மேகன் மார்கல் ஓப்ரா வின்ப்ரேவுக்கு கொடுத்த பேட்டி தற்போது பிரிட்டன் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேகன் மார்க்கல் பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தையின் நிறத்தை வைத்து விமர்சித்ததாக பேட்டியில் தெரிவித்திருந்தது தற்போது பிரிட்டன் அரச குடும்பத்தினர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஹாரி-மேகன் ஆகிய இருவரையும் பேட்டிகண்ட பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா, முன்னதாக விளக்கம் ஒன்றை அளித்தார். இளவரசர் பிலிப், ராணி இரண்டாம் எலிசபெத் ஆகியோர் மேகன் மற்றும் அவரது மகன் ஆர்ச்சி குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
பிரிட்டன் அரச குடும்பத்தில் இணைந்த முதல் கருப்பின மருமகள் மேகன் மார்கல் ஆவர். பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு மற்றும் குடிமக்களால் பெரிதும் மதிக்கப்படும் அரச குடும்பத்தில், கருப்பின பெண்ணிடம் இனப்பாகுபாடு காட்டப்பட்டது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெரும் பேசுபொருள் ஆகியது. மேகன்-ஹாரி ஆகிய இருவரும் அரச குடும்பத்திலிருந்து பிரிந்ததற்கு இனப்பாகுபாடுதான் காரணமா என தற்போது ஊடகங்கள் விவாதித்து வருகின்றன.
புகைப்பட நிபுணர் நிசான் ஹாரிமேன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஓபரா வின்ப்ரே பேட்டியில் விரைவில் தங்களுக்கு ஓர் மகள் பிறக்க உள்ளார் என தெரிவித்து இருந்தார் மேகன் மார்கல். அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.













