திருநங்கையரின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படத் தொடங்கியிருக்கிறது. நம்பிக்கை தரும் மாற்றத்தின் சமீபத்திய வரவு டாக்டர் வி.எஸ். பிரியா. கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் இவர். ஜினு சசிதரனாகப் பிறந்த இவர், டாக்டர் பிரியாவாகப் பரிணமித்ததில் தன் குடும்பத்தின் பங்கு முதன்மையானது என்கிறார்.
பள்ளி நாள்களிலேயே தனக்குள் இருந்த பெண்மையை இனம் கண்டுகொண்ட பிரியா, அதை எப்படிக் கையாள்வது என்கிற தேடலில் இறங்கினார். கல்வியில் சிறந்து விளங்குவது அவசியம் என்று நினைத்தவர் தனக்குள் நிகழ்ந்த போராட்டங்களுக்கு நடுவே படிப்பில் கவனம்செலுத்தினார். திருச்சூரில் வைத்தியரத்னம் ஆயுர்வேத கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவப் படிப்பை நிறைவுசெய்தார். பிறகு, மங்களூருவில் மேற்படிப்பை முடித்தார். பட்டாம்பி, கன்னூர், திருப்புனித்துறை ஆகிய இடங்களில் பணியாற்றிய போதுதான் பாலின மாற்றத்துக்குத் தயாரானார்.
திருச்சூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபோது ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன் அறுவைசிகிச்சையும் செய்துகொண்டார். இதன்மூலம் கேரளத்தின் முதல் திருநங்கை மருத்துவர் என்கிற அடையாளத்தை பிரியா பெற்றிருக்கிறார். குரல் மாற்ற சிகிச்சை உள்ளிட்ட இன்னும் சில சிகிச்சைகளை இவர் மேற்கொள்ளவிருக்கிறார். அறுவைசிகிச்சை முடிந்து தன்னை பிரியாவாக அறிவித்தபோது, “என்னைக் கண்டடைந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் பெண்மையைக் கொண்டாடுகிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்குள் நிலவிய மாறுபாடுகளை வெற்றிகரமாகக் கடந்துவந்துவிட்டேன்” என்று கூறினார்.
மக்களும் சமூகமும் இன்று ஓரளவுக்கு மாறியிருந்தாலும் மாற்றுப் பாலினத்தவர் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் என்கிறார் பிரியா. அது உண்மை என்பதை, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை உணர்த்துகிறது.













