அமெரிக்கத் துணை அதிபர்களின் பணி என்ன?

SOCIAL SHARE
Pin It

வரலாற்று ரீதியாகச் சொல்லப் போனால் துணை அதிபர்களுக்கு ஒன்றும் பெரிதாக வேலையில்லை. அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது மிகவும் குறைவாக புரிந்து கொள்ளப்பட்ட, எள்ளி நகையாடப்பட்ட ஒரு பதவி. பெரும்பாலும் அமெரிக்கக் கூட்டாட்சியில் அரசமைப்புச் சட்ட ரீதியாக பெரிய பங்களிப்பு இல்லாத பதவிதான் இது. நீண்ட காலமாக இந்த பதவி இப்படித் தான் இருந்தது.

"வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்க துணை அதிபர் பதவி என்பது, அதிபர் இல்லாமல் போனால் அந்த இடத்தை நிறைவு செய்வதற்கான பதவி" என்கிறார் விர்ஜீனியா பல்கலைக்கழக மில்லர் மையத்தின் அமெரிக்க அதிபர் தொடர்பான ஆராய்ச்சித் துறை இயக்குநர் பார்பரா பெர்ரி.

அதிபருக்கு உயிரிழப்போ, செயல்பட முடியாத அளவுக்கு உடல் நலக்கேடோ ஏற்படாவிட்டால், வெறுமனே காத்திருப்பதுதான் அதிபரின் பணியாக இருக்கும்.

"நான் தினமும் அதிபர் பதிலளிப்பார் என்கிற நம்பிக்கையில் வெள்ளை மாளிகையின் கதவைத் தட்டுவேன்" என கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க துணை அதிபராக இருந்த ஒருவர் கூறினார் எனச் சுட்டிக்காட்டுகிறார் பெர்ரி.

அதே நேரத்தில் இந்தப் பதவியை குறைத்து மதிப்பிடவும் முடியாது. அமெரிக்காவின் 45 அதிபர்களில் 8 பேர் பதவிக் காலத்திலேயே இறந்திருக்கிறார்கள். அதாவது சுமார் 20 சதவீத அதிபர்கள், தங்களின் துணை அதிபர்களுக்கு திடீரென பதவி உயர்வு கொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக 78 வயதில் அதிபராக பதவியேற்பவர் ஜோ பைடன் தான். இது அமெரிக்க துணை அதிபர் பதவியின் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறது.

1970-கள் வரை அமெரிக்காவில் துணை அதிபர்கள் அதிகம் பங்களித்ததில்லை. அதற்குப் பிறகு அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலத்தில் தான், துணை அதிபர்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஜோர்ஜா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான ஜிம்மி கார்ட்டர், அதிக அரசியல் தொடர்பு இல்லாதவராகத்தான் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவந்தார். "தனக்கு வாஷிங்டன் டிசியில் நிலவும் அரசியல் சூழல்கள் அத்தனை தெளிவாகத் தெரியாது என்பதை அவர் அறிந்திருந்தார்" என்கிறார் பெர்ரி.

எனவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட பின், வால்டர் மாண்டேல் என்கிற நீண்ட கால அமெரிக்க செனட் அவை உறுப்பினரை, வாஷிங்டன் டிசியின் அரசியல் சூழலைக் விளக்குவதற்காக, துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்தார் ஜிம்மி கார்டர்.

அந்தக் கூட்டணி அமெரிக்காவுக்குப் புதிதாக இருந்தது. அதிபர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் பதவிகளில் புவியியல் ரீதியாகவோ அல்லது தத்துவார்த்த ரீதியாகவோ ஒரு சம நிலையைக் கொடுப்பதாக இருந்தது அது. அவர்களின் சாதூர்யமான இந்த திட்டம் பல முறைப் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் சமீப காலங்களில் தொடர்ந்தது. பராக் ஒபாமா பெரிய அளவில் அரசியலில் அறிமுகமில்லாத புது முகமாகத் தான் களமிறங்கினார். அமெரிக்க செனட் அவையில் 35 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட ஜோ பைடனுடன் கை கோர்த்தார்.

டொனால்ட் டிரம்ப், மைக் பென்ஸ் உடன் கை கோர்த்தார். மத விவகாரத்தில் பென்ஸுக்கு இருக்கும் பெயர் டிரம்பின் பிம்பத்தை பாதுகாக்கும் என நம்பப்பட்டது. அதே போல தற்போது கமலா ஹாரிஸ், ஜோ பைடனின் வயது, பாலினம், இனம் போன்றவைகளுக்கு ஒரு சமநிலையைக் கொடுக்கிறது.

