இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் பத்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சரித்திரப் பதிவு செய்தார் ரபேல் நடால்.
உலக டென்னின்ஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் (Rafael Nadal), தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச்சை (Novak Djokovic) தோற்கடித்து பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் 7-5, 1-6, 6-3 என்ற செட்களில் Novak Djokovicஐ வீழ்த்தினார் நடால். இந்த ஆண்டு இத்தாலிய ஓபன் 2021 பட்டத்தை வென்ற நடால், King of Clay என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்தார்.
ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (Italian Open tennis series) ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை ஆட்டக்காரர் ஜோகோவிச்சும், ஸ்பெயினை சேர்ந்த மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடாலும் மோதினார்கள்.
முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் ரபேல் நடால் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-1 கணக்கில் கைப்பற்றினார் ஜோகோவிச். மூன்றாவது செட்டில் ரபேல் நடால் அதிரடியாக ஆடி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று 10 முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இரண்டு வாரத்தில் நடைபெறவிருக்கும் பிரெஞ்சு ஓபன் பட்டப் போட்டிகளுக்கு முன்னதாக ரஃபேல் நடால் இந்த வெற்றியை பதிவு செய்திருப்பது, அவருக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது.













