அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் நவீன காலத்திலும் சில பல ஆச்சரியங்கள் எப்போதும் காத்திருக்கிறது. அண்மை அதிசயமாக, கருவுற்றிருந்த ஒரு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், ஏழு குழந்தைகள் கருவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
ஆனால், பிரசவத்தின்போது, பிறந்தது ஏழு அல்ல, ஒன்பது குழந்தைகள்! அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பல பரிசோதனைகளிலும் 7 குழந்தைகள் மட்டுமே கண்டறியப்பட்டன. இந்த அதிசய சம்பவம் நடைபெற்றது ஆஃப்ரிக்க நாடான மாலியில்...
மொராக்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனபோது ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைளும் பிறந்தன. அவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.
ஸ்கேன்களில் தப்பிய இரண்டு குழந்தைகள் எவை என்பது மருத்துவர்களுக்கும் தெரியாது.
25 வயதான ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் தான் ஒன்பது குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றவர். மொராக்கோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சையில் 9 குழந்தைகளும் பிறந்தன.
மேற்கு ஆஃபிரிக்க நாட்டின் தலைவர்களின் கவனத்தையும் இந்த தாயும் சேய்களும் ஈர்த்திருக்கின்றனர். சிஸ்ஸேவின் ஏழு குழந்தைகளும் பாதுகாப்பாக பிரசவிக்க வேண்டும் என்பதற்காக அரசு நிர்வாகம் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 7க்கு பதில் ஒன்பது குழந்தைகள் பிறந்தன.













