ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இம்முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து இந்த அட்டவணையை அறிவித்துள்ளது.
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும். இரவு பகலாக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 தொடங்கும். பாரம்பரிய பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கும். நான்காவது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் ஜனவரி 5 அன்றும், கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்றும் நடைபெறவுள்ளன.
26 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக சிட்னி அல்லாத வேறொரு மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் இறுதிப்போட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஆஷஸ் தொடர் ஜனவரி 27ஆம் தேதி கேன்பெர்ரா மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளும் மகளிர் ஆஷஸில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விராட் கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் மும்பையில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அங்கு முதலில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கும் இ்ந்திய அணி, அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
மும்பை ஓட்டலில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்ததும் இந்திய வீரர்கள் அதன் பிறகு தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்கள். அங்கு சென்றதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தம்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அங்கு தனிமைப்படுத்தலின் போது கட்டுப்பாடுகளுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்படும்.
முன்னதாக இங்கிலாந்து கிளப்புவதற்கு முன்பாக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.













