டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை தோற்கடித்து பட்டத்தை வென்றார்.
அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்றது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.













