வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. எனினும், சர்வதேச எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்தன.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்தை படிப்படியாக துவங்க அல்ஜீரியா அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு வாரத்திற்கு இரு விமானங்களும், இஸ்தான்புல், பார்சிலோனா, துன்சியா ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என்று அல்ஜீரியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளும் பயணத்திற்கு 36 மணி நேரம் முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் வந்ததும் ஐந்து நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இதற்கு ஆகும் செலவையும் பயணத்திற்கு முன்பே செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அல்ஜீரியா விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படும் இல்லாவிடில் மேலும் 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அல்ஜீரியா அரசு தெரிவித்துள்ளது.













