பல லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

SOCIAL SHARE
Pin It

கடந்த வாரம் திங்கட்கிழமை "தி எகானமிக் டைம்ஸ்" மற்றும் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளிதழ்களில் முதல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வெளியானது. இந்தியாவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய விரும்புவதாக ஒரு நிறுவனத்தின் பெயரில் அந்த விளம்பரம் வெளியாகி இருந்தது.

500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால், இந்திய மதிப்பில் சுமார் 36 லட்சம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு இந்தியாவில் அமெரிக்கா ஒட்டுமொத்தமாகச் செய்திருக்கும் முதலீட்டின் மதிப்பே 7 பில்லியன் டாலர்கள்தான்.

விளம்பரத்தில் வெளியான முதலீட்டின் மதிப்பு அமெரிக்காவின் மொத்த முதலீட்டின் மதிப்பைப் போல 71 மடங்கு.

அந்த நிறுவனத்தின் பெயர் Landomus Reality ventures inc. விளம்பரத்தில் குழுமத்தின் தலைவர் பிரதீப் குமார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பணம் மிக, மிக அதிகம். பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நாளிதழ்களில் விளம்பரம். இவை எல்லாம் அசாதாரணமாக தென்பட்டதால் இது தொடர்பான புலனாய்வில் தனியார் நிறுவனம் இறங்கியது.

நிறுவனத்தின் https://landomus.com என்ற இணையதளத்தை ஆய்வு செய்தது. அந்த இணையதளத்தில் இருப்பது ஒரேயொரு பக்கம்தான். நாளிதழ் விளம்பரத்தில் என்ன கூறப்பட்டிருந்ததோ அது அந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பொதுவாக நிறுவனங்களின் இணையதளங்களில் "About Us" என்ற பகுதியில் நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் இடம்பெறுவது வழக்கம். எந்தெந்தப் பகுதிகளில் நிறுவனம் இயங்கி வருகிறது என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இந்த இணையதளத்தில் இடம்பெறவில்லை.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் பிரமாண்டக் கட்டடங்களைக் கொண்ட புகைப்படத்தை முகப்புப் பக்கத்தில் கொண்டிருக்கிறது.

நிறுவனத்தின் அணி என்ற தலைப்புடன் 10 பேரின் புகைப்படங்களும் அவர்களின் பதவிகளும் உள்ளன. ஆனால் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதுமில்லை.

இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி பிரதீப் குமார் சத்தியபிரகாஷ் என்பவர் தலைவர் மற்றும் சிஇஓ, மம்தா என்பவர் இயக்குநர் இவர்கள் தவிர மேலும் 8 பேரின் படங்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு முகவரி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி எண் எதுவும் தரப்படவில்லை.

இதுவரை செயல்படுத்திய திட்டங்கள், நிறுவனத்தின் தொலைநோக்கு போன்ற விவரங்கள் இணையத்தில் இடம்பெறவில்லை. மேலும் அலுவலகம் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் சென்று பார்த்தபோது அதற்கான அடையாளம் எதுவும் இல்லை. 36 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதாகக் கூறிய லேண்டாமஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை.

நாளிதழில் வெளியான விளம்பரம் குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

நிறுவனம் தொடர்பாக மேலும் ஆய்வு செய்தபோது, அந்த இணையதளம் கர்நாடகாவில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யுனைட்டட் லேண்ட் பேங்க் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது தெரியவந்தது.

அமெரிக்காவிலும், பெங்களூரிலும் லேண்டமாஸ் நிறுவனத்துக்கு எந்த அலுவலகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM