அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு வேலையில் அமர்ந்தவுடன் எழும் உணவு குறித்த சிந்தனையோ, பாலுறவு குறித்த சிந்தனையோ இன்ன பிற கவனச்சிதறல்களோ பெரும் சவால்தான். கனவுகள் கூட சில சமயம் தொந்தரவு செய்கின்றன.
காமத்தை வென்ற பட்டிணத்தார் கூட சதா நேரமும் அதனோடுதான் கட்டிப்புரண்டு மல்லுக்கட்டி இருக்கிறார். தியானத்தில் அமர்ந்து ”தன்னைத் தான் அறிந்த” நிலை குறித்து சித்தர் பெருமக்கள் பேசியது கூட குறைவுதான்..
“அண்டத்தைப் பிண்டத்தில் கண்டதையும், பிண்டத்தை அண்டத்தில் கண்டதையும்” குறித்து அவர்கள் “விண்டிலர்”. முகநூலும், ட்விட்டரும், வாட்சப்பும், நெட்ஃப்ளிக்சும், அமேஸான் பிரைமும், தொலைக்காட்சி அக்கப் போர்களும் நமது கவனத்தைக் குலைத்துப் போடுகின்றது என்றால்; அந்தக்கால துறவிகளின் தவத்தை சோறும், சதையும் ஆட்டிப் படைத்துள்ளன.
மனதின் அலைபாய்தலைக் குறித்து தீவிரமாக சிந்தித்த அந்தக்கால துறவியர் பெருமக்கள், அதற்கான காரணத்தை மூளைக்கு வெளியே தேடி அலைந்துள்ளனர். மேலை நாட்டு ஞானிகளுக்கும் கூட இதே சிக்கல்தான். கிறிஸ்தவ மெய்யியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் கேஸ்ஸியன் இதைக் குறித்து எழுதியுள்ளார். “திடீர் குறுக்கீடுகளால் மனம் செலுத்தப்படுகின்றது” என்ற ஜான், அது “ஒரு குடிகாரனைப் போல் அலைந்து திரிகிறது” என்கிறார். நல்ல வேளையாக ஜானின் காலத்தில் திறன்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கிறிஸ்துவுக்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் வந்த பாதிரிமார்கள் பெரும்பாலும் தனிமையில்தான் தங்கள் நேரத்தைக் கழித்தனர். ஜானின் காலத்துக்குப் பின்னர் மடாலயங்கள் தோன்றி வளரலாயிற்று. கிறிஸ்தவ துறவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்கிற நடத்தை விதிகளும் உருவாக்கப்பட்டன.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் பௌத்த சங்கங்களிடம் இருந்து பார்ப்பனியம் மடங்கள் எனும் வடிவத்தை களவாடிக் கொண்டதையும், அதே போன்ற ஒழுக்க நெறிகள், விதிமுறைகள் உருவாக்கிக் கொண்டதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் அல்லது துறவரம் பூண்டவர்கள் சதா காலமும் இறை நினைப்போடு வாழ வேண்டும். தியானத்தில் இருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் விசேடமான ஆற்றல்களைப் பெறுவார்கள் என்றும், உடல் மற்றும் உள்ளத்தின் பலவீனங்களை கடந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.
இறை நினைப்பில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் பின்பற்றிய முறைகள் மிகவும் கடுமையானவை. தாங்கள் மிகவும் விரும்பிய அனைத்தையும் – குடும்பம், சொத்துக்கள், தொழில் – என அனைத்தையும் துறந்துள்ளனர். முடிந்தவரை அன்றாட வாழ்வியல் கடமைகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொண்டனர்.
ஆனால் உடல் என்று இருக்கும் வரை அதனுள் இருக்கும் இரசாயனங்கள் வேலை செய்து தானே தீரும்? மத்திய கால கிறிஸ்தவ துறவிகள் உடல் அதற்கே உரிய முறையில் உணவு, காமம் போன்றவற்றைத் தேடும் எனவும் அதன் மூலம் மனதைப் பின்னுக்கு இழுக்கும் எனவும் கருதினர்.
எனினும் அவர்கள் உடலை மறுக்கவில்லை; நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மடாலயங்கள் பரவிய சமயத்தில் பாதிரிகளும், சகோதரிகளும் குறைந்த உணவை உட்கொண்டதோடு திருமண பந்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதே போல் கடுமையான உடல் உழைப்பையும் மேற்கொண்டனர்.
இதே காலகட்டத்தைச் சேர்ந்த இந்திய யோகிகளும் ஏறத்தாழ இதே வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர் என தனது “யோகா பாடி” எனும் நூலில் நிறுவியுள்ளார் மார்க் சிங்கிள்டன். குடும்ப வாழ்க்கையை, சொத்துக்கள், உறவுகள் என அனைத்தையும் துறந்து விட்டு காடு மலைகள் எனச் சுற்றியலைவது, மரத்தில் தலைகீழாய்த் தொங்குவது, ஆணிப் படுக்கையில் படுப்பது, ஒற்றைக் காலில் நாட்கணக்கில் நிற்பது என கடுமையான யோக சாதனைகளை முயற்சித்துப் பார்த்துள்ளனர்.
அனைத்து முயற்சிகளையும் உடல் தோற்கடித்த பின், சில கற்பனையான காட்சிகளில் மனதை லயிக்கச் செய்யும் முறைகளையும் பரிசோதித்துள்ளனர். மனதை அந்தக் காட்சிகளின் போக்கில் செலுத்துவது, அதனூடாக அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது என ஏராளமான முறைகளைப் பரிசோதித்துள்ளனர்.
ஆனால், இத்தனை நூற்றாண்டுகளாக ஞானிகள் இகலோக தொந்தரவுகளில் இருந்து தப்பித்து பரலோக அனுபவத்தை அடையவும், புறநிலை இன்னல்களில் இருந்து தப்பித்து, அகநிலை இன்பத்தை அடையவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அத்தனையும் வியர்த்தமாகியுள்ளது.
எல்லா பெரிய சிக்கல்களுக்கும் இருப்பது போன்றே இதற்கும் எளிமையான தீர்வு ஒன்றுள்ளது. புறநிலை எதார்த்தங்களை அங்கீரிப்பதும், அதற்குள்ளேயே அதற்கான தீர்வைத் தேடுவதும்தான் அந்த எளிமையான தீர்வு.
ஓட ஓடத் துரத்துகிறது என்றால் ஏன் ஓட வேண்டும்? ட்விட்டரும் முகநூலும் இன்ஸ்டாகிராமும் நம் கவனத்தை இழுக்கிறது என்றால், அஞ்சி சுருங்கிக் கொள்ளத் தேவையில்லை.
அவை ஏன் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன, நமது கவனச் சிதறலும்; நாம் செய்து கொண்டிருக்கும் நேரக் கொலையும், யாருக்குச் சாதகமாய் முடிகிறது என்பதை ஆராய்வது, மெய்நிகர் உலகின் மயக்கங்களில் இருந்து தெளிவடைவதற்கான துவக்கமாக இருக்கும்.













