மார்கழி மாத சிறப்பு

SOCIAL SHARE
Pin It

சித்திரை விண்மீனில் முழுநிலா வரும் மாதம் சித்திரை  மாதம். விசாக  நட்சத்திரத்தில் வெண்ணிலா வரும்  மாதம் வைகாசி மாதம். இம்முறையில் பௌர்ணமியும் மிருக  சீர்ஷமும் சேர்ந்தது மார்கழி!வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்குக் குளிர்ந்த பனியைத்  தருகிற இம்மாதம் ஒரு ‘விழா மாதம்’ என்றால் அதில் வியப்பென்ன இருக்கிறது? இம்மார்கழி மாதம் அதிகாலையிலேயே நாம் எழுந்துவிடுகிறோம்! நாம்  மட்டுமல்ல!  தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்!

தை  முதல் நாள் முதல் உத்ராயணம் என்கிற பகல்பொழுது தேவர்களுக்கு! அப்படியானால் அதற்குமுன் வருகிற இம்மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம்!

விண்ணுலகினர் அதிகாலை எழுந்து ஆண்டவனை வழிபடும் அதே
நேரம் மண்ணுலகினரும் மகாதேவனை வழிபடும் மாதமே மார்கழி மாதம்!
இறைவனை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது!

கல்வியும், செல்வமும் உரிய பயன் பெறுகிற இம்மாதத்தின் மகிமையை எண்ணி எண்ணி மகிழ வேண்டும்! அதனால்தான் பரந்தாமன் தான் அருளிச்செய்த ‘ஸ்ரீபகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 35-வது ஸ்லோகத்தில் ‘மாஸானாம் மார்கசீர்ஷோஹம்’ என்கிறார்.  அதாவது ‘மாதங்களில் நான் மகிமைமிக்க மார்கழியாகத் திகழ்கிறேன்’ என்கிறார்.

ஆண்டாள் மார்கழி முழுவதும் பாட ஒரு மகத்தான  கீதம் தந்தார். அதுவே திருப்பாவை !
அத்திருப்பாவை தந்த திருப்பாவை போலவே மாணிக்கவாசகர் திருவெம்பாவை தந்தார்.
இந்த இரு ‘பாவை’களின் மூலமாகத்தான் நாம் பக்தி உலகத்தையே  பார்க்க முடிகிறது.

இம்மாதத்தைச் சிலபேர் பீடைமாதம் என ஏன் பேசுகின்றனர்?

‘தை  பிறந்தால் வழி பிறக்கும்!’ என அடுத்து வரும் மாதத்தை ஏன் அற்புதமாக வரவேற்கின்றனர்? உண்மையில் இம்மார்கழி மாதம் பீடு உடை மாதம்! பீடை மாதம் அன்று!

வீட்டுக் கொண்டாட்டங்களை விட்டுவிட்டு இறைவனையே சிக்கெனப் பற்றிக்கொள்வதால் தான். சீக்கிரத்தில் அதாவது  அடுத்த மாதத்தின்  ஆரம்பத்திலேயே நமக்கு வழி பிறக்கிறது. எனவே ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்பது அம்மாதத்திற்குரிய பெருமை அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்!

 

ARUNACHALAM