இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருப்பது இந்தியாவில் இந்த தொற்று அதிகரிப்பதற்கான ஒரு காரணம் என சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக உலகம் முழுவதும் சுமார் 38 நாடுகளில் கருப்பு பூஞ்சை தொற்று என்று சொல்லக்கூடிய இந்த மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஆண்டு ஒன்றிற்கு 10 லட்சம் பேரில் 140 பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது என பூஞ்சை தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூஞ்சை தொற்றுகள் குறித்த நிபுணர் டேவிட் டென்னிங், பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே இந்தியாவில் வேறு எந்த நாட்டை காட்டிலும் இந்த தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக தெரிவிக்கிறார்.
"கருப்பு பூஞ்சை தொற்று, மோசமாக கையாளப்படும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. அது இந்தியாவில் அதிகம் உள்ளது," என்கிறார் அவர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டவர்களில், சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 94 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 71சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் அதிகம் பேருக்கு நீரிழிவு உள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை.
அமெரிக்காவில் அதிக அளவில் நீரிழிவு கொண்டவர்கள் உள்ளனர். கிட்டதட்ட அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல அங்குதான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இருப்பினும் மியூகோர்மைகோசிஸ் அரிதாக ஏற்படுகிறது. அங்கு நீரிழிவு உள்ளவர்களில் வெறும் 3 சதவீதம் பேர்தான் அதுகுறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்கள் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
"இந்தியாவில் பலர் முறையான உடல் நல பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை என்பதால் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு அங்கு அதிகமாக உள்ளது".
பலருக்கு பிற நோய் பாதிப்பு ஏற்படும்போதுதான் நீரிழிவு குறித்து கண்டறியப்படுகிறது என்றும், மேலும் பலர் அதற்கான முறையான சிகிச்சை எடுத்து கொள்வதில்லை.
சரியான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றால் நீரிழிவு நோய் மேலும் பல தொற்றுகளுக்கு வித்திடும். அதில் பூஞ்சை தொற்றும் ஒன்று.
ஸ்டீராய்டுகளை அதிகப்படியாக பயன்படுத்துவதும் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் டெக்சாமெதாசோன் மற்றும் மிதைல்ப்ரெட்னிசொலோன் ஆகிய இரண்டு ஸ்டீராய்டுகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
அதிகப்படியான ஸ்டீராய்டுகள் நல்லது அல்ல என்பது ஆய்வுகளின் மூலம் நன்றாக தெரிகிறது என்கிறார் மருத்துவர் டென்னிங்.













