கடலுார் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா பட்டத்தில், 1.2 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
முன்பட்டம், பின்பட்டம் என இரண்டு போகமாக விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஏரி பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, பின்பட்டசம்பா நெற்பயிர்களில் அதிகளவில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் நடப்பாண்டு சம்பா மகசூல் பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆணைக்கொம்பன் ஈ பூச்சி கொசு வடிவில் இருக்கும். அதன் அடிவயிறு பளிச்சென சிவப்பாக காணப்படும். முட்டையில் இருந்து வெளிவரும் கால் இல்லாத பூச்சிகள் நெல் பயிர்களின் துார்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது.இந்ததாக்குதலால் நெல் குறுத்து வெங்காய குழல் அல்லது வெள்ளிக் குறுத்து போல் ஆகிவிடும். இந்த துார்களில் மேற்கொண்டு வளர்ச்சி ஏற்படாது என்பதால் நெல் கதிர்கள் உருவாகாது.நெற் கதிர்களில் 50 சதவீதம் வரை ஆணைக்கொம்பன் ஈதாக்கி சேதப்படுத்துகிறது. இதனால் மகசூல் பாதியாக குறையும் அபாயம் உள்ளது.இதனை கட்டுப்படுத்த பயிர்அறுவடை செய்த பின்னர் நிலத்தை உடனடியாக உழவு செய்ய வேண்டும்.வயல்களில் களைகள் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்கு பொறிகள் வைத்து, பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













