தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்குத் தகுதியுடையவர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன் விவரம்:
குரூப்-1 பணிகள்
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரி அலுவலர், மாவட்டப் பதிவாளர், கோட்ட வளர்ச்சி அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கோட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்குக் குரூப்-1 தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏதேனும் பட்டப் படிப்புப் படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று கட்டங்கள் உண்டு.
குரூப்-1ஏ பணி
உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு தகுதியுடையவர்களைத் தேர்வு செய்ய குரூப்-1ஏ தேர்வு நடத்தப்படுகிறது. பொறியியல் அல்லது அறிவியலில் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மண்ணியல், விவசாயம், புள்ளியியல், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். புள்ளியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
குரூப்-1 பி பணி
இந்தத் தேர்வு எழுதுபவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையராகலாம். ஏதேனும் பட்டப் படிப்பு அல்லது சட்டப் படிப்புப் படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
சிஎஸ்எஸ்இ-1 ஒருங்கிணைந்த சார்நிலைப்பணி-1
தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), வருவாய்த்துறையில் உதவியாளர், இந்து சமய அறநிலையத் துறையில் உதவித் தணிக்கை ஆய்வாளர், உதவித் தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் தரம்-2, உள்ளாட்சி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் தரம்-2, உதவி வணிக வரி அலுவலர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணிகளில் தகுதியுடையவர்களைச் சேர்ப்பதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழத விரும்புபவர்கள் ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இப்பணிகளுக்குத் தேர்வுச் செய்யப்படுவார்கள்.
சிஎஸ்எஸ்இ-2 ஒருங்கிணைந்த சார்நிலைப்பணி-2
ஸ்டோர் கீப்பர், நிலைய தீயணைப்பு அலுவலர் ஆகிய பணிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் டூ அல்லது பட்டப் படிப்பு படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். நிலைய தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 20. அதிகபட்ச வயது வரம்பு 30. இதரப் பணிகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு 18. அதிகபட்ச வயது 30. எழுத்துத் தேர்வு மூலம் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குருப்-4
இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் தரம்-3, கிராம நிர்வாக அலுவலர், வரித்தண்டவர் ஆகிய பணிகளுக்கு குருப்-4 தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், சர்வேயர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்த பட்ச வயது 18. கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்ச வயது 21. அதிகபட்ச வயது 30. எழுத்துத் தேர்வு மூலம் இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
குரூப்-5ஏ
தலைமைச் செயலகத்தில் உதவியாளர் பணிகளை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத ஏதேனும் பட்டப் படிப்பைப் படித்திருக்க வேண்டும்.
குரூப்-7
நிர்வாக அலுவலர் தரம்-1 (இந்து சமய அறநிலையத் துறை) பணிகளை நிரப்புதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வும் அதையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏதேனும் பட்டப் படிப்பு அல்லது சட்டப்படிப்புப் படித்தவர்கள் இந்தப் பணிகளில் சேர இத்தேர்வை எழுதலாம்.
நிர்வாக அலுவலர் தரம்-3 (இந்து சமய அறநிலையத் துறை) பணிகளை நிரப்புவதற்கான தேர்வை எழுத ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
குரூப்-8
இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக அலுவலர் (தரம்-4) பணியில் சேர இத்தேர்வை எழுத வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். நீதித்துறை பணியில் சிவில் நீதிபதி, உதவி பப்ளிக் பிராக்சிகியூட்டர், மருத்துவத்துறையில் சிவில் அசிஸ்டென்ட் சர்ஜன், அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர், சித்தா, ஹோமியோ மற்றும் யுனானி உள்ளிட்ட பல்வேறு பணிகள், பொறியியல் துறை, வேளாண் துறை ஆகியவற்றில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், தொழிற்சாலைகளின் உதவி ஆய்வாளர், வரைவாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஆணையர், ஸ்டோர் கீப்பர், நூலகர், கருவூலங்களின் கணக்கு அலுவலர், அருங்காட்சியகங்களின் கியூரேட்டர், தொழிலாளர் நல அலுவலர் போன்ற பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துகிறது.
ஆதலால், ப்ளஸ் 2 முடிக்கும்போதே, இந்தப் போட்டித் தேர்வுகளில் எதில் உங்களுக்கு விருப்பமோ, அது தொடர்புடைய இளங்கலை படிப்புகளை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து படித்தால் வெற்றி நிச்சயம்!













