சமையலுக்கு பெரிது உபயோகப்படுவது கறிவேப்பிலை. இதை தனியாக சமைக்காது மற்ற சைவ, அசைவ உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து உண்பர். இதுவும் கீரை வகையைச் சேர்ந்ததே. மரமாக வளர்ந்து பலன் தரக்கூடியது.
இதில் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்ச்சத்து பெருமளவில் உள்ளது. அத்துடன் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்களும் உள்ளன. இதை வதக்காமல் வேக வைக்காமல் இருப்பதே நல்லது. அதனால் இதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெறலாம்.
இதைச் சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால் முழு சத்தையும் பெற வாய்ப்புண்டு. இது உடலுக்கு சிறிது வெப்பத்தையும் அளிக்கவல்லது. இது உடலுக்கு பலத்தை அளிப்பதுடன், எலும்புகளுக்கும் வலுவை அளிக்கிறது. நரம்புத் தளர்ச்சி இருந்தாலும் நீங்கிவிடும்.
மேலும் பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை நீக்கவல்லது. பித்தக் காய்ச்சல், வாந்தி, கிறுகிறுப்பு, வயிற்றுவலி, வயிற்றில் இரைச்சல் போன்ற தொல்லைகளுக்கு பூரண நிவாரண அளிக்கும்.
குடல், கல்லீரல், மண்ணீரல் மர்றும் சீரண மண்டல உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது.உணவு எளிதில் சீரணமாக உதவும். மலச்சிக்கலையும் போக்கும்.
சீதபேதியை நிறுத்தும் ஆற்றலும் இதற்குண்டு. கண்பார்வையில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி பார்வையை தெளிவடையச் செய்யும். ஆண்மை குறைவைப் போக்கவல்லது. சாதாரண காய்ச்சலுக்கும் இதை சாப்பிட்டு குணம் பெறலாம்.
இந்த இலையை உடைத்து வடையாகத் தட்டி தேங்காய் எண்ணையுடன் சேர்த்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து தைலம் தயாரிக்கலாம். இதைத் தலையில் தேய்த்து வர பித்த மயக்கம் போகும். முடி நரைக்காது.













