இளவரசர் பிலிப் 'ராயல் வால்ட்' அறையில் நல்லடக்கம்!

SOCIAL SHARE
Pin It

கடந்த 9-ம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உடலானது இன்று புனித ஜார்ஜ் தேவாலயத்தின் 'ராயல் வால்ட்' பெட்டகத்தில்  முறைப்படி இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தனது 99-ம் வயதில் பொது வாழ்வுக்கு விடைகொடுத்திருக்கும் இளவரசர் பிலிப்பின் நாட்டுப் பற்று, விசுவாசம், சேவை போன்றவற்றைப் பறைசாற்றும் விதமாக அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்று தங்கள் மன்னருக்கு இறுதி விடை கொடுத்தனர். அதிலும், குறிப்பாக இளவரசர் பிலிப்பின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த 'பிரிட்டன் கப்பற்படை' அவருக்குக் குண்டுகள் முழங்க முழு மரியாதை செலுத்தியது.

9-ம் தேதி வின்ட்சர் கோட்டையில் உயிரிழந்த இளவரசரின் உடலானது இத்தனை நாள்களாக அங்குள்ள தனி தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. இன்று நல்லடக்க நாளை முன்னிட்டு காலை 11 மணியளவில் ராணுவ கொடி, மாலை போர்த்தப்பட்டு, இளவரசரின் கடற்படை தொப்பி மற்றும் அவர் பயன்படுத்திய வாள் ஆகியவை சவப்பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது. சவப்பெட்டியை விண்ட்சர் கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவந்து `கிரனடியர் கார்ட்ஸ்' எனும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க எட்டு நிமிட அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த அணிவகுப்பில், இளவரசர் பிலிப் தன் மறைவிற்கு முன்னதாக விரும்பிய பாடலின் இசை ஒலித்தது. அப்போது ராணி எலிசபெத் மட்டும் சபையில் தனியாக அமர்ந்திருந்தார்.

கொரோனா பரவல் காரணமாகக் கலந்துக் கொள்ளாத இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி வாயிலாக நிகழ்வுகளைப் பார்த்தார்.
 
இறுதி ஊர்வலத்தின் போது இருபுறமும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். நடுவில் லேண்ட் ரோவர் வாகனத்துடன் இளவரசர் ஹாரிஸ், வேல்ஸ் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நடந்து சென்றனர். ராணி எலிசபெத் மட்டும் ஸ்டேட் பென்ட்லி என்றழைக்கப்படும் காரில் கோட்டையிலிருந்து முன்னதாகவே புனித ஜார்ஜ் தேவாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வின்ட்சர் கோட்டைக்கு மிக அருகாமையில் ஜார்ஜ் தேவாலயம் அமைந்திருந்ததால் இறுதி ஊர்வலமானது சில நிமிடங்களிலேயே முடிந்தது. ராணி எலிசபெத் தேவாலயத்தை அடைந்ததும், 'தேசிய கீதம்' இசைக்கப்பட்டது.

இளவரசரின் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்த லேண்ட் ரோவர் வாகனம் ஜார்ஜ் தேவாலயத்தை அடைந்ததும், தி கிங்ஸ் ட்ரூப் ராயல் ஹார்ஸ் வகை பீரங்கிகள் தொடர்ந்து ஒரு நிமிட நேரம் இடைவிடாமல் வானத்தை நோக்கிச் சுடப்பட்டது. மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கான அபாய ஒலி ஒலித்தது. மக்கள் அனைவரும் தங்கள் மன்னர் பிலிப்பிற்கு தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினார்கள். அந்த நேரத்தில், லண்டன் மற்றும் இதர விமான நிலையங்களில் 6 நிமிடங்களுக்கு விமானங்கள் புறப்படவோ, தரையிறங்கவோ இல்லை. தேவாலயத்தின் நுழைவு படிக்கட்டுகளில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைத் தேவாலய பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் மத குருக்கள் பெற்றுக்கொண்டு ராணுவத்தினரின் உதவியுடன் தேவாலயத்திற்கு உள்ளே கொண்டுசென்றனர்.

3 மணிக்குத் தொடங்கிய சடங்குகள் சுமார் 4 மணியளவில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இளவரசர் பிலிப்பின் பூத உடலானது புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அமைந்துள்ள 'ராயல் வால்ட்' எனப்படும் சவப்பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'ராயல் வால்ட்' 1810-ம் ஆண்டு உயிரிழந்த மன்னர் ஜார்ஜுக்காக கட்டப்பட்டது. அது தொடங்கி, ஜார்ஜ் IV, மன்னர் வில்லியம்ஸ் IV என அரசகுடும்பத்தை சேர்ந்த பலரது உடல்கள் அங்குப் புதைக்கப்பட்டுள்ளன. இளவரசர் பிலிப்பின் உடல் தற்போது ராயல் வால்ட்டில் 1969-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட அவரது தயார் இளவரசி ஆலிஸ் உறைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ARUNACHALAM