அமெரிக்க துணை அதிபர், அமெரிக்க செனட் சபையின் தலைவராகவும் செயல்படுவார். எனவே இந்த முறை துணையதிபர் பதவி, ஜனநாயகக் கட்சிக்கு எத்தனை முக்கியமானது என்பதை இது உணர்த்தும்.

தற்போது செனட் அவையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி 50 - 50 இடங்களைப் பெற்றுள்ளன. ஏதோ ஒரு பிரச்சனையில் இரு தரப்பும் 50-50 வாக்குகளை இட நேர்ந்தால், இறுதியாக அவைத் தலைவர் கமலா ஹாரிஸ் தன் வாக்கை அளிப்பார். அது செனட் மேலவையில் தீர்மானிக்கும் வாக்காக இருக்கும்.

ஒபாமா மற்றும் பைடன், அதிபர் மற்றும் துணையதிபராக வெள்ளை மாளிகையில் இருந்த போது, தங்கள் நட்பை பல முறை வெளிப்படுத்தினார்கள். அதிபர் மற்றும் துணை அதிபருக்கிடையில் தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருக்க வேண்டும் என்பது தேவையான ஒன்றாகக் கருதப்படவில்லை என்கிறார் பெர்ரி.
 
ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே, அதிபர் வேட்பாளருக்காக பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டி போட்டுக் கொண்ட போது, மேடை விவாத்தில் கமலா ஹாரிஸ், பைடனை தாக்கியதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கும். "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்" என பைடன் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார் பெர்ரி,

பைடன் துணையதிபராக இருந்த போது எப்படி இருந்தாரோ அப்படி, கமலா ஹாரிஸின் பங்களிப்பை பைடன் கோரலாம்.

2020 ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், தனது துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிமுகப்படுத்திய போது, 2008-ல் பராக் ஒபாமாவால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பைடன்.

துணை அதிபர் பதவியிலிருந்து பைடன் என்ன விரும்புகிறார் என ஒபாமா கேட்டார்.

"முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அறையில் கடைசி நபராக இருக்க விரும்புகிறேன்" என நான் ஒபாமாவிடம் கூறினேன் என்றார் பைடன்.

"அதைத்தான் நான் கமலாவிடம் கேட்டேன். எப்போதும் என்னிடம் உண்மையைச் சொல்ல, அறையில் கடைசி குரலாக கமலா இருக்க வேண்டும் எனக் கேட்டேன்" என்றார் பைடன்.

ஜனநாயகக் கட்சியில் இருக்கும் இடது சாரிகளின் தொடர் விமர்சனத்துக்குப் பிறகும், கமலா ஹாரிஸ் செனட் அவையில் மிகவும் சுதந்திரமாகவே வாக்களித்தார். இப்படி செனட் அவையில் சுதந்திரமாக கட்சி சார்பின்றி வாக்களித்த செனட்டர்களில் கமலா ஹாரிஸும் ஒருவர்.

ஒருபாலின உறவுக்காரர்கள் உரிமைகள், குடியேற்றம், மரிஜுவானாவை சட்டப்பூர்வமாக்குவது, துப்பாக்கி கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில் முற்போக்காகச் சிந்தித்து வாக்களித்தார்.

அவர் செனட் அவைக்கு வருவதற்கு முன் கலிபோர்னியாவின் முன்னணி வழக்குரைஞர்களில் ஒருவராக பணியாற்றினார்.

ஆனால் பல விஷயங்களில் முதல் துணையதிபராக பதவியேற்றிருக்கும் கமலா ஹாரிஸ் மீது நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. "நான் அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபராக இருக்கலாம், ஆனால் நான் நிச்சயம் கடைசி பெண் துணையதிபராக இருக்கமாட்டேன்" என்கிறார் கமலா.

பைடன் அடுத்த முறை அதிபர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்பது ஹாரிஸுக்கு ஒரு சமநிலைப்படுத்துவதாக இருக்கும். இப்போது பைடனுக்கு எப்படி ஒரு விசுவாசமான கூட்டாளியாக இருப்பது, அதே நேரத்தில் தனது அதிபர் பதவிக்கான தயாரிப்புகளை எப்படி முன்னெடுப்பது என்பது தான் கமலா ஹாரிஸ் முன் இருக்கும் கேள்விகள் என்கிறன சில செய்திகள்.

ARUNACHALAM