விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கருத்து தெரிவித்த சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த போராட்டத்துக்கு சில அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு டுவிட்டர் மூலம் ஆதரவு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், கிரேட்டா தம்பர்க் மீது டில்லி போலீசார், 153ஏ, 120 பி ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதன் பின்னர் கிரேட்டா தம்பர்க் டுவிட்டரில் மீண்டும் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நான் இன்னும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளேன். அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எந்த வெறுப்பு, அச்சுறுத்தல், மனித உரிமை மீறல் ஆகியவை அதனை மாற்றாது என தெரிவித்துள்ளார்.













