தொழில்நுட்பத்தில் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தாக்கம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களிலும் பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது.
மின்சார பல்புகளை எடுத்துக்கொண்டால் துவக்கத்தில், குண்டு பல்புகளாக இருந்தன, அதன்பின், டியூப் லைட், எல்.இ.டி., என மாற்றம் கண்டு, தற்போது, எமர்ஜென்சி எல்.இ.டி., என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது. ‘ஓரியன்ட் எலெக்ட்ரிக்’ நிறுவனம், அண்மையில் எமர்ஜென்சி எல்.இ.டி., பல்புகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து எரியும் என்பதுதான் இதன் சிறப்பு. இந்த பல்பில் பேட்டரி மற்றும் சார்ஜர் உள்ளது. அதிகபட்சம், நான்கு மணிநேரம் வரை இந்த பல்பை, மின்சாரம் இன்றி பயன்படுத்த முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், ஒரு நொடிகூட நம்மால் இருட்டைப் பார்க்க முடியாது. அவ்வளவு விரைவாக இந்த பல்பு செயல்படும். தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து ஹோல்டர்களிலும் இந்த பல்பை பொருத்த முடியும். மின்சாரம் மீண்டும் வந்ததும், பல்பு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.
‘இன்வெர்ட்டர்’ வாங்க கிட்டத்தட்ட, 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக, இத்தகைய பல்பை வாங்கி, மின் தடையை எளிதாக சமாளிக்கலாம். இனி ‘இன்வெர்ட்டர்’ தேவை குறைந்துவிடும்.
சாதாரண, எல்.இ.டி., பல்பை விட, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை இவற்றின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பல்புகளை மற்ற பல்புகளுடன் ஒப்பிடக் கூடாது. ‘இன்வெர்ட்டர்’ வாங்குவதுடன் ஒப்பீடு செய்வதே சரியாக இருக்கும். இந்த பல்புகளை தாராளமாக, 3 முதல், 5 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்த முடியும்.













