மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் பெண் ஒருவரின் கழுத்தில் ஒரு சிறுவனை ஏற்றி, 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்தது மட்டுமல்லாது, பெண் மெதுவாக நடக்கும்பட்சத்தில், அவரை குச்சியால் ஒருவர் அடிப்பது போன்ற வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, குணா பகுதி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்த ஆணுடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த கணவரின் உறவினர்கள், அப்பெண்ணை எச்சரித்து உள்ளனர். அதை பொருட்டாக மதிக்காத அந்த பெண், அதனை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணை பழிவாங்க நினைத்த கணவரின் குடும்பத்தினர், கணவரின் சகோதரரான சிறுவனை, அப்பெண்ணின் கழுத்தில் ஏற்றி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு நடக்க வைத்து உள்ளனர். பெண், மெதுவாக நடக்கும்பட்சத்தில் குச்சியால் அவரை அடிக்கவும் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக, குணா பகுதி போலீஸ், 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலர் இதுதொடர்பாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள், இனியும் நடைபெற கூடாது என்ற வகையிலான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.













