உணவே மருந்து என்ற காலம் மாறி, மருந்தே உணவு என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் சரியான ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமான வாழலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக பதியத் தொடங்கி விட்டது. இதன் காரணமாக ஊட்டச்சத்து நிபுணர் என்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி, தற்போது உலகெங்கிலும் இந்தப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சக்கை போடு போடுகின்றனர். இந்தத் துறையில் நியூட்டிரீசியன் மற்றும் டயடெடிக்ஸ்
(ஊட்டச்சத்து & உணவூட்டவியல்) ஆகிய படிப்புகள் உள்ளன.
பெரிய மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், உணவுப்பொருட்கள் ஆய்வு நிறுவனங்கள், உணவு தயாரிப்பு தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் படித்த நிபுணர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர் என்பவர், மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் பாகங்களுக்கும் எந்தெந்தச் சத்துகள் தேவை என்பதையும் அறிந்துவைத்திருப்பவர். அது தொடர்பான சேவைகளை செய்பவர். டயட்டீசியன் என்பவர், ஒரு குறிப்பிட்ட நோய்வாய்ப்பட்ட ஒருவரது உடல்நிலைக்கு ஏற்ற உணவையும், உணவின் அளவையும் முடிவு செய்வார்.
கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள்
நியூட்ரிசியனல் தெரபிஸ்ட்: சிறப்பு மருத்துவ மனைகள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்றலாம்.
உணவுப் பாதுகாப்பு மேம்பாட்டு விஞ்ஞானி: உணவுப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள், உணவு தொடர்பான நிறுவனங்களில் பணியாற்றலாம்.
ஃபுட் லேபிளிங் ஸ்பெஷலிஸ்ட்: உணவுப்பொருளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமா என்பது போன்ற தகவல்களை பரிசோதித்து லேபிள் வழியே தெரிவிக்கும் பணி. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றலாம்.
ஹியூமானிடேரியன் நியூட்ரிசியனிஸ்ட்: ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பெண்கள், குழந்தைகள் அவதிப்பட்டிருந்தால் அவர்களுக்கான உணவை இவர்தான் முடிவு செய்வார். தொண்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பன்சிபிலிடி துறைகள், அரசு ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றலாம்.
நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் உணவுப் பொருட்கள் தயாரிப்ப்பில் இறங்கியிருப்பதால், ஊட்டச்சத்து, உணவூட்டவியல் நிபுணர்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் இந்தத் துறை வேலைவாய்ப்புகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளது.
நியூட்டிரிசியன் டயட்டீசியன் தொடர்பான படிப்புகள் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மூலம் வழங்கப்படுகின்றன.
பி.எஸ்சி (நியூட்டிரிசியன் & டயடெடிக்ஸ்) எம்.எஸ்சி, எம்.பில் (ஃபுட் சயன்ஸ் & நியூட்ரிசியன்) ஆகிய படிப்புகள்,சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி, சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் பெண்கள் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன.













