கோலிவுட் டூ பாலிவுட் - மாஸ்டர் திரைப்படம்!

SOCIAL SHARE
Pin It

2020 இந்தியா வல்லரசு ஆகும் என்று அப்துல் கலாம் கனவு கண்ட ஆண்டு. ஆனால் ஒட்டுமொத்த உலகமே கொரோனாவாலும் பொது முடக்கத்தாலும் முடங்கிப்போனது. அது தமிழ் சினிமாவையும் பாதித்தது.

ரஜினிகாந்தின் `தர்பார்’, தனுஷின் `பட்டாஸ்’ என அதிரடியாகத்தான் அந்த ஆண்டை ஆரம்பித்தது தமிழ் சினிமா. அறிமுக இயக்குநர்களின் படங்களும் மார்ச் மாதம் வரை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி கோடை விடுமுறைக்காக `மாஸ்டர்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருந்த போதுதான், மார்ச் மாதத்தில் பொதுமுடக்கம் இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன.

கடந்த சில மாதங்களாகத்தான் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறது. திரையரங்குகளும் நவம்பர் மாதம் முதல் 50 சதவிகித இருக்கை வசதியோடு திறக்கப்பட்டன. மக்கள் அச்சமின்றி திரையரங்குகளுக்கு வருவார்களா என்கிற பயத்தோடு சில படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன. தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களை என்ன செய்வதென்று அறியாமல், சில படங்களை தியேட்டரில் ரிலீஸும் செய்தனர். பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் ரிலீஸான படங்களையும், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பழைய படங்களையும் வெகு சில மக்களே பார்த்தனர்; அதில் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு மட்டும் பரவலாகக் கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் சினிமா தனது பழைய இயல்புக்குத் திரும்ப இவை போதுமானதாக இல்லை. தற்போது அதையெல்லாம் மாற்றி, தனது மாஸ் ஓப்பனிங் மூலம் பலருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார், விஜய்யின் ’மாஸ்டர்.’

100 சதவிகித இருக்கைகள் என்கிற ஆவலோடு பட ரிலீஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்த படக்குழுவுக்கு, 50 சதவிகித மாற்றம் ஒரு பின்னடைவாக இருந்த அதே வேளையில்தான், `மாஸ்டர்’ படத்தின் சில காட்சிகளும் இணையத்தில் லீக் ஆகி, அது சமூக வலைதளங்களில் அதிகமாகவும் பகிரப்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்த படக்குழுவுக்கு, `மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி மருந்தாக இருந்திருக்கும்.

ஏனென்றால், எந்த மாற்றமும் இல்லாமல் தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கு `மாஸ்டர்’ படம் வெளியானது. முதல் இரண்டு காட்சிகளுக்குப் பல திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை அளவைக் கடைப்பிடிக்காமல், 100 சதகிவித இருக்கைகளோடு இயக்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்ததைப் போலவே, கேரளாவிலும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ஆந்திராவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல்முறையாக விஜய்யின் படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, மும்பைத் திரையரங்குகளிலும் வெளியானது. இந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களே ஓ.டி.டியில் ரிலீஸாக, இந்தியில் டப் செய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படம், மும்பையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட ஓ.டி.டி வெளியீட்டுக்குத் தயாராக இருந்த தனது `ராதே’ படத்தைத் திரையரங்குகளிலேயே வெளியிட முடிவெடுத்திருக்கிறார் சல்மான் கான்.

இதுகுறித்து ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமாரிடம் பேசியபோது, “அனுமதிக்கப் பட்ட 50 சதவிகித இருக்கைகள்தான் என்ற நிலையிலும் படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். எங்களைப் போன்றே படத்தின் மீது திரையரங்க உரிமை யாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நம்பிக்கை அதிகமாக இருந்ததுதான் படம் ரிலீஸாகக் காரணம்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், `` ‘மாஸ்டர்’ படம் தியேட்டரில் வெளிவரணும்னு நான் சொன்னபோது, என்னை எல்லோரும் கிண்டல் பண்ணுனாங்க. ஆனால், இந்தப் படம் வெளியான எல்லா இடங்களிலும் இப்போ நல்லா ஓடிட்டு இருக்கு. அதையும் தாண்டி கேரளா மற்றும் வடமாநிலங்கள், சில நாடுகளில் கொரோனாவுக்குப் பிறகு வெளியாகிற முதல் படமே ‘மாஸ்டர்’தான். ‘மாஸ்டர்’ படத்தின் வசூல், சினிமாத்துறையின் உயிர்ப்புக்குப் பேருதவி செய்திருக்கு” என்கிறார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு “திரையரங்குக்கு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் `மாஸ்டர்’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் எங்கும் இதனால் கொரோனாப் பரவல் அதிகரித்ததாகத் தெரியவில்லை. இது மக்களிடம் இருக்கும் பயத்தைக் குறைத்திருக்கிறது. `மாஸ்டர்’ படத்தின் இந்த வசூல் எங்களைப்போன்ற தயாரிப் பாளர்களுக்கு மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களுக்கும் சினிமாவில் முதலீடு செய்யும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. ஓ.டி.டிக்காக படத்தை விற்க நினைத்த பலரும் இன்று தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்க்கும் நிலை வந்துள்ளது.

`மாஸ்டர்’ படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் இந்தியத் திரையுலகுக்குப் பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு துறையை மீட்டெடுக்கப் பாடுபட்ட பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டும் அதே வேளையில், கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் அதன் விளைவுகளை மனதில் வைத்து திரையரங்குகளும் பார்வையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதும் அவசியம்.

ARUNACHALAM