கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உளவியல் அல்லது நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் மீண்டும் உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதும் இதில் அடக்கம்.
ஆனால், கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலோ அல்லது அவசர சிகிச்சை பிரிவுகளிலோ அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இதைவிட அதிகமான அபாயம் உள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் நேரடியாக மூளையில் தாக்கத்தை செலுத்துவதும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலான மன அழுத்தம் இருப்பதும் இதற்கான ஒருங்கிணைந்த காரணங்களாக உள்ளன.
இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து லட்சம் நோயாளிகளின் மின்னணு மருத்துவ தரவை ஆய்வு செய்தனர். அப்போது கீழுள்ள காரணங்கள் உள்பட பொதுவான 14 உளவியல் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்தனர்:
- மூளை ரத்தக்கசிவு
- பக்கவாதம்
- பார்கின்சன்
- குய்லின்-பார் நோய்க்குறி
- மறதிநோய்
- மனநோய்
- மனநிலை கோளாறுகள்
இவற்றில் பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் பிரச்னையாக உள்ளது. மேலும் இவை மிகவும் நோய்வாய்ப்பட்ட அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுபவம் சார்ந்த மன அழுத்தத்தினாலேயே ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளனர்.
இதை தவிர்த்து பக்கவாதம் மற்றும் மறதிநோய் போன்றவற்றிற்கு உடலில் வைரஸ் ஏற்படுத்தும் நேரடி தாக்கமோ, பொதுவாக தொற்றுகளுக்கு எதிராக உடல் ஆற்றும் எதிர்வினையோ காரணமாக இருக்கலாம்.
எனினும், கோவிட்-19 நோய்த்தொற்றானது பார்கின்சன் அல்லது குய்லின்-பார் நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்கும் காரணியாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இது முன்னோட்ட ஆராய்ச்சி ஆக மேற்கொள்ளப்பட்டதால், இதில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு இணை நோய்கள் ஏற்பட்டதற்கு கொரோனாதான் காரணமா என்பதை ஆராய்ச்சியாளர்களால் உறுதிபட தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு பின்னர் பக்கவாதத்தாலோ, மனஅழுத்தத்தாலோ பாதிக்கப்பட்டதற்கு கொரோனா காரணமாக இல்லாமலும் இருக்கலாம்.
எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்ட குழுவை காய்ச்சல் மற்றும் மற்ற சுவாசம் சார்ந்த பிரச்னைகள் கொண்ட நோயாளிகளின் குழுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழுவினருக்கே மற்ற குழுவினரை விட மூளை சார்ந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் அல்லது நரம்பியல் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16% அதிகம் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனாவால் எந்தளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாரோ அந்தளவுக்கு அவர்களுக்கு மனநலம் அல்லது மூளை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.













