கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

SOCIAL SHARE
Pin It

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தை காலத்தால் என்றும் அழியாதது.
 
வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் இந்த கொரோனா காலத்திலும் நமக்கு உதவுது இந்த கைத்தொழிலே.
 
இதுவரை சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வேலை பார்த்தவர்கள் கொரோனா காலத்தில் தங்கள் சொந்த கிராமத்திலோ அல்லது நகரங்களிலோ வந்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்திருப்பீர்கள்.

சிலர் வீட்டிலிருந்தே அலுவலக வேலை பார்த்திருக்க வாய்ப்புண்டு.
 
கொரோனா தாக்கம் பலருக்கு வேலை இழப்பையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு.
 
சிலர் இந்த கொரோனா காலத்தில் தங்கள் ஊரில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தபடியால் தாங்கள் வசிக்கும் ஊரில் இருந்தே என்ன தொழில் செய்யலாம் என்றும் யோசனை செய்திருக்க வாய்ப்புண்டு.
 
தற்பொழுதைய சூழ்நிலையில் நிறைய பணத்தை ஏதாவது தங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்து கையை சுட்டுக் கொள்வதை விட தங்களிடம் உள்ள திறமையை பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என்று யோசியுங்கள்.
 
ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவர்கள் கூட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் வசிக்கும் நகரங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயம் செய்து வருவதையும் அதன் மூலமும் இரண்டாவது வருமானமும் (அதாவது பாசிவ் இன்கம்) பெற்று வருவதை நீங்கள் பல இதழ்களில் படித்திருக்க வாய்ப்புண்டு.
 
அதுபோல் உங்களது பூர்விக நிலத்திலோ அல்லது உங்கள் பெற்றோரிடம் கேட்டு நிலத்தை குத்தகைக்கு எடுத்தோ விவசாயம் செய்ய பழகிக் கொள்ளலாம்.
 
உணவு இல்லாமல் இந்த உலகம் இயங்க முடியாது. ஆகவே விவசாயம் என்றும் அழியாத தொழில்.
 
மேலும் உங்கள் சமயோசித புத்தியைக் கொண்டு நீங்கள் விவசாயம் செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி நீங்கள் சந்தைப்படுத்தலாம்.
 
எங்களுக்குத் தெரிந்த சில கைத்தொழில்களை இங்கே கொடுத்துள்ளோம்.
 
1, தையல் கலை & இதை நீண்ட காலமாக பெண்கள் வீட்டிலிருந்தே தையல் பயிற்சி என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தையல் கற்றுக் கொண்டால் வீட்டிலிருந்தே துணிகளை தைத்து பணம் சம்பாதிக்கலாம்.
 
2. எலக்ட்ரிக்கல், பிளம்பர், மர வேலை & இதுபோன்ற வேலைகளுக்கும் என்றும் கிராக்கி உண்டு. வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான வயரிங் மற்றும் மின்சாரம் சம்பந்தமான வேலைகளை பார்த்துக் கொடுப்பது போல பிளம்பர் மற்றும் மர வேலைகளையும் செய்து சம்பாதிக்கலாம்.
 
3. தனியார் பள்ளிகளில் குறைவான சம்பளத்தில் ஆசிரியராக பணிபுரிவர்களும், வொய்ட் காலர் வேலை பா£க்க நினைப்பவர்களும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஸ்போக்கன் இங்கிலிஷ், இந்தி பயிற்சி, ஆங்கில எழுத்துப் பயிற்சி போன்ற பயிற்சிகளை பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கென பிரத்தியேக பயிற்சிகளையும் எடுக்கலாம்.
 
4. ஆடு, நாட்டுக் கோழி, மாடு வளர்த்தல் & இயற்கை முறையில் இதுபோன்ற கால்நடை வளர்ப்பு என்பது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே மிக நல்ல வருமானத்தைத் தரக்கூடியது. மேலும் இதுபோன்ற தொழில்களை முழு நேரமாக செய்ய இயலாதவர்கள் பகுதி நேரமாகவும் இதை செய்து கொண்டு பணம் பார்க்கலாம்.
 
