கொரோனா வைரஸ், நுரையீரலைத்தான் அதிகம் பாதிக்கிறது என்பதால், இந்த நோயாளிகளின் உயிரைக் காக்க வெளியிலிருந்து ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான நோயாளிகள். ஆக்சிஜன் தேவையுடன் மருத்துவமனைகளில் போராடி வருவதால், பல மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
ஆக்சிஜன் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜனைவிட தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவுதான் அதிகம்.
ஆக்சிஜன் பெரும்பாலும் காற்று மண்டலத்தில் இருந்துதான் சேகரிக்கப்படுகிறது. ஆனால், இதற்கான முறை மிகச் சிக்கலானது. "ஆக்சிஜனை உற்பத்தி செய்ய காற்று மண்டலத்தில் உள்ள காற்றை எடுத்து, சுத்தப்படுத்தி உயர் அழுத்த கலன்களுக்குள் கொண்டுசெல்ல வேண்டும்.
அப்படி கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் வெகுவாக குளிர்விக்கப்படும். இதனால், கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் ஒரு கட்டத்தில் திரவமாக மாறும். அப்போது அதன் வெப்பநிலை - 195 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும். ஆக்சிஜனுக்கும் நைட்ரஜனுக்கும் வெப்பநிலையில் 5 டிகிரி வித்தியாசம் இருக்கும்.
இந்த நிலையில், ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன் (fractional distillation) என்ற முறையில் ஆக்சிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்து எடுக்கப்படும். அந்த ஆக்சிஜன் பிறகு சிலிண்டர்களிலோ, டேங்கிலோ சேர்த்து வைக்கப்படும். டேங்கில் என்றால் திரவ வடிவில் இது சேகரிக்கப்படும். சிலிண்டர்களில் வாயு வடிவில் சேகரிக்கப்படும்" .
இப்படி உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மிகமிகக் குறைந்த வெப்பநிலையில்தான் தொடர்ந்து சேமிக்கமுடியும் என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட இரட்டை அடுக்குகளால் ஆன கொள்கலன்களில்தான் சேமிக்கவோ, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவோ முடியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறிதும் பெரிதுமாக 18 - 19 நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஏழு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.
இதில் மூன்று நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை சப்ளை செய்கின்றன. பல பெரிய உலோக தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், அவர்களே உற்பத்திசெய்து கொள்கின்றனர்.
தொழில்துறைக்கும் மருத்துவத்திற்கும் ஒரே மாதிரியான ஆக்சிஜன்தான் பயன்படுத்தப்படுகிறது. "ஆனால், மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் என்றால், சில பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அவற்றை மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும். மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனில் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கக்கூடாது. 99 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும்.".
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 300 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதில் 30 சதவீதம் மருத்துவத்திற்கும் மீதமுள்ள 70 சதவீதம் தொழில்துறைக்கும் செல்லும். இப்போது மருத்துவத்திற்கு பெருமளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால் தொழில்துக்கு ஆக்சிஜன் அளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவனைகளுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கும்.
"ஆக்சிஜனின் விலை என்பது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. வாயு வடிவில் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜன் விலை 25 ரூபாய் என்ற அளவில் இருக்கும். திரவ வடிவில் என்றால் ஒரு கியூபிக் மீட்டர் 78 ரூபாய் என்ற அளவில் இருக்கும். மருத்துவமனைகளில் படுக்கை உயரத்திற்கு உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை என்பது 60 - 70 ரூபாய் என்ற அளவில் இருக்கும். ஆனால், பொதுவாகவே ஆக்சிஜன் விலையைவிட, அதனை தொழிற்சாலைகளில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான செலவுதான் அதிகம்".
'ஆக்சிஜன் ஜெனரேட்டர்' என்ற எந்திரத்தை வைத்து வீட்டிலேயே ஆக்ஸிஜன் தயாரிக்கலாம்.
"ஆனால், அதன் தூய்மை 93 சதவீதம்தான் இருக்கும். தவிர, ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் என்ற அளவில்தான் அந்த எந்திரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியாகும். சாதாரணமான நோயாளிகளுக்கு அது போதுமானது. ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது போதாது. அவர்களுக்கு நிமிடத்திற்கு 15 லிட்டர் அளிக்க வேண்டும். தவிர, மின்சாரம் இல்லாவிட்டால் அந்த எந்திரத்தை இயக்க முடியாது".
மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் இல்லாமல் ஆக்சிஜனை வாங்க முடியாது. தவிர, சாதாரண சூழலில் ஒருவருக்கு ஆக்சிஜன் தேவையும் இல்லை."
ஆக்சிஜனை நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைக்க முடியாது. திரவ வடிவிலான ஆக்சிஜனை சேமித்து வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகி விடும். வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை சிலிண்டரில் கூடுதலாக சில நாட்களுக்கு பாதுகாத்து வைக்கலாம். ஆனால், ஒவ்வொரு சிலிண்டரின் விலையும் 10,000 ரூபாய் வரும். ஆனால், அதில் 200 ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜனை மட்டுமே சேமிக்க முடியும். ஆகவே, சிலிண்டர்களில் முதலீடு செய்ய பெரிதாக யாரும் முன்வர மாட்டார்கள். ஆகவே அவ்வப்போது உற்பத்தி செய்து பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் முன் தீர்மானித்த விலையில் கொள்முதல் செய்து, விநியோகிக்கிறது.













