பிரதமர் அலுவலக இணை செயலாளராக தமிழ் பெண் ஐஏஎஸ் அதிகாரி!

SOCIAL SHARE
Pin It

தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமுதா 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தவர்.



கருணாநிதியின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை ஏற்று கவனித்து கொண்ட அமுதா ஐஏஎஸ், அப்போது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் அமுதா பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.

அமுதா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாதமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த அமுதா 1994ஆம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

சிறு வயதில் கபடி வீராங்கனையாக இருந்த அமுதா ஐஏஎஸ், பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைதான். அவரது பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். அவரது தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி என ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார் அமுதா.

அமுதாவின் கணவர் ஷம்பு கல்லோலிகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.

திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அமுதா, தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, இது தொடர்பாக அங்கு நிர்வகிக்கும் பணி அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு, அங்கும் இங்கும் நடந்து அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து கொண்டிருந்த அமுதா பெரிதும் கவனிக்கப்பட்டார்.

ஐந்தே மணி நேரத்தில் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக கவனித்தார் அமுதா. சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணி, அவரது நேர்மை மற்றும் பணித்திறனுக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது. இவரது கணவர் ஷம்பு கல்லோலிகர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி. தற்போது, தமிழக அரசின் கைத்தறித் துறை செயலராக உள்ளார்.

அமுதாவிற்கு புகைப்படம் எடுப்பது, சைக்கிளில் நீண்ட துாரம் செல்வது பிடிக்கும். இளையராஜாவின் தீவிர ரசிகை. 'தினமும் அவர் பாடல்களை கேட்க, தனியே நேரம் ஒதுக்குவேன்' என, அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மதுரையில் பிறந்து, பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலராக உயர்ந்துள்ள அமுதாவிற்கு, அனைத்து தரப்பிலிருந்தும், பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் அலுவலகத்தில், நம்ம ஊர் பெண் என்று நாமும் பெருமைப்படுவோம்.
 

ARUNACHALAM