நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கொரோனா பரிசோதனைக்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். இது பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டதாகவும் மிகவும் வேகமான முறையாகவும் உள்ளது. கொரோனா தொற்று பரிசோதனையை புதிய வழியில் செய்துகொள்ள, நீங்கள் ஒரு அறையில் சத்தமாக கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். இப்படி செய்தாலே உங்கள் பரிசோதனை முடிந்து விடும். உங்கள் மூக்கு மற்றும் வாயிலிருந்து மாதிரிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஸ்க்ரீமிங் கோவிட் டெஸ்டின் புதிய மற்றும் எளிதான முறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் பீட்டர் வான் வெயிஸ். பீட்டரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நபர், ஏர்லாக் செய்யப்பட்ட கேபினில் கத்த வேண்டும் அல்லது பாட வேண்டும். ஒரு தொழில்துறை காற்று சுத்திகரிப்பு கருவி, வாயிலிருந்து வரும் துகள்களை சேகரிக்கும். இது கொரோனா வைரஸை சோதிக்க பயன்படும்.
"ஒரு நபர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தால், அவர் கூச்சலிடும்போது, அவர் வாயிலிருந்து 10,000 துகள்கள் வெளிவரும். இந்த துகள்களிலிருந்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறும். விஞ்ஞானி பீட்டர் தனது பரிசோதனை பூத்தை, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள கொரோனா சோதனை மையத்திற்கு அருகே அமைத்துள்ளார். அங்கு மக்கள் கூச்சலிட்டோ அல்லது பாடல்களை பாடியோ கொரோனா பரிசோதனை செய்துகொள்கிறார்கள்.
இந்த புதிய வழியில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட ஒருவர் இந்த முறை மிகவும் எளிதானதாக உள்ளது என்று கூறினார். இதில் வலியும் இல்லை. யாரும் நம்மை பார்க்காத போது கத்துவது இன்னும் நன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். கொரோனா சோதனையில் தனக்கு தொற்று இல்லை என தெரிய வந்ததாவும் அவர் மேலும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விஞ்ஞானி பீட்டர் கூறுகையில், இந்த கொரோனா பரிசோதனை செய்ய 3 நிமிடங்களே ஆகும் என்றார். பரிசோதனை செய்தவரின் மாதிரியில் கொரோனா வைரஸ் உள்ளதா இல்லையா என்பது நானோமீட்டர் ஸ்கேல் சைசிங் கருவியின் உதவியுடன் செய்யப்படுகின்றது.













