மனிதர்களை பாதித்து வரும் கொரோனா தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷ்யாவில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது.
உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்தினை கண்டறிந்துள்ளனர். இதனை தற்போது பொதுமக்களுக்கு செலுத்தும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மனிதர்களிடையே பரவி வந்த கொரோனா தொற்று, விலங்குகளுக்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரத்தில், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை.
ரஷ்யாவில் தங்களுடைய செல்லப் பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழு, மார்ச் மாதத்தில், விலங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவைகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.