5. நெசவுத் தொழில் & சேலம், காஞ்சிபுரம், விருதுநகர் இன்னும் சில மாவட்டங்களில் இது தான் குலத்தொழில். ஆகவே இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஊரில் நடக்கும் இந்த தொழிலை வேறு விதத்தில் எவ்வாறு செய்யலாம் என யோசித்து செய்தால் நலம் பயக்கும்.
 
6. கூடை பிண்ணுதல், அழகுகலை பொருட்கள் செய்தல் & வயர் மூலம் கூடை பிண்ணி அதை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் நீங்களே விற்று பணம் சம்பாதிக்கலாம். மேலும் ஒரு குழுவாக இணைந்து இந்த தொழிலை செய்வதன் மூலம் உங்கள் அருகிலிலுள்ள கடைகளுக்குக் கொடுத்தும் உங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
 
7. சமையல் & விவசாயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல விளையும் பொருளை எவ்வாறு ருசியாக சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் அவ்வளவு முக்கியம். இதுவும் வாழ்நாள் முழுவதும் இயங்கக்கூடிய தொழில். நீங்கள் நகரங்களில் இருந்தால் தனி நபராக தங்கி வேலை பார்த்து வரும் இளைஞர்களிடம் பேசி அவர்களுக்கு மாத அடிப்படையில் சாப்பாடு கொடுத்து சம்பாதிக்கலாம். அல்லது கிராமங்களில் வசிப்பவராக இருந்தால் தற்பொழுது கிராமங்களில் நிறைய வயதானவர்கள் தனிமையில் வசிக்கிறார்கள். அவர்களிடம் சென்று குறைவான விலையில் தரமான உணவை அவர்களுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தும் தங்கள் தொழிலை செய்து கொள்ளலாம். இதுபோக தங்களுக்கு சமோசா போன்று ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் செய்ய தெரிந்தால் அதை வைத்தும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
 
8. சமையலுக்குத் தேவையான பொருட்களை தயார் செய்தல் & தற்பொழுது யாரும் மசாலா பொடி, மிளகுப்பொடி, சீரகததூள், வடகம் என வீட்டில் செய்வது குறைவு. ஆகவே உங்களுக்கு இதுபோன்ற பொடிகள் செய்ய தெரியும் என்றால் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
 
9. கம்ப்யூட்டர் & இதை வைத்துக்கொண்டு ஏராளமான தொழில்களை செய்து கொடுக்கலாம். தங்கள் திறமையை பயன்படுத்தி உங்கள் நேரத்தை மட்டுமே செலவிட்டு செய்யக்கூடிய தொழில் இது. உதாரணமாக வீடியோ எடிட்டிங், சோசியல் மீடியா மார்க்கெட்டிங், கிராபிக் டிசைன், அக்கவுண்ட்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகள்.
 
10. சேவைத் துறைகள் & பைக் சர்வீஸ், கார் சர்வீஸ், பான் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்று அரசு சம்பந்தமான டாக்குமெண்டுகள் எடுத்துக் கொடுப்பது, இன்சூரன்ஸ், இதுபோன்று சேவைத்துறையில் பல தொழில்கள் குவிந்து கிடக்கின்றன.
இதுபோன்று ஏகப்பட்ட தொழில்கள் தாங்கள் பிறந்த ஊரிலேயே இருந்து செய்வதற்கென இருக்கின்றன. முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும்.
எந்தவிதமான கைத்தொழிலும் தங்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. மூன்று அல்லது ஆறு மாத காலம் தங்களுக்குப் பிடித்த கைத்தொழிலை பழகிக் கொண்டு அதன் பிறகு கூட அதை முழு நேரமாகவோ அல்லது நீங்கள் ஐடி துறையில் வேலை பார்த்தால் கூட இதை பகுதி நேரமாக செய்வதன் மூலம் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம்.
 

ARUNACHALAM