜெப் பெஸோஸ் ஆகியோரை விட அர்னால்ட் முன்னிலையில் இருக்கிறார், எலான் மஸ்கிற்கு 147.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக  ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

உலக வர்த்தகம், தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, வர்த்தக நிறுவங்களுக்கு சேவை அளித்து வரும் கன்பேரிசன் என்ற நிறுவனம், உலகின் வளர்ந்த நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், வர்த்தகம் நடவடிக்கைகள் அதிகரித்து, வேலைவாய்ப்புகளும் பெருகத் தொடங்கியுள்ள நிலையில், ஆடம்பர சந்தையின் வர்த்தகமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளது. இதன் மூலம் பல ஆடம்பர பிராண்டுகளை வைத்திருக்கும் லூயிஸ் உய்ட்டன் (LVMH) நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரித்ததுள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமேசான் நிறுவனர் 2026 ஆம் ஆண்டிலேயே உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்றும், அந்த நேரத்தில் அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

Editor's Choice
உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களை பட்டியலிட்டால் அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் கட்டாயம் இடம்பெறும். அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் கோலிக்கு, கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் மட்டும் இல்லாது விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.  
 
கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.  இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், விராட் கோலியை விட அதிக  சம்பளம் பெறுகிறார். இந்தப்பட்டியலில் விராட் கோலி, 2 ஆம் இடத்திலேயே உள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பிசிசிஐயின் ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் உள்ளார். அவருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.7 கோடியை பிசிசிஐ வழங்குகிறது. அதேவேளையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட். ஆண்டுக்கு 7,00,000 பவுண்டுகளை சம்பளமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்குகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.7.22 கோடியாகும்.  
 
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் சம்பளமே விராட் கோலியை விட அதிகம் என்பது வியக்கும்படியாக உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளமாக பெறுகிறார்.  
 
கடந்த 2020- ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் விராட் கோலி இடம் பிடித்து இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் விராட் கோலி, அந்த அணியிடம் இருந்து  ரூ.17 கோடியை பெறுகிறார். 

பக்கம் 14 / 90