கயிறு தொழில் முனைவோர் திட்டம் (காயர் உத்யமி யோஜனா) COIR UDYAMI YOJANA

SOCIAL SHARE
Pin It

கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்:

  • கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
  • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
  • தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
  • நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
  • தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
  • தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது.
  • கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.

 தொழிலின் திட்ட மதிப்பு:

தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

 அரசு மூலதன மானியம்:

  • காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.
  • தொழில் முனைவோர் சொந்த முதலீடு
  • தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.
  • வங்கிக் கடன்
  • வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.

பயனாளிகளின் தகுதிகள்:

  • 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • காயர் உத்யமி யோஜனா விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
  • தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.
  • தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்
  • காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் விண்ணபிக்கலாம்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்:

காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பிற தகுதிகள்:

சாதி சான்றிதழ் – சாதி சார்ந்த தொழில் சிறப்பு பிரிவினற்கான கடன் வசதி பெரும் போது.

கடன்:

  • கட்டிடம் மற்றும் எந்திரங்களின் மதிப்பிற்கு மட்டும் தரப்படும்.
  • ஒரு சுழற்சி மூலதன கடன் பெறலாம். அது மொத்த திட்ட மதிப்பில் 25% மிகாமல் இருக்க வேண்டும். இந்த நடைமுறை மூலதனத்தை வங்கிகள் தொழில் ஆரம்ப காலங்களில் கொடுக்கலாம். இதற்கு எந்தவித மானியமும் கிடையாது. நடைமுறை மூலதனம் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
  • நிலம் கட்டிடம் பெற்று உள்ளவர்களுக்கு எந்திர மதிப்பே திட்டத்தின் மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கே இந்த திட்டம் செயல்படும்.
  • இந்த திட்டத்தை செயல்படுத்துவது கயிறு வாரியம். இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது மேலும் மாநிலங்களில் உள்ள கிளை நிலையங்களையும் அணுகலாம். மாவட்ட தொழில் மையங்களும் இதற்கு உதவிகள் செய்யும்.

கடன் பெற பயனாளிகள் வங்கியில் சென்று கடன் பெறுவதற்கான அனுமதி பெற்று இருத்தல் அவசியம். பயனாளிகள் குறிப்பிடும் வங்கிகளுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.

வங்கிகள் இந்த விண்ணப்பங்களை பெற்ற பின் 60 நாட்களுக்குள் வாரியத்திடம் இந்த திட்டத்தில் கடன் பெற தகுதியானவரா மற்றும் தகுதியற்ற நிலை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

வங்கிகள் திட்ட மதிப்பில் 95% கடன் அளிக்க வேண்டும். பயனாளிகள் 5% கொண்டு வர வேண்டும். இதற்கான வட்டி வங்கிகளின் திட்டங்களுக்கு உட்பட்டது. திரும்ப செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இந்த கடன் முழுவதும் மத்திய அரசின் கிரிடிட் கேரண்டி டிரஸ்ட் பண்ட் திட்டத்தில் வருவதால் வங்கிகள் எந்தவித சொத்து பிணையம் தனிநபர் உத்திரவாதம் கேட்க கூடாது.

முதலில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெறுதல் அவசியம். இப்பயிற்சியினை தொழில் ஆரம்பிக்கும் முன்போ அல்லது கடன் பெற்ற உடனையோ பெற்று கொள்ளலாம்.

பயனாளிகளின் விண்ணப்பங்களை கயிறு வாரியத்தின் அதிகாரி சரி பார்த்து அதை போர்டு உறுப்பினர்களுக்கு அளிப்பார். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு போர்டு சிபாரிசு செய்யும்.

 பயனாளிகள் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?

பயனாளிகள் கடன் உறுதி செய்யபட்ட உடன் வங்கிகள் பயனாளிகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத்தை கணக்கிட்டு வாரியத்திடம் அளிக்க வேண்டும். வாரியம் இந்த மானியத்தை எல்லா நடைமுறைகள் சரியாக இருப்பின் 30 நாட்களுக்குள் வங்கிக்கு பயனாளியின் மானியத் தொகையை அளிக்கும்.

வங்கிகள் மானியத் தொகையை பெற்று 30 நாட்களுக்குள் பயனாளிக்கு கடன் வழங்க வேண்டும். மானியங்கள் அதிகமாக பெறப்பட்டு இருந்தால் கடன் தொகை பெற்ற பின் அதிகமான மானியத் தொகையை திரும்ப தர வேண்டும்.

இந்த திட்டம் கடன் பெற்று 6 மாதத்திற்குள் முடிவு பெற்று இறுத்தல் அவசியம்.

பயனாளியிடம் விண்ணப்பங்கள் பெற்ற பின் இந்த விண்ணப்பங்களின் நிலை பற்றி வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். இ-டிராக்கிங் சிஸ்டம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கண்காணிக்கலாம்.

பயனாளிகள் தங்கள் பங்குத் தொகையினை 30 நாட்களுக்குள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களுடன் இணைக்கபட வேண்டிய இணைப்புகள்:

  • முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  • தொழில் துவங்க இருக்கும் இடத்தின் பத்திர நகல்
  • உங்களுக்கு கயிறு தொழில் தெரியும் என்பதற்கான அனுபவ சான்று
  • கயிறு வாரியத்திடம் பெற்ற பயிற்சி சான்று
  • எந்திரங்களின் விலைபட்டியல்
  • கட்டிடத்தின் வரைபடம் மற்றும் அதன் மதிப்பிடு
  • திட்ட அறிக்கை
  • எஸ்சி/ எஸ்.டி என்றால் அதற்கான ஜாதி சான்றிதல்
  • ஏதாவது வங்கியின் பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உங்கள் ஏரியாவை பொறுத்து தேர்வு செய்யவும். தமிழகத்தில் விண்ணபிக்க,

COIR BOARD REGIONAL OFFICE

DOOR NO.103, VALLALAR STREET

 VENKATESHA COLONY, POLLACHI-642001

TEL/FAX: 04259-222450.

இந்த திட்டத்தில் இப்போது ஆன்லைனிலும் விண்ணபிக்கலாம். அதற்கான இணையதள முகவரி http://www.coirservices.gov.in/frm_login.aspx

ARUNACHALAM