இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலம் (IPL Auction) பிப்ரவரியில் நடத்தப்படலாம். இதற்காக பி.சி.சி.ஐ (BCCI) பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டி பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள BCCI, ஐபிஎல் 14 வது சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் தனிப்பட்ட முறையில் சேர விரும்பினால், வாரியம் நேரடியாக மாநில சங்கங்களுடன் பேசும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு வீரரின் முகவர் (agent) அழைக்கப்பட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் உரிமையாளர்கள், தாங்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எந்த ஒப்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள் பிப்ரவரி 4 வரை ஐபிஎல் 2021 பிளேயர் ஒப்பந்தத்துடன் தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
ஐபிஎல் 2021 (IPL Auction 2021) க்கான ஏலம் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வீரரை ஏலத்தில் சேர்க்க விரும்பினால், அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்த பின்னர் தங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்று மாநில சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கும் பிசிசிஐ சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தகைய வீரர்கள் அனைவரும் மாநில சங்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் வீரர் குறைந்தது ஒரு முதல் வகுப்பு (First Class) அல்லது பட்டியல்-ஏ (List-A match) போட்டியில் விளையாடியிருக்க வேண்டும்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் (Cricket) இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் இந்த வாரியம் ஒரு நிபந்தனை விதித்துள்ளது, அதாவது அவர்கள் ஐ.பி.எல்லில் பங்கேற்க விரும்பினால், அவர்கள் மாநில சங்கங்களிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.













