ஆஸ்கரில் இருந்து வெளியேறியது மலையாள திரைப்படம்

SOCIAL SHARE
Pin It

ஆஸ்கர் விருதுகளுக்கான, சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இருந்து, மலையாள திரைப்படமான, ஜல்லிக்கட்டு வெளியேறியது.

அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது, சர்வதேச அளவில் திரைப்படத் துறைக்கான முக்கிய விருதாக கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, வரும் ஏப்ரல் 25ல் நடைபெறுகிறது.இதில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான பிரிவில், மலையாள மொழி திரைப்படமான, ஜல்லிக்கட்டு தேர்வானது. மலையாள எழுத்தாளர் ஹரீஷ் என்பவர் எழுதிய, மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கினார். கடந்த, 2019ல், வட அமெரிக்க நாடான, கனடாவின் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்தது.

இதையடுத்து, 93வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க, இத்திரைப்படம் தேர்வானது.மொத்தம், 93 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவுக்கான போட்டிக்கு தேர்வாகின. அதில் இருந்து முதல்கட்டமாக, 15 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அதில், ஐந்து படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகும். இதில், நம் நாட்டின் சார்பில் தேர்வான ஜல்லிக்கட்டு திரைப்படம், போட்டிக்கான தேர்வில் இருந்து வெளியேறியது.

சிறந்த குறும்படங்களுக்கான பிரிவில், கரிஷ்மா தேவ் துாபே இயக்கிய, பிட்டு என்ற ஹிந்தி குறும்படம், அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளது.  ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ள திரைப்படங்களின் பட்டியல், அடுத்த மாதம், 15ல் அறிவிக்கப்பட உள்ளன.

ARUNACHALAM