பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான பெண்ணிடம், அவரது சட்ட உரிமைகள் பற்றி சொல்லப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு வழக்கு விசாரணையில் இந்த அறிவுறுத்தலை வழங்கிய உச்ச நீதிமன்றம், விதிவிலக்கான வழக்குகளில் 20 வாரங்களுக்கு அதிகமான கருவை கலைப்பதற்கு அனுமதி கோருவது தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
"ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருந்தால், அவருடைய சட்ட உரிமைகள் குறித்து அவருக்கு தெளிவாக கூறப்பட வேண்டும்" என்று தலைமை நீதிபதி எஸ் ஏ போப்டே தலைமையிலான நீதிமன்ற அமர்வு கூறியது. இந்திய கருத்தடை சட்டம் 1971 இன் பிரிவு 3, 20 வாரங்களுக்குப் பிறகு கர்ப்பத்தை கலைப்பதை தடை செய்கிறது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே. பிஜு, மருத்துவ காரணங்களில் அடிப்படையில் தனது கட்சிக்காரருக்கு கருக்கலைப்பு செய்வது குறித்து கோரிக்கை வைக்கவில்லை என்றார்.
14 வயது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டஅந்த சிறுமி 26 வார கர்ப்பத்தை சுமந்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற வழக்குகளில் காலதாமதமாய் கிடைக்கும் தீர்ப்பால் எந்தவித பயனும் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவ வாரியங்களை அமைப்பது தொடர்பான பிரச்சனையை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான நீதிமன்ற அமர்வு எடுத்துக் கொண்டது.
பாலியல் வல்லுறவு காரணமாக கருவுற்றப் பெண்களின் உரிமைகளுக்கும், இயல்பாக கருவுற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். இந்த விவகாரம் நீண்ட நாளாக பலரால் முன்னெடுக்கப்பட்டு, பேசு பொருளாக மாறியுள்ளது. நான்கு வாரங்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட 26 வார கருவை சுமந்துக் கொண்டிருக்கும் சிறுமி இப்போது கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரவில்லை என்றும் கூறினார். ஆனால் மாநிலங்களில் மருத்துவ வாரியங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது தான் என்று நீதிபதி தெரிவித்தார்.